இந்த வருடத்தில் தேர்தலொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில், ‘இந்த வருடம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசாங்கமொன்றினை நிறுவிக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’.
தற்போது சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தில் உருவாகியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுயாதீன தொலைக்காட்சி நிறுவன வளாகத்திற்குள் கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டமை தொடர்பாக விஷேட விசாரணையொன்று நடாத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
அரச நிறுவனங்களில் தற்போது அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறுவதாக கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டனர். இது தொடர்பான விபரங்களை கோரிய ஜனாதிபதி அவ்வாறான அரசியல் பழிவாங்கல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அறிக்கைகள் விடும் போதும், கருத்துகள் தெரிவிக்கும் போதும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் எதிர் தரப்புக்கு வாய்ப்பு ஏற்படும் வகையிலான கருத்துகள் தெரிவிக்கக் கூடாதென கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
-Vidivelli