மஹிந்த ராஜபக்ஷவை கடந்த வருடம் பிரதமராக நியமித்தமை சட்டத்திற்கு எதிரானது எனவும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றியமை மற்றும் அமைச்சரவையை நீக்கியமை ஆகியன சட்டவிரோதம் எனவும் உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது. அன்றைய தினம் பொறுப்புக் கூறத்தக்க தரப்புக்கு அறிவித்தல் விடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தம்பர அமில தேரர் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரான ஓசல ஹேரத் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களே இவ்வாறு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. குறித்த மனுக்கள் நேற்று உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன மற்றும் எல்.பி.டி. தெஹிதெனிய ஆகியோர் முன் பரிசீலிக்கப்பட்டபோதே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டன.
மனுவில் பிரதிவாதிகளாக ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள், சட்டமா அதிபர் உள்ளிட்ட 53 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரானது என்று மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனாதிபதியின் இந்த செயற்பாடு தமது அடிப்படை உரிமையை மீறியிருப்பதாக உத்தரவிடுமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றைக் கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli