உயர்தர பெறுபேறுகளின்படி உயிரியல் விஞ்ஞான பிரிவில் தேசியமட்டத்தில் மூன்றாமிடம் பெற்ற மாத்தளையைச் சேர்ந்த ஹக்கீம் கரீம்.
அறிவார்ந்த சூழலில் வளர்ந்த பிள்ளைதான் ஹக்கீம். பொறியியலாளரான மொஹமத் ரிஸ்மி மற்றும் வைத்தியரான நிஹாரா ரிஸ்மியின் மூத்த புதல்வராவார். இவருக்கு இளைய தம்பியொருவரும் தங்கையொருவரும் இருக்கின்றனர்.
முதலாம் தரம் முதல் மாத்தளை ஸாஹிரா கல்லூரியிலேயே படித்திருக்கிறார். தரம் 5 வரை தமிழ் மொழியிலும் உயர்தரம் வரை ஆங்கில மொழியிலும் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கிறார்.
டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம்கொண்ட ஹக்கீம் படிப்பில் அக்கறை செலுத்துவதற்காக அதனை கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறார். குறிப்பாக சாதாரண தரப் பரீட்சைக்காக இரண்டு வருடங்களும் உயர்தரப் பரீட்சைக்காக இரண்டு வருடங்களும் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபடவில்லை. வீட்டில் மூத்த பிள்ளை மிகவும் பக்குவமானவர். ஏனெனில் தாயும் தந்தையும் அலுவல்களுக்கு சென்றாலும் தன்னை திட்டமிட்டுத் தானே வழிநடத்தும் ஆற்றல்கொண்டவர். படி என்று கட்டளையிட்டு படிக்காது தேவை என்று உணர்ந்து படித்ததனால் தேசிய மட்டத்தில் சாதனை படைத்திருக்கிறார்.
ஒரு பொறியியலாளர், ஒரு வைத்தியர் வசதியான பெற்றோர்களே. ஆனால் வீட்டில் டீ.வி. இல்லை. இதன் பின்புலம் வீட்டில் கற்றலுக்கான சூழலொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தரம் பத்தில் கற்றபோதே வீட்டில் டீ.வி. இருக்கவில்லை. எனது பெறுபேறு குறித்த விடயங்களை அடுத்தவீட்டு தொலைக்காட்சியில்தான் பார்த்ததாக விபரிக்கிறார் ஹக்கீம் கரீம். எனக்கு கையடக்கத் தொலைபேசி இருக்கிறது ஆனாலும் தேவைக்குப் பயன்படுத்துவதை தவிர அநாவசியமாக பயன்படுத்துவது குறைவு. பெற்றோரும் அதனை வாங்கி வைத்துக்கொள்வார்கள் என்றார்.
சிறுவயதில் குர்ஆன் மனனம் செய்வதில் ஈடுபட்ட ஹக்கீம், உயர்தரம் படிக்கும்போது குர்ஆனை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து படிப்பதில் ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். இது தனது கல்விக்கு துணைபுரிந்துள்ளதை உறுதியாக நம்புகிறார். நாம் படம் பார்க்கும்போதும், பாடல் கேட்கும்போதும் கற்றலை மறந்து முழுமையாக அதில் லயித்துவிடுகிறோம். எனினும், குர்ஆனுடன் தொடர்புபட்டிருக்கும்போது கல்வியில் சமாந்திரமாக அக்கறை செலுத்தக்கூடியாதாக இருப்பதாக விடிவெள்ளிக்கு கூறினார் ஹக்கீம்.
தேசிய மட்டத்தில் சாதித்த ஹக்கீம் தனது கற்றலுக்காக விசேடமாக எந்த கற்றல் முறைகளையும் வைத்துக் கொள்ளவில்லை. படிப்பதற்கான தேவையிருந்தால் அல்லது ஏதாவது வேலையிருந்தால் அதனை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். குறிப்பாக ஒரு விடயதானத்தை படித்துக்கொண்டிருந்தால் அதனை முழுமையாக விளங்கிய பின்னரே அடுத்த விடயதானத்திற்கு செல்வார். ஒரு பகுதியை பூரணமாக தெரிந்துகொள்ளும்வரை அடுத்த பகுதிக்கு செல்வதானது பின்நாட்களில் சுமையாகிவிடும் என்று கருதி பாடவிதானங்களை முழுமையாக விளங்கிக்கொண்டிருக்கிறார். இதனால் பரீட்சைக்கு இரண்டு வாரங்கள் இருக்கின்ற சூழலில் கற்பதற்கு எதுவும் இருக்கவில்லை என்று நான் வியப்படைந்தேன் என்றும் குறிப்பிட்டார்.
இதுதவிர, பரீட்சையை மையமாக கொண்டு கடந்தகால வினாப்பத்திரங்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மாதிரி வினாத்தாள்களை முழுமையாக விளங்கிப் பரீட்சைக்கு தயாராகியிருக்கிறார். இவ்வாறு வினாத்தாள் குறித்த அறிவை பெற்றமை கற்றலை இலகுபடுத்தியது என்கிறார் ஹக்கீம்.
வல்ல அல்லாஹ்வின் அருளினால் கிடைத்த கல்வியறிவை அவனுக்கு விருப்பமான முறையில் பயன்படுத்த வேண்டுமென்ற அவா ஹக்கீமிடத்தில் இருக்கிறது. பெற்றோர் மற்றும் கூட்டுக் குடும்பத்தினரின் உந்துதல் என்பன பரீட்சை பெறுபேற்றில் பெரும் பங்காற்றியது என தெரிவித்த அவர் பாடசாலை சமூகம் நட்பு வட்டத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.
சத்திரசிகிச்சை நிபுணராக வரவேண்டும் என்பது ஹக்கீமின் விருப்பம். எனினும் அந்த துறை குறித்து தேடிப்பார்த்துவிட்டு அடுத்தகட்ட கற்றலை தொடங்கலாமென எதிர்பார்க்கிறார்.
-Vidivelli