டசின்கணக்கான ரோஹிங்ய மக்கள் சவூதி அரேபிய அரசாங்கத்தினால் பங்களாதேஷுக்கு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
ஜித்தாவிலுள்ள ஷுமைசி தடுப்பு முகாமிலிருந்து நாடுகடத்தப்படுவதற்காக கைவிலங்கிடப்பட்ட ஆண்கள் வரிசையில் நிற்கும் காணொலியொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மிடில் ஈஸ்ட் ஐ’ இணையத் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பங்களாதேஷுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரோஹிங்ய ஆண்களுக்கு கைவிலங்கிடப்பட்டதாக அந்த இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய தடுப்பு முகாம்களில் சுமார் ஆறு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு நாடு கடத்தப்பட்டு வருவதாக காணொலியைப் பதிவு செய்த ரோஹிங்ய நபர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களாக நான் இங்கு இருக்கின்றேன். தற்போது என்னை பங்களாதேஷுக்கு அனுப்புகின்றார்கள். எனக்காக பிரார்த்தியுங்கள் என காணொலியில் காணப்பட்ட நபரொருவர் தெரிவித்தார்.
மிடில் ஈஸ்ட் ஐ இணையத் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மற்றுமொரு காணொலியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பலவந்த வெளியேற்றத்திற்கு பின்னணியாக அமைந்த காரணங்கள் விபரிக்கப்பட்டிருந்தன.
நள்ளிரவு பன்னிரெண்டு மணியளவில் எமது சிறைக் கூடத்தினுள் அவர்கள் வந்தார்கள். பங்களாதேஷுக்கு செல்வதற்கு எமது பொதிகளை தயார் செய்யுமாறு அவர்கள் கூறினர் என தனது பெயரை வெளியிட விரும்பாத ரோஹிங்ய கைதியொருவர் தெரிவித்தார்.
எனக்கு தற்போது கைவிலங்கிடப்பட்டுள்ளது. எனது நாடல்லாத ஒரு நாட்டுக்கு நான் அனுப்பி வைக்கப்படுகின்றேன். நான் ரோஹிங்யா, எனது நாடு பங்களாதேஷ் அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
புனித யாத்திரைக்கான விசாவிலேயே பெரும்பாலானவர்கள் சவூதி ஆரேபியாவுக்கு வந்துள்ளனர், எனினும் தொழில் புரிவதற்காக அனுமதித்த காலத்தை விட அதிக காலம் தங்கியிருந்துள்ளனர்.
நாம் வாழ்நாள் முழுவதும் சவூதி அரேபியாவிலேயே வாழ்ந்திருக்க முடியும். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததை சவூதி பொலிஸார் கண்டுபிடித்ததால் நாம் தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டோம் என ஷுமைசி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சில கைதிகள் தெரிவித்தனர்.
ராக்கைன் மாநிலத்தில் வன்முறைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து பெரும்பாலான ரோஹிங்ய மக்கள் நல்ல வாழ்க்கையினைத் தேடி சவூதி அரேபியாவினுள் நுழைந்ததாக ஜேர்மனியின் பிரங்போர்டிலுள்ள ரோஹிங்ய செயற்பாட்டாளரான நே சான் ல்வின் தெரிவித்தார்.
அப்போதிருந்து பங்களாதேஷ் அகதி முகாம்களில் உள்ளவர்கள் தமது குடும்பத்தினருக்கு ஆதரவாக இருந்தனர். அவர்கள் டாக்காவைச் சென்றடைந்ததும், அவர்கள் அகதிகளாக மாறுவதோடு கொக்ஸ் பஸாரிலுள்ள அகதி முகாம்களுக்கு கொண்டு சென்று விடப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
ரோஹிங்ய அடையாளம் ஏற்றுக் கொள்ளப்படாததால் அவர்கள் சவூதி அரேபியாவுக்கு வந்தபோது இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பங்களாதேஷ் நாட்டவர்கள், நேபாள நாட்டவர்கள் என்ற அடிப்படையிலேயே விரல் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் நே சான் ல்வின் விபரித்தார்.
சவூதி அரேபிய சட்டத்தின் பிரகாரம், வேறொரு நாட்டுப் பிரஜையாகப் பதிவு செய்யப்படும் பட்சத்தில் சட்டரீதியான உதவி என்ற வகையில் எம்மால் எவ்வித உதவிகளையும் செய்ய முடியாது என நே சான் ல்வின் தெரிவித்தார்.
சவூதி அரேபிய அதிகாரிகள் நான்கு நாடுகளின் தூதரக அதிகாரிகளை அழைத்து வந்தனர். அவர்களுள் மூன்று நாடுகளின் தூதரக அதிகாரிகள் பொறுப்பேற்க மறுத்த அதேவேளை பங்களாதேஷ் அதிகாரி மாத்திரமே ஏற்றுக்கொள்ள இணக்கம் தெரிவித்தார்.
மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்ய சிறுபான்மை முஸ்லிம்களே உலகில் மிகவும் குற்றமிழைக்கப்பட்டவர்கள் என விபரிக்கப்படுகின்றது.
ஆயுதக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு மியன்மாரின் மேற்கு மாநிலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மியன்மார் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதல் நடவடிக்கை காரணமாக சுமார் ஒரு மில்லியன் மக்கள் பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்தனர்.
பல தசாப்தங்களாக மியன்மாரில் ரோஹிங்ய மக்களுக்கு கெதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. 1962 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த இராணுவ அரசாங்கம் 1982 ஆம் ஆண்டு ரோஹிங்ய மக்களின் குடியுரிமையினைப் பறித்தது.
2012 ஆம் ஆண்டு தொடக்கம் ராக்கைன் பொளத்தர்களுக்கும் ரோஹிங்யர்களுக்கும் இடையே ஏற்பட்ட கொலைவெறி வன்முறைகளைத் தொடர்ந்து இலட்சக்கணக்கான சிறுபான்மை ரோஹிங்ய மக்கள் அழுக்கு நிறைந்த தடுப்பு முகாம்களுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
பல தசாப்தங்களாக அவர்கள் திறந்தவெளி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர் எனத் தெரிவித்த நே சான், படுகொலைகள் அங்கு இடம்பெற்று வந்தன. அவர்கள் எவரிடமும் வேறு நாடுகளுக்குச் செல்வதற்கான கடவுச்சீட்டுக்கள் இருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
அவர் ராக்கைன் மாநிலத்திலுள்ள ஒரு நகரிலிருந்து மற்றுமொரு நகரத்திற்குச் செல்வதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை. தற்போது சவூதி அரேபியாவிலிருந்து வெளியெற்றப்படும் இவர்கள் கடத்தல்காரர்களூடாக தமது கடவுச்சீட்டுக்களைப் பெற்றிருந்தனர்.
மனித உரிமைக் குழுக்கள் சவூதி அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளும், கடந்த இரண்டு ஆண்டுகளாக சவூதி அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளும் பயனற்றுப்போயுள்ளன. யாரும் உதவுவதற்கு தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli