இந்தோனேசியாவின் மொலுக்காஸ் தீவுகளை உலுக்கிய 6.6 ரிச்டர் நிலநடுக்கம்

0 556

இந்தோனேசியாவின் மொலுக்காஸ் தீவுகளின் வடக்கு மலுக்குவின் டெர்னேட் நகருக்கு வடமேற்கே 173 கிலோமீற்றர் தூரத்தில் 6.6 ரிச்டர் அளவில் நில நடுக்கம் தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 60.5 கிலோமீற்றர் ஆழத்தில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டதோடு அதன் பின்னர் 5.0 தொடக்கம் 5.1 ரிச்டர் வரையான தொடர் நிலநடுக்கங்கள் ஏற்ட்டுள்ளன.

முன்னதாக வெளியிடப்பட்ட அமெரிக்க புவியியல் ஆய்வுமைய அறிக்கையில் 7.0 ரிச்டர் நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள் தொடர்பில் உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத அதேவேளை, இந்தோனேசிய புவிப்பௌதீகவியல் முகவரகம் சுனாமி எச்சரிக்கை எதனையும் விடுக்கவில்லை.

நாம் அதிர்வினை உணர்ந்தோம், சிலர் வீடுகளை விட்டு வெளியேறினர் ஆனால் உண்மையில் பயப்படும்படியாக எதுவும் இருக்கவில்லை. எனது பிரதேசத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என புதி என்ற டெரானேட்டைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். இவரைப் போலவே இந்தோனேசியாவில் பெரும்பாலானவர்கள் ஒற்றைப் பெயராலேயே அழைக்கப்படுகின்றனர்.

டெரானேட் நகரத்தில் சுமார் 200,000 மக்கள் வாழ்கின்றனர். நான் வீட்டைவிட்டு வெளியே ஓடினேன் இங்குள்ள ஏனையோரும் அவ்வாறே செய்தனர். தற்போது நாம் எங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளோம் என நிலநடுக்கம் ஏற்பட்டபோது மனாடோ நகரத்தில் இருந்தவரான பானி நசூஷன் தெரிவித்தார்.

வடக்கு சுலவேசிக்கான டொஹோமோனிலுள்ள அவசர அனர்த்த முகவரகத்தின் பேச்சாளர் ஒருவர் ‘அவர்கள் அப்பிரதேசத்தில் எதனையும் உணரவில்லை, உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவுமில்லை’ எனத் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாத பிற்பகுதியல் சுண்டா நீரிணையின் நடுப்பகுதியில் ஜாவா மற்றும் சுமாத்ரா தீவுகளுக்கிடையே எரிமலை வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்பினால் தொடர்ந்தும் அந்நாடு திணறிவருகின்றது. சுனாமி காரணமாக 400ற்கும் மேற்படோர் கொல்லப்பட்டனர்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.