உயர்தர பெறுபேறுகளின்படி தொழிநுட்பப் பிரிவில் தேசிய மட்டத்தில் இரண்டாம் நிலையை பெற்ற சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.எல்.ரிஸா மொஹமட்.
தாய், தந்தை, சகோதரி ஒருவர் மற்றும் இளம் சகோதரன் அடங்கலாக ஐவர் கொண்ட அழகிய குடும்பத்தில் பிறந்தவர்தான் ரிஸா. விவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்ட குடும்பத்தில் கற்றலுக்கான சூழலை பெற்றோர் ஒழுங்கமைத்து தந்ததாக விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
தனது ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை அரபா வித்தியாலயத்தில் ஆரம்பித்த ரிஸா, இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் பயின்று கற்ற பாடசாலைகளுக்கு பெருமைசேர்த்துக் கொடுத்துள்ளார்.
நூலகத்தில் மட்டுமல்ல, விளையாட்டு மைதானத்திலும் தொலைக்காட்சியின் முன்பும் தனது ஓய்வுநேரங்களை செலவிடும் ரிஸா, கற்றலுக்கான நேரத்தை உரிய முறையில் பயன்படுத்தியதே அவரது வெற்றிக்கு பிரதான காரணம் என கருதுகின்றார்.
ஆசிரியர்களுக்கு அடிபணிந்து அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கும் பிள்ளைகளில் இவரும் ஒருவர். ஆசான்களின் வழிநடத்தலில் கற்பித்தல் முறைகளை ஒழுங்குபடுத்தியே இந்த சாதனையை சொந்தமாக்கியுள்ளார்.
தனக்கு விளங்கிக்கொள்ள முடியாத பகுதிகளை highlighter பேனையினால் அடையாளமிட்டு அதனை புறம்பாக நேரமொதுக்கி விளக்கங்களை தேடி படிக்கக்கூடிய மாணவன் ரிஸா. எனினும், தொழிநுட்பத்துறை கற்கைகளுக்கு புத்தகப்படிப்பு மட்டும் போதாது என்பதை நன்குணர்ந்து செயன்முறை கல்வியில் அதீத ஈடுபாடு காட்டியே இந்த வெற்றியை தனதாக்கியிருக்கிறார்.
இந்த வெற்றி கிடைத்தமைக்கு அல்லாஹ்வை நன்றியுடன் நினைவுகூரும் ரிஸா, தாயும் தந்தையும் தந்த ஊக்கம் மற்றும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி மட்டும் போதாது என்றும் கூறுகிறார். பாடசாலை சமூகம் மற்றும் ஆசான்களினது பங்களிப்பையும் அவர் குறைத்து மதிப்பிடவில்லை. நண்பர்கள், அயலவர்கள், குடும்பத்தாருக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.
தொழில்நுட்பத்துறை சார் கல்வியில் தேர்ச்சிபெற்று நாட்டுக்கும் சமூகத்திற்கும் பிரயோசனம் தரும் பிரஜையாக மிளிரவேண்டும் என தனது திடமான நம்பிக்கையை வெளிப்படுத்தினார் ரிஸா.
-Vidivelli