ஹஜ் முகவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு தயாரிக்கப்படும் ஹஜ் ஏற்பாடுகளுக்கான சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படும்.
அ-துவரையில் தற்போதுள்ள ஹஜ் நடை-முறைகளே முன்னெடுக்கப்படும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஹஜ் முகவர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஹஜ்கோட்டா பகிரும் தற்போதைய முறையை அனைவரும் அங்கீகரித்திருக்கிறார்கள். அண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியின்போது முஸ்லிம் சமய விவகார அமைச்சர்களாக நியமனம் பெற்ற ஹிஸ்புல்லாஹ் மற்றும் பெளசி என்போர் ஹஜ் ஏற்பாடுகளில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. தற்போது நடைமுறையிலுள்ள ஏற்பாடுகளே முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளமை இதனை உறுதிப்படுத்துகிறது.
ஹஜ் ஏற்பாடுகளில் காலத்துக்கேற்ற மாற்றங்கள் தேவை. மாற்றங்கள் ஹஜ் பயணிகளினதும், ஹஜ் முகவர்களினதும் நலன் கருதியதாகவே அமையும். அதனால் இது குறித்து எவரும் அச்சமடையத் தேவையில்லை.
இவ்வருடம் நியமனம் பெற்றுள்ள 92 ஹஜ் முகவர்களுக்கும் தலா 10 ஹஜ் கோட்டா வீதம் வழங்கப்படுவதுடன் அவர்கள் நேர்முகப் பரீட்சையில் பெற்றுக் கொண்டுள்ள புள்ளிகளுக்கு அமைவாக ஹஜ் கோட்டா பகிரப்படும்.
ஹஜ் கடமைக்காக விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் அக்கடமையை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் ஹஜ் கோட்டாவை அதிகரித்துப் பெற்றுக் கொள்வதற்காக சவூதி ஹஜ் அமைச்சரிடம் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்படும். அதற்கான அழைப்பும் எமக்குக் கிடைத்துள்ளது. இவ்வருடத்தின் ஹஜ் கட்டணங்கள் எவ்வாறு அமையுமெனக் கூற முடியாது. ஏனென்றால் இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்து அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது. சவூதியில் வரி வீதங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஹஜ் முகவர்கள் ஹஜ் பயணிகளின் நலன் கருதியதாகவே தமது சேவைகளைத் தொடர வேண்டும். உறுதியளிக்கப்பட்ட சேவைகளை வழங்க வேண்டும் என்றார்.
நிகழ்வில் அரச ஹஜ் குழுவின் தலைவர் எம்.ரி.சியாத் தலைமையில் குழுவின் அங்கத்தவர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
-Vidivelli