நேர்காணல் : பஸ்னா பாயிஸ், மடவளை
கண்டி, மடவளை மதீனா கிரிக்கட் அணியின் முன்னாள் வலது கை வேகப் பந்து வீச்சாளர் சிராஸ் ஷஹாப், அயர்லாந்து அணிக்கெதிரான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் மூலம் முதல் தடவையாக இலங்கை ‘ஏ’ அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
BRC கிரிக்கட் கழகத்திற்காக தற்போது விளையாடும் சிராஸ் ஷஹாப், இந்த பருவ காலத்திற்கான இலங்கை கிரிக்கட் சபையின் மேஜர் எமர்ஜிங் லீக் முதல் தர கிரிக்கட் தொடரில் இதுவரையில் 4 போட்டிகளில் பங்கேற்று 17 விக்கட்டுக்களை கைப்பற்றியிருக்கிறார்.இதேவேளை கடந்த ஆண்டு நடைபெற்ற வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான ரி20 கிரிக்கட் தொடரில் ஜோன் கீல்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்த இவர், அவற்றில் 5 விக்கட்டுகளை தனதாக்கிக் கொண்டார் .
அதே நேரம் கடந்த ஆண்டு 23 வயதுக்கு கீழ்ப்பட்ட மாகாண அணிகளுக்கிடையிலான கிரிக்கட் தொடரில் மத்திய மாகாண அணிக்காக விளையாடி 26 விக்கட்டுக்களுடன் குறித்த தொடரில் அதிக விக்கட்டுக்களை கைப்பற்றிய வீரராகவும் சாதனையை நிலை நாட்டினார். இப் பின்னணியிலேயே இவர் தற்போது இலங்கை ‘ஏ’ அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். சிராஸ் ஷஹாபின் இந்த அடைவு குறித்து ‘விடிவெள்ளி’ அவரை சந்தித்துப் பேசியது.
Q உங்களைப் பற்றி சுருக்கமாக அறிமுகப்படுத்த முடியுமா?
13.02.1995 இல் மடவளையில் பிறந்தேன். ஆரம்பம் முதல் உயர்கல்வி வரை மடவளை மதீனாவில் தான் கல்வி கற்றேன். ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவன். எனது குடும்பத்தைப் பொறுத்தமட்டில் தந்தை எம்.எச். ஷஹாப், தாய் ஜே.யு ஸரீகா. ஒரு சகோதரனும் சகோதரியும் இருக்கிறார்கள்.
Q கிரிக்கட் விளையாட்டில் ஈடுபாடு எவ்வாறு வந்தது?
எனது சிறுவயதிலேயே நான் விளையாட்டு என்ற ரீதியில் முதலில் விளையாடப் பழகியது கிரிக்கட் தான். அதுவும் நண்பர்களுடன் பொழுது போக்கிற்காக விளையாடினேன். பாடசாலையில் கற்கும் காலங்களில் பாடசாலை அணியில் எவ்வாறாயினும் இணைய வேண்டும் என்பதற்காக வெகுவாக கஷ்டப்பட்டேன். தீவிர முயற்சிகளின் மூலமும் பயிற்சிகளின் மூலமும் அந்த வாய்ப்பு கிடைத்தது . எனது பயணத்திற்கான களமும் கிடைத்தது. பங்குபற்றிய ஒவ்வொரு போட்டியும் என்னுள் ஆர்வத்தைத் தூண்டியது. இன்னும் முயற்சிக்க வேண்டும், என்னால் இன்னும் முடியும் என்ற எண்ணத்தை என்னுள் தோற்றுவித்தது. அந்த வகையில்தான் இப்போது ஏ அணியில் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
Q இலங்கையின் தேசிய கிரிக்கட் ‘ஏ’ அணியில் இடம்பிடித்திருப்பது பற்றி?
எத்தனையோ போட்டிகளில் இதற்கு முன் கலந்துகொண்டு விளையாடியிருக்கிறேன். எனினும் ஏ அணி மூலம் இப்போட்டியில் பங்கு பற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருகின்ற அதே வேளை ஒரு வகையான பதற்றத்தையும் உணர்கின்றேன். இந்த செய்தியை நான் தெரிந்து கொண்ட போது அடைந்த மகிழ்ச்சியை விட பெற்றோரிடம் அதனைப் பகிரும் போது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இதற்காக எனக்கு உதவிய அனைவரையும் இந்த இடத்தில் நன்றியுடன் நினைவு கூருகிறேன்.
ஆனாலும் இதனை ஒரு சாதனை என்றோ இதுதான் எனது இலக்கு என்றோ கூற விரும்பவில்லை. இதனை எனது கிரிக்கட் வாழ்க்கையின் ஆரம்பம் என்றே கருதுகிறேன்.
Q கிரிக்கட் துறையில் தேசிய அணி வரை மேலும் முன்னேறுவதில் உள்ள சவால்களாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
கிரிக்கட் விளையாட்டு என்பதே சவால்களுடன் கூடிய விளையாட்டு தான். தேசிய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இலங்கையின் தேசிய ‘ஏ’ கிரிக்கட் அணியில் விளையாட கிடைத்திருக்கும் வாய்ப்பு எனது திறமையை வெளிப்படுத்த கிடைத்துள்ள மிகச் சிறந்த சந்தர்ப்பமாகும். அந்த வகையிலும் எல்லா சவால்களையும் முறியடித்து தேசிய அணியில் இடம்பிடிப்பேன். இன்ஷா அல்லாஹ்.
Q இத்துறையில் பயணிக்கும் போது எப்போதாவது மனம் சோர்ந்ததுண்டா?
நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. பாடசாலையில் கற்கும் காலங்களில் கிரிக்கட் பயிற்சிகளில் காட்டிய ஆர்வத்தை கல்வி கற்பதில் செலுத்த முடியவில்லை. ஒரு போராட்டத்துடன் தான் இரண்டையும் எதிர் கொண்டேன். சில போட்டிகளில் விளையாடும்போது தலை குனிய வேண்டிய நிலைமைகளும் ஏற்பட்டிருக்கின்றன. அச்சந்தர்ப்பங்களில் பயிற்றுவிப்பாளர்களின் ஊக்குவிப்புக்களே எனக்கு பக்க பலமாகவும் உந்துசக்தியாகவும் அமைந்தன.
நான் ஒரு வேகப் பந்து வீச்சாளர் என்ற வகையில் உடல் சார்ந்த உபாதைகளுக்கும் உள்ளாகியிருக்கிறேன். அச் சந்தர்ப்பங்களில் சற்று மனம் தளர்ந்து விடுவதுமுண்டு. பின்னர் நானே மனதை திடப்படுத்திக் கொண்டு போட்டிகளில் களமிறங்குவேன். தற்போது வெற்றியையும் தோல்வியையும் ஏற்றுக் கொண்டு முன்னேக்கிப் பயணிக்கின்ற அளவுக்கு நான் பக்குவமடைந்துள்ளேன் என நினைக்கிறேன்.
Q கிரிக்கெட் துறையில் நீங்கள் முன்மாதிரியாக கருதும் வீரர் யார்?
நுவன் குலசேகர
Q நுவன் குலசேகரவை நீங்கள் முன்மாதிரியாக கருதுவதற்கான காரணம்?
எனக்கு சிறுவயதில் இருந்தே பந்து வீச்சில் ஓர் ஆர்வம் இருந்தது. அவரைப் பின்பற்றி பந்து வீசவும் கற்றுக்கொண்டேன். தற்போது அவரைப் பின்பற்றி பந்து வீசுவது இலகுவாக உள்ளது. நம் நாட்டு வீரர் என்றவகையில் நான் பங்குபற்றிய கழகத்தின் மூலம் அவருடன் இணைந்து விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன்போது அவரது அனுபவங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.அறிவுரைகளையும் வழங்கினார்.வரும் காலத்தில் நுவன் குலசேகர போன்று ஒரு வேகப் பந்து வீச்சாளராக தேசிய அணியில் இடம் பிடிப்பதே எனது கனவாகும்.
Q உங்களது கிரிக்கெட் பயணத்தில் மறக்க முடியாத நாட்கள் பற்றி?
நான் தேசிய கிரிக்கட் ‘ஏ’ அணியில் போட்டியிடுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளேன் என்ற செய்தியை அறிந்து கொண்ட அன்றைய நாள். மற்றும் Mobital 36 th OBSERVER school boy cricketer of the year -2014 இல் நான் முதலிடம் பெற்றுக் கொண்டபோது அந்த வெற்றியை எனது முழு ஊரும் சேர்ந்து கொண்டாடிய தினம். இவ்விரு தினங்களிலும் நான் அடைந்த மகிழ்ச்சி எல்லையற்றது. நிச்சயமாக இவ்விரு தினங்களையும் என் வாழ்நாளில் மறக்க முடியாது.
Q சிறுபான்மை இனத்தவர்கள் தேசிய அணியில் இடம்பிடிப்பது இலகுவானதல்ல. இன ரீதியான பாராபட்சங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற ஒரு பொதுவான அபிப்பிராயம் நிலவுகிறது. உங்களது அனுபவத்தில் இதனை எப்படிப் பார்க்கிறீர்கள் ?
நிச்சயமாக இல்லை. இதனை முற்றாக மறுக்கிறேன். பொதுவாகவே சகலரும் என்னிடம் கேட்கும் கேள்வியும் இது தான். இது வரை காலமும் நான் பங்குபற்றிய போட்டிகளாகட்டும், பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளார்களாகட்டும் என்னிடம் எவ்வித பாகுபாட்டையும் காட்டியதில்லை. என்னைப் பொறுத்தமட்டில் என்னால் முடியுமான முயற்சிகளைச் செய்து கொண்டுதான் இருக்கின்றேன். எனது திறமையை வெளிப்படுத்தும் சந்தர்பத்தில் எனக்கான இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
Q உங்கள் எதிர்கால இலட்சியம் என்ன?
ஒரு வேகப் பந்து வீச்சாளராக இலங்கை தேசிய அணியில் இடம்பெற்று தாய் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை பெறவேண்டும். அதன் மூலம் எனது நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
Q இச் சந்தர்ப்பத்தில் யாருக்காவது நன்றி செலுத்த வேண்டும் என நினைக்கின்றீரா?
நிச்சயமாக. முதற்கண் இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். எனது பெற்றோர், என்னை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்கள், எனது குடும்பத்தினர் ,எனது நண்பர்கள் , மதீனாவின் ஆசிரியர்கள், மேலும் எனது ஊர் மக்கள் சகலருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூற வேண்டும்.
உண்மையாக கூறுவதானால் எனது வெற்றியின் பக்க பலமாக இருந்தவர்களுக்கு நன்றி செலுத்துவற்கான சந்தர்ப்பம் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நேர்காணல் ஊடாக அவர்களுக்கு எனது நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.
-Vidivelli