திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட குறித்த பாடசாலையின் அதிபர் மீண்டும் ஆட்சேபனை வெளியிட்டுள்ளதாகவும் இதனையடுத்து புதிய ஆண்டில் பாடசாலை ஆரம்பித்தது முதல் நேற்று வரை வகுப்பறைகளுக்குச் சென்று கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட நேரசூசி வழங்கப்படவில்லை என்றும் தெரிய வருகிறது.
முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து கற்பிக்க முடியாது என பாடசாலை தரப்பினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் சுமார் 9 மாதங்களாக குறித்த ஆசிரியைகள் நால்வரும் தற்காலிக இடமாற்றம் பெற்று வேறு பாடசாலைகளில் கடமையாற்றி வந்தனர். இந் நிலையில் தற்காலிக இடமாற்றம் முடிவுக்கு வந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி முதல் மீண்டும் திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு குறித்த ஆசிரியைகள் அபாயா அணிந்து கடமைக்குச் சென்றனர். எனினும் குறித்த ஆசிரியைகள் வகுப்பறைகளுக்குச் சென்று தமது வழக்கமான பாடங்களை கற்பிப்பதற்கான நேர சூசி அதிபரால் வழங்கப்படவில்லை. அத்துடன் சாரி அணிந்து வரும் பட்சத்திலேயே வகுப்பறைக்குச் சென்று கற்பித்தல் பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும் அதிபர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மீண்டும் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் தமது கடமையைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ் ஆசிரியைகளுள் ஒருவர் அப் பாடசாலையில் உள்ள விசேட தேவையுடைய மாணவர்களுக்கான நிலையத்தில் கற்பிக்கும் பயிற்றப்பட்ட ஆசிரியை எனவும் இந்த விவகாரத்தினால் குறித்த நிலையத்தின் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பில் குறித்த ஆசிரியைகள் நால்வரும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றையும் செய்திருந்தனர். இது விடயத்தில் ஆசிரியைகள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள் ஆஜராகி வாதங்களை முன்வைத்திருந்தனர். இந் நிலையில் குறித்த விசாரணைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் விரைவில் கல்வியமைச்சுக்கும் மாகாண கல்வித் திணைக்களத்திற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ள நிலையிலேயே மீண்டும் அபாயா அணிந்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரசூசி வழங்கப்படாமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் முறையிட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் தெரிவிக்கின்றனர்.
-Vidivelli