உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் சர்வதேச பாடசாலை மாணவி ஒருவர் அகில இலங்கை மட்டத்தில் கலை பிரிவின் முதலாம் இடத்தை பெற்றுகொண்டமை தொடர்பாக முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவின் நிலைப்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விடயம் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கு நான் மிகவும் வருந்துகின்றேன் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச பாடசாலை மாணவி ஒருவர் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டமை தொடர்பாக பந்துல குணவர்தன தெரிவித்த கருத்தில் எந்தவொரு நியாயமும் இல்லை. தற்போதைய கல்வி அமைச்சர் என்ற வகையில் இவ்வாறான கருத்தை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரமும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தின் பிரகாரமும் கல்வி பயில்வதற்கான உரிமையை நாம் உறுதிப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு கல்வி பயில்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அடிப்படை தகைமைகள் இருப்பின் எந்த முறையிலும் பரீட்சைக்குத் தோற்ற எவருக்கும் எந்த தடையும் கிடையாது. சர்வதேச பாடசாலை மாணவர்கள் தேசிய மட்ட பரீட்சைக்கு தோற்றுவதும் பெறுபேறுகளின் பிரகாரம் முன்னிலை வகிப்பதும் இது முதற்தடவையல்ல.
அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குவதுடன் அரச பாடசாலைகளின் கல்வி பயிலாதவர்களின் கல்வி உரிமையையும் பாதுகாப்பதற்கு நாம் முன்னின்று செயற்படுவோம். இவ்வாறான நிலையில் பந்துல குணவர்தன கருத்தானது தற்போது கல்வி பயிலும் மாணவர்களுக்கு மத்தியில் குழப்பமான நிலைமையை ஏற்படுத்தும்.
சர்வதேச பாடசாலை கல்வி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படாவிடினும் அந்த பாடசாலைகளின் தரத்தை கண்காணிப்பதற்கு சுயாதீன சபையொன்றை நிறுவியுள்ளோம். இந்தக் கண்காணிப்பின் போது சர்வதேச பாடசாலைகளின் கற்றல் – கற்பித்தல் முறைமை தொடர்பாகவும் பாடசாலை வள மேம்பாடுகள் தொடர்பாகவும் ஆசிரிய வசதிகள் தொடர்பாகவும் கண்காணிப்புகளை கல்வி அமைச்சு முன்னெடுத்து வருகின்றது. அத்துடன் சர்வதேச பாடசாலை நிறுவும் போது கல்வி அமைச்சின் அனுமதியின் கீழ் நிறுவுவதற்கான தேவையான சட்ட ஏற்பாடுகளை தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.
இதற்கு அப்பால் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்கும் நோக்கில் அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் பாடசாலை சீருடைக்கான வவுச்சர் தொகையிலும் அதிகரிப்பு செய்துள்ளோம். சுரக்சா காப்புறுதி விவகாரத்தில் காணப்பட்ட இழுபறி நிலையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
-Vidivelli