நாட்டில் உருவான அரசியல் ஸ்திரமற்ற நிலைமை காரணமாக புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்கும் பணிகள் செயலற்றிருந்தன. இந்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்குவது தொடர்பில் அரசியலமைப்பு சபையொன்று 2016 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி நியமிக்கப்பட்டது. இந்த அரசியமைப்புச் சபையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அரசியலமைப்பு சபையினால் வழிநடத்தல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. பிரதமரின் தலைமையில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் அங்கம் வகிக்கின்றனர். பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒருவர் வீதம் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த வழிநடத்தல் குழு இதுவரை 70 தடவைகள் ஒன்று கூடியுள்ளது. முதலாவது அறிக்கையொன்றினையும் தயாரித்துள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் அரசியலமைப்பு சபை 5 தினங்கள் கலந்துரையாடியது, விவாதித்தது. அரசியலமைப்பு சபையின் தீர்மானத்துக்கு அமைய விவாதத்தின் போது மேலெழுந்த கருத்துக்கள் மற்றும், நிபுணர்களின் ஆலோசனைகள் உள்ளடக்கி இரண்டாவது அறிக்கை அரசியலமைப்பு சட்டமூல வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையே அரசியலமைப்பு சபைக்கு அதாவது பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்பு புதிய அரசியலமைப்பை மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தங்கள் கட்சியுடன் இது தொடர்பில் கலந்துரையாடவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியலமைப்பு 19 தடவைகள் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 19 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டு 2 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் 20 ஆவது திருத்தம் பற்றியும் இப்போது பேசப்படுகிறது. இந்நிலையிலேயே ஒரு மாதத்துக்குள் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்ளவுள்ளதாக சுமந்திரன் எம்.பி.தெரிவித்துள்ளார். அரசியலமைப்பொன்றினை உருவாக்குவது தேர்தல் துண்டுப் பிரசுரம் தயாரிப்பது போன்று இலேசான காரியமல்ல. அது மிகவும் ஆழமான ஒரு பணியாகும்.
புதிய அரசியலமைப்பு சமஷ்டி ஆட்சியை வழங்கும் ஏற்பாடாகும் என தெற்கின் சில அரசியல்வாதிகள் தெரிவிக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளது என்றும் குற்றம் சுமத்தப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எந்த உடன் படிக்கையும் செய்து கொள்ளவில்லை என ஐக்கிய தேசிய கட்சி கூறுகிறது.
புதிய அரசியலமைப்பில் எந்தக் காரணம் கொண்டும் நாடு துண்டாடப்படுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்துக்களை அறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்படி பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீண்டும் இணைப்பதே புதிய அரசியலமைப்பின் இலக்கு என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தொடர்ந்து கூறிவருகிறார்.
யார் என்ன கருத்துக்களைக் கூறினாலும் நாட்டிற்கு காலத்துக்கேற்ற புதிய அரசியலமைப்பொன்று அவசியமாகும். ஆனால் அந்த அரசியலமைப்பு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். அது இந்த நாட்டில் நீண்ட காலமாக நிலவும் இனப்பிரச்சினைக்கும் நிறைவேற்று அதிகார முரண்பாடுகளுக்கும் தீர்வைக் கொண்டு வருவதாக அமைய வேண்டும்.
-Vidivelli