மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சி தலைவர்
சபையில் மீண்டும் உறுதிப்படுத்தினார் சபாநாயகர்; சம்பந்தனின் கோரிக்கை நிராகரிப்பு
மஹிந்த ராஜபக் ஷ எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டமை மற்றும் அவரது பாராளுமன்ற உறுப்புரிமை குறித்து தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டுமென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தத்துடன் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக் ஷ நியமிக்கப்பட்டதை சபாநாயகர் கரு ஜயசூரிய மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
2019 ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இதன்போது பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்களுக்கான மாநாட்டில் பங்கேற்க சபாநாயகர் கருஜயசூரிய சர்வதேச விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அவரால் விடுக்கப்பட்ட அறிவிப்பை பிரதி சபாநாயகர் சபையில் வாசித்தபோதே அதில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ என்பது சபாநாயகரால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததுடன், தெரிவுக்குழுவின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பில் சபாநாயகர் தெரிவித்திருந்ததாவது,
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் டிசம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்திருந்ததுடன் அதே கோரிக்கையை எம்.பி.க்கள் சிலரும் முன்வைத்திருந்தனர். அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவிலிருந்து விலகும் அல்லது விலக்கப்படும் தினத்திலிருந்து ஒருமாத காலத்தில் அவரின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவி ரத்தாவதாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பாராளுமன்றத்திற்கு அறிவித்திருந்த கடிதத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வர்த்தமானியில் வெளியிட்ட சகல எம்.பி.க்களும் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் எம்.பி.க்களாக அங்கம் வகிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நான் ஆழமாக ஆராய்ந்தேன். சட்ட நடவடிக்கை மூலம் எம்.பி. பதவி ரத்தாகுதல், எம்.பி. ஒருவரின் கட்சி உறுப்புரிமை இழப்பு அல்லது பதவி விலகல் என்பன அரசியலமைப்பிற்கும் நிலையியற் கட்டளைக்கும் அமைய எனது அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டதாகும். இவை தொடர்பில் முடிவு வழங்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருப்பதாக நான் கருதுகிறேன். ஆகவே சில எம்.பி.க்கள் இந்தப் பிரச்சினை தொடர்பாக ஆராய விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரியிருந்தார்கள். இது தொடர்பாகவும் கவனம் செலுத்தினேன். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மை எம்.பி.க்கள் கொண்ட குழுவினால் சிறுபான்மையாக உள்ள குழுவில் உள்ளக பிரச்சினையை ஆராய்வது தொடர்பான யோசனையை ஏற்பது பாராளுமன்ற வழமைக்கும் ஜனநாயக அடிப்படைகளுக்கும் முரணானது என அறிவிக்க விரும்புகிறேன். ஆகவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்த ராஜபக் ஷவை நியமித்தமை சரியான தெரிவு எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.
-Vidivelli