அரசியலமைப்பே தெரியாத ஜனாதிபதி இனியும் அதிகாரத்தில் இருக்க வேண்டுமா?
பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்கிறது ம.வி.மு.
அரசியலமைப்பே தெரியாத ஜனாதிபதி இனியும் அந்த அதிகாரத்தில் இருக்க வேண்டுமா என்பதை பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும். இந்த அரசாங்கத்திற்கு முதுகெலும்புள்ளதெனில் அரசியலமைப்பினை மீறி அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்ட அனைவரையும் தண்டித்துக்காட்டுங்கள் என மக்கள் விடுதலை முன்னணி சபையில் சவால் விடுத்தது.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இரசாயன ஆயுதங்கள் சமவாய திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தின்போது உரையாற்றிய ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டார். அவர் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,
அமெரிக்க பாதுகாப்பு படையினர் இலங்கையில் நினைத்த நேரத்தில் தமது இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க எந்த தடைகளுமின்றி அனுமதி வழங்கியது அப்போதைய இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக் ஷவேயாகும். அமெரிக்க பிரஜையான அவரும் அப்போதைய அமெரிக்காவின் இலங்கை தூதுவர் ரொபேர்ட் ஒ பிளேக் இருவரும் செய்துகொண்ட “ஹக்ஸா” உடன்படிக்கை மூலமாகவே இதனை செய்தனர். அன்று மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் அமைச்சரவையில் இருந்தவர்கள் அப்போது வாய் மூடிக்கொண்டு இருந்துவிட்டு இப்போது உடன்படிக்கை குறித்து வாய்கிழியப் பேசுகின்றனர். தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் இவர்கள் நேரத்துக்கு நேரம் மாறுகின்றனர். தேசப்பற்றாளர் என்றால் எந்த நேரமும் ஒரே கொள்கையில் இருக்க வேண்டும், காலத்துக்கு காலம் மாறக் கூடாது எனக் குறிப்பிட்ட போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய வாசுதேவ நாணயகார எம்.பி., அப்போதும் நான் இந்த உடன்படிக்கையை எதிர்த்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் கடிதம் மூலம் எனது எதிர்ப்பை தெரிவித்தேன். மஹிந்த ராஜபக் ஷவும் இதனை அனுமதிக்க போவதில்லை இது வெறும் கடதாசி மட்டுமேயெனக் கூறினார் எனக் குறிப்பிட்டார்.
இதன்போது மீண்டும் கருத்து தெரிவித்த நலிந்த ஜயதிஸ்ஸ, அப்படியாயின் அமைச்சரவைக்கும், ஜனாதிபதிக்கும் தெரியாது அவரது சகோதரர் செய்துகொண்ட கள்ள உடன்படிக்கை தான் கடந்த 14 ஆண்டுகளாக இலங்கையில் நடைமுறையில் இருந்துள்ளது. ஆகவே, இவ்வாறான திருட்டு உடன்படிக்கை ஒன்றினை நடைமுறைப்படுத்தியமை குறித்து எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மஹிந்த ராஜபக் ஷ சபையில் விளக்கமளிக்க வேண்டும். அதேபோல் இரசாயன ஆயுதங்கள் குறித்த இந்த விவாதத்தின்போது சர்வதேச நாடுகளிலிருந்து வரும் இரசாயன ஆயுதங்கள் குறித்து பேசுகின்றனர். ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளாக இலங்கையில் மிகவும் மோசமான இரசாயன ஆயுதமொன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதுதான் நிறைவேற்று அதிகாரம். கடந்த நாற்பது ஆண்டுகால நிறைவேற்று அதிகாரத்தை நீக்கவே மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டு ஜனாதிபதியானார். ஆனால் நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவர் செய்யும் நடவடிக்கைகள் கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிந்துவிட்டன.
நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாகக் கூறிய போதிலும் இப்போதும் அவர் நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றவே முயற்சித்து வருகின்றார். அதற்காக அவரை கொலை செய்வதாக கூறிய அணியுடனேயே அவர் கூட்டணியையும் அமைத்துக்கொண்டுள்ளார். அவருடன் இருக்கும் சூழ்ச்சிக் கும்பல்தான் இவை அனைத்துக்குமே காரணமாகும்.
அரசியல் யாப்பு தெரியாத ஜனாதிபதி ஒருவரை தொடர்ந்தும் அந்த அதிகாரத்தில் வைத்துகொள்ள வேண்டுமா என்பதை பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும்.
அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது என்பதை உயர் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. ஆகவே, அரசியலமைப்பினை மீறி அரசியல் சூழ்ச்சி செய்த அனைவரையும் அரசாங்கம் தண்டிக்க வேண்டும். முதுகெலும்புள்ள அரசாங்கம் என்றால் முதலில் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli