ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ள 2019 ஏ.எப்.சி. ஆசிய கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆயத்தங்களை கட்டார் மேற்கொண்டுள்ள அதேவேளை, அயலிலுள்ள வளைகுடா நாடுகளுடனான இராஜதந்திர முரண்பாடுகள் விளையாட்டு மைதானத்திற்கு வெளியே இருக்க வேண்டுமென கட்டார் நாட்டின் தேசிய அணி எதிர்பார்க்கின்றது.
ஒரு மாதகாலம் நடைபெறவுள்ள இப்போட்டிக்காக 25 பேர் கொண்ட கட்டார் விளயாட்டு வீரர்களைக் கொண்ட அணி, பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு தனிப்பட்ட ஜெட் விமானத்தில் குவைத் ஊடாகப் பயணித்து அமீரக நகரான அல்- – அய்னை கடந்த சனிக்கிழமை வந்தடைந்தது.
அரசியல் பதற்ற நிலைமை மைதானத்திற்கு வெளியே இருந்தபோதிலும், புதன்கிழமையன்று தமது முதலாவது போட்டியினை லெபனானுக்கு எதிராக விளையாடி போட்டியினை ஆரம்பிப்பதற்கு ஆவலாக இருப்பதாக கட்டார் உதைப்பந்தாட்டச் சங்கத்தின் ஊடக அதிகாரி அலி அல்-சலாத் தெரிவித்தார்.
‘அவர்கள் விளையாட்டு வீரர்கள், அவர்கள் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபடப்போகிறார்கள், அரசியலை உதைப்பந்தாட்டத்துடன் முடிச்சுப்போடத் தேவையில்லை.
இறுதியில் விளையாட்டு சமாதானத்திற்கான செய்தியைக் கொண்டுள்ளது. எனவே இதனைத்தான் நாம் செய்யப் போகின்றோம். நல்லமுறையில் இந்தச் சுற்றுப்போட்டியில் நாம் எமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகின்றோம்’ எனவும் அலி அல்-சலாத் தெரிவித்தார்.
கட்டார், குழு ஈ இல் இடம்பெற்றுள்ளது, இதே அணியிலேயே கட்டாரின் எதிரி நாடான சவூதி அரேபியாவும் காணப்படுகின்றது. இது தவிர வட கொரியா மற்றும் லெபனான் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.
மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் கட்டார் மற்றும் சவூதி அரேபியாவுக்கிடையிலான போட்டி ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அபுதாபியின் ஸெயிட் விளையாட்டு நகர விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னரான நான்கு தடவைகளில் காலிறுதியினை ஒருபோதும் தாண்டியதில்லை.
ஒரு மாத காலம் நடைபெறவுள்ள இவ்விளையாட்டு நிகழ்வில் வளைகுடா நெருக்கடியின் நிழல் காணப்படுகிறது என்பது கடந்த வியாழக்கிழமை கட்டார் உதைப்பந்தாட்டச் சங்கத்தின் உப தலைவர் சாஒட் அல்-மோஹன்னடி ஐக்கிய அரபு அமீரகத்தினுள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதன் மூலம் தெரிய வந்தது. இறுதியாக வெள்ளிக்கிழமையே அவர் ஐக்கிய அரபு அமீரகத்தை வந்தடைந்தார்.
ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைக்காததால் விமானத்தில் ஏறுவதற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை என விமான சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டாரைத் தளமாகக் கொண்ட சில ஊடகவியலாளர்களுக்கும் அமீரகத்திற்குச் சென்று செய்தி சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாய் விமான நிலையத்தில் சுமார் 13 மணித்தியாலங்கள் காத்திருந்த பின்னர் தோஹாவுக்குத் திரும்பியுள்ளனர்.
எங்களுடன் அல் காஸ் மற்றும் பீஇன் ஸ்போட்ஸ் ஆகியவற்றைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர், எனினும், உள்ளூர் பத்திரிகைகளின் ஊடகவியலாளர்கள் வரவில்லை என சலாத் தெரிவித்தார்.
இராஜதந்திர நெருக்கடி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கடந்த ஜூன் 2017 இல் கட்டாரைத் தளமாகக் கொண்ட பீஇன் ஊடகத்திற்கு அமீரகம் தற்காலிகத் தடை விதித்தது.
பெப்ரவரி முதலாம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டிகளின் பிரத்தியேக ஒளிபரப்பாளராக பீஇன் செயற்படவுள்ளது.
இதனிடையே, எம்மிடம் இளம் தலைமுறையினர் இருக்கின்றனர், அணியிலுள்ளவர்களின் சராசரி வயது 24 ஆகும், 24 நாடுகள் பங்குபற்றும் ஆசியக் கிண்ணப் போட்டி 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கான அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் உலகக் கிண்ணத்திற்கு தம்மை தயார் படுத்திக் கொள்வதற்கான பயிற்சியாகவும் அமையும் என சலாத் குறிப்பிட்டார்.
2010 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளைத் தோற்கடித்து உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தும் முதலாவது அரபு நாடு எனும் அந்தஸ்த்தை கட்டார் பெற்றது.
கட்டார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவும் வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் அங்கத்தவர்களுடன் 2014 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையினை மீறியதாகவும் குற்றம்சாட்டி கடந்த 2017 ஜூன் மாதம் 05 ஆம் திகதி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தமது கட்டாருடனான இராஜதந்திர மற்றும் வர்த்தகத் தொடர்புகளை தரை, வான் மற்றும் கடல் மார்க்கங்களை தடை செய்தன.
இந்தத் தடைகள் 20 ஆவது மாதத்தை எட்டியுள்ள வேளையில் இச் சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளது.
கட்டார் இந் நான்கு நாடுக ளினதும் குற்றச்சாட் டுக்களை தொடர்ச்சியாக மறுத்து வருகின் றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli