ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்ந்து நிறைவேற்றிக் கொள்ள திட்டமிடப்பட்டிருந்த பிரிவினைவாத சமஷ்டி அரசியலமைப்புக்கு நாம் தடையேற்படுத்திவிட்டோம். நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கூட்டுச் சேர்ந்ததாலேயே இது சாத்தியப்பட்டது. இன்று அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மை இல்லை. அதனை நாம் தகர்த்து விட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
குருநாகல் வில்கொடவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொது ஜனபெரமுனவில் காரியாலயத்தில் நடைபெற்ற ‘2019 ஆம் ஆண்டு வெற்றிக்குத் தயாராகுங்கள்’ எனும் தொனிப்பொருளிலான கூட்டத்துக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, பிரிவினைவாத சமஷ்டி அரசியலமைப்பின் மூலம் வடக்கையும், கிழக்கையும் இணைப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்கி அதனை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்துள்ளது என்றாலும் புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவர்களிடம் 2/3 பெரும்பான்மை இல்லை. அதை நாம் தகர்த்தெறிந்துவிட்டோம்.
மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கிருந்த 2/3 பெரும்பான்மையே எமக்கு சவாலாக இருந்தது. இந்த 2/3 பெரும்பான்மையை நாம் சிதைத்திருக்காவிட்டால் நாடு பிரிக்கப்பட்டு சமஷ்டி அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டிருக்கும். நாடு துண்டாடப்பட்டிருக்கும். எமது இந்த நாட்டை ஒரு போதும் எவருக்கும் துண்டாட முடியாது. இது ஜனநாயகமா? மாகாணசபை தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் என்பன தாமதியாது உடன் நடத்தப்பட வேண்டும் என்றார்.
-Vidivelli