எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் விவகாரத்தில் நாடு மீண்டும் அரசியல் சர்ச்சைக்குள் மூழ்குவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் பிரதமர் நியமனம் விவகாரத்தில் நாடு அரசியல் ஸ்திரமற்ற தன்மையை எதிர் கொண்டது. அதனால் ஏற்பட்ட தாக்கங்கள் இதுவரை முழுமையாக சீர்செய்யப் படவில்லை. அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கிவிட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக் ஷவை நியமித்தார். அத்தோடு தனது தீர்மானம் அரசியலமைப்புக்கு அமைவானது என அழுத்தமாகத் தெரிவித்து வந்தார்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்க தானே பிரதமர், அலரிமாளிகையை விட்டு அகலமாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்தார். இறுதியில் இந்தச் சர்ச்சைக்கு நீதிமன்றே தீர்வுவழங்க வேண்டியேற்பட்டது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையே நாட்டில் மீண்டும் உருவாகியுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி தனித்து புதிய அரசாங்கமொன்றினை நிறுவியதும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் அமர்ந்தது. சபையில் பெரும்பான்மையைக் கொண்ட கட்சியாகவும் அது இருந்தது. இந்நிலையில் அக்கட்சி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும்படி சபாநாயகரைக் கோரியதையடுத்து சபாநாயகர் மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தார்.
என்றாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தானே சட்டபூர்வமான எதிர்க்கட்சித் தலைவரென்று வாதிட்டதுடன் மஹிந்த ராஜபக் ஷ பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுள்ளதால் அவரால் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை வகிக்க முடியாது. அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அங்கத்துவத்தை இழந்து விட்டதாகவே கணிக்கப்பட வேண்டும் என்றார்.
ஆர். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்திலிருந்தும் அகல மறுத்தார். சபாநாயகரினால் வழங்கப்பட்ட நியமனம் சம்பிரதாயங்களுக்கும் சட்டங்களுக்கும் அமைவாக இருக்கும் பட்சத்திலே எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும், காரியாலயத்தையும் கையளிப்போம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர்– பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
இந் நிலையிலே சபாநாயகர் கருஜயசூரிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தான் எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்தில் எந்த மாற்றமுமில்லை. என கடந்த வெள்ளிக்கிழமை கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைவாக சட்டரீதியாகவே தீர்மானம் மேற்கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பொறுப்பெடுத்து கடமையினை உடன் பொறுப்பேற்கும்படியும் கூறியுள்ளார். தற்போது நாட்டில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள், சம்பந்தன் பதவியிலிருந்தும் காரியாலயத்திலிருந்தும் அசையமாட்டேன் என்கிறார். அண்மையில் நாடு எதிர்நோக்கிய இரு பிரதமர்கள் விவகாரம் போல் தற்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் சர்ச்சை கிளம்பியுள்ளது.
பாராளுமள்ற அமர்வு எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அன்றும் இவ்விவகாரம் பலத்த சர்ச்சைக்குள்ளாகவுள்ளது. இச்சர்ச்சை நீடிக்கக் கூடாது. சுமுகமான தீர்வு ஏற்பட முடியாவிட்டால் தீர்வுக்காக நீதிமன்றினை நாடுவதே சிறந்ததாகும். இந் நிலைப்பாட்டிலே சபாநாயகரும் இருப்பதை அறிய முடிகிறது
“பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைவாக மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க் கட்சித் தலைவராக நியமித்துள்ளேன். இந்நியமனம் தொடர்பில் பலர் பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளனர். யாருக்காவது இந்நியமனம் தொடர்பில் பிரச்சினையிருந்தால் நீதிமன்றினை நாடலாம். நீதிமன்றுக்கு முன்வைக்கப்பட வேண்டிய விடயங்களை என்னிடம் முன்வைப்பதால் பலன் இல்லை” என சபாநாயகர் தெரிவித்துள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
எனவே பிரதமர் நியமனம் போன்று எதிர்க்கட்சித் தலைவர் நியமனமும் இழுபறி நிலையில் மக்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தாது விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களை வலியுறுத்துகிறோம்.
-Vidivelli