லசந்த கொல்லப்பட்டு 10 வருடங்கள்: கொலையை மறைக்க 4 அப்பாவிகள் கொலை

இதுதான் தேசத்தின் நிலை என்கிறார் லசந்தவின் சகோதரர் லால்

0 608

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு  நேற்றுடன் 10 வருடங்கள் நிறைவடையும் நிலையில், பொரளை கனத்தையில் அவரை நினைவுகூரும் விஷேட அஞ்சலி வைபவம் இடம்பெற்றது.  லசந்தவின் கல்லறைக்கு அருகே இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வானது லசந்த குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.

நேற்றுக் காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இந்த அஞ்சலி  நிகழ்வில், லசந்தவின் சகோதரரான லால் விக்ரமதுங்க, அவரது மகள் ரைஸா உள்ளிட்டோரும் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, மங்கள சமரவீர, எரான் விக்ரமரத்ன உள்ளிட்டோரும்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உட்பட பல உள்நாட்டு வெளிநாட்டுப் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது லசந்தவின் கல்லறையில் கடந்த 2015 இற்கு முன்னர் கொல்லப்பட்ட ஏனைய பல ஊடகவியலாளர்களின் பெயர் மற்றும் நினைவு தினத்தை காட்டும் குறிப்புகள் வைக்கப்பட்டிருந்தன.  இதன்போது முதலில் லசந்த விக்ரமதுங்கவின் கல்லறைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்ப்ட்ட நிலையில் பின்னர் அங்கு லசந்தவின் சகோதரரான லால் விக்ரமதுங்கவும் அவரது மகள் ரைஸாவும் கருத்து வெளியிட்டனர்.  லால் விக்ரமதுங்க கருத்து தெரிவிக்கையில்,

“இக்கொலைக்கு ஒரு தசாப்தமாகிறது. எனினும் கொலையாளிகள் தொடர்பில் எந்த முடிவும் இல்லை. யாரும் அது தொடர்பில் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.  இது உண்மை. லசந்த வீணாக இறக்கவில்லை.  அவரது மரணம் இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது.  சுதந்திர நீதித்துறை மற்றும் ஆணைக்குழுக்களின் கைகளில் இதற்கு அப்பாலுள்ள விடயங்கள் காணப்படுகின்றன.

லசந்தவின் கொலையை மறைப்பதற்காக நான்கு அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். சிரேஷ்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் சாட்சிகளை மறைத்தும் அழித்தும் உள்ளனர்.  இதுதான் எமது தேசத்தின் நிலை.  நியாயம் உள்ளிட்டவை வழக்கு விசாரணைகள் ஊடாகவே கிடைக்குமென நம்புகின்றோம்.

யார் லசந்த என கேட்பதன் ஊடாக எதனை எதிர்பார்க்கின்றனர். லசந்த யார் என்பதை உலகமே அறியும்.  அவரது எழுத்துக்கள் நிரூபணமானவை.  அவரது நினைவுகள் எம்மில் எப்போதும் இருக்கும் என்றார்.

இதன்போது அங்கு பேசிய லால் விக்ரமதுங்கவின் மகள் ரைஸா,

இலங்கையின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரே ஊடகவியலாளர் லசந்த மட்டுமல்ல.  இலங்கையின் இருண்ட காலப்பகுதியில் வடக்கில் பல ஊடகவியலாளர்களுக்கு லசந்தவின் நிலைமையே ஏற்பட்டது.  அவர்களையும் நாம் நினைவு கூருகின்றோம். லசந்த அந்த செய்தியை அவர்களுக்கு எத்திவைப்பார்  என்றார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க வீட்டிலிருந்து அலுவலகம் நோக்கி செல்லும்போது அடையாளம் தெரியாதோரால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.