சூடானில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கைது

0 518

ஜனாதிபதி ஒமர் அல்-பஷீருக்கு பாரிய சவாலாக அமைந்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் இணைந்துகொண்டதைத் தொடர்ந்து கார்ட்டூம் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் சூடானின் பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இரு போராசிரியர்கள் தெரிவித்தனர்.

பஷீரை பதவி விலகுமாறு முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினால் சூடான் தலைநகர் கார்ட்டூம் மற்றும் பிற நகரங்களிலும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பதில் நடவடிக்கையாகவே ஞாயிற்றுக்கிழமையன்று இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே செல்வதற்கு தடைகளை விதித்த பாதுகாப்புப் படையினர், குறைந்தது எட்டுப் பேரைக் கைது செய்தனர்.

ஏனையோர் பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த பீடத்தின் கழகக் கட்டடத்தினுள் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்தோடு சுமார் 100 பேராசிரியர்களும்  விரிவுரையாளர்களும் கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள் கட்டடத்தினுள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த மாதம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியதிலிருந்து முதன் முறையாக நாட்டின் மிகப் பழைமையானதும் மிகவும் கௌரவமிக்கதுமான கல்வி நிறுவனம் இணைந்து கொண்டது.

பீடத்தின் கழகக் கட்டடத்தினுள் தடுத்து வைக்கப்பட்டிருந்த விரிவுரையாளர்கள் குடியரசின் ஜனாதிபதி பதவிவிலக வேண்டுமெனக் கோருகின்றோம் என தெரிவிக்கும் சுலோக அட்டையினை ஏந்தியிருந்ததை சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்கள் காட்டின.

இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.

உணவுத் தட்டுப்பாடு மற்றும் பாண் விலை அதிகரிப்பின் காரணமாக ஆத்திரமுற்ற மக்களால் அவ்வப்போது நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி தெற்கு நகரான அட்பராவில் பெரும் போராட்டமாக வெடித்தது.

சந்தர்ப்பம் ஏற்படும்போது கண்ணீர் புகை குண்டுகளையும், உண்மையான துப்பாக்கி ரவைகளையும் பயன்படுத்திய பாதுகாப்புப் படையினர் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைச் சுற்றிவளைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது இரண்டு பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 19 பேர் உயிரிழந்ததாக சூடான் அரசாங்கம் அறிவித்தது. எனினும் இறந்தோரின் எண்ணிக்கை 37 என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.