சுதந்திர கட்சிக்கு மைத்திரி இழைத்த துரோகத்தின் விளைவே தாமரை மொட்டு
பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம சுட்டிக்காட்டு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ கூட்டணியமைத்துக் கொள்வது மீண்டும் இரண்டாவது அரசியல் நெருக்கடியினை ஏற்படுத்தும். ஜனாதிபதி 2015 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் அரசியல் ரீதியில் மேற்கொண்ட தீர்மானங்களை மஹிந்த ராஜபக் ஷ நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம சுட்டிக்காட்டினார்.
பொதுஜன பெரமுனவும் ,ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் புதிய கூட்டணியமைத்துக் கொள்ளவுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இன்று பாரிய நெருக்கடிகளுக்குள் உள்ளாக்கப்பட்டுள்ளது. முறையான தலைமைத்துவம் ஒன்று காணப்படாமையின் காரணமாகவே இந்நிலை இன்று தோற்றம் பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இழைத்த துரோகமே இன்று பொது ஜன பெரமுன என்ற புதிய கட்சி தோற்றம் பெற வழியேற்படுத்தியது.
தற்போது பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் புதிய கூட்டமைப்பினை உருவாக்கி அடுத்த கட்ட அரசியலை முறையாக முன்னெடுத்து செல்ல தீர்மானித்துள்ளன. அவ்வாறு என்றால் இதுவரை காலமும் முறையாக அரசியலை முன்னெடுக்கவில்லை என்று தானே அர்த்தப்படும்.
மஹிந்த ராஜபக் ஷ இன்று எதிர்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தில்பெரும்பான்மை பலம் அரசாங்கத்திற்கு பிறகு மஹிந்தவிற்கே காணப்படுகின்றது.பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகியன இடம்பெறும் வரையில் மஹிந்த ராஜபக் ஷ எதிர்கட்சி தலைவராக செயற்படுவதற்கு எவருடனும் கூட்டணியமைக்க வேண்டிய அவசியம் கிடையாது. தற்போது அரசியலில் செயற்படுவதை போன்று தனித்து செயற்பட்டாலே எவ்வித பிரச்சினைகளும் இன்றி முறையாக பாராளுமன்றத்தில் பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சியாக செயற்படலாம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மீண்டும் கூட்டணியமைப்பது பாரதூரமானது. இவருடன் அரசியலமைப்பிற்கு முரணாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி கூட்டணியமைத்ததன் விளைவினை இன்றும் நாடு எதிர்கொண்டு வருகின்றது. புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்திலும் இதன் தாக்கம் செல்வாக்கு செலுத்துகின்றது. இதனால் மக்களுக்கு முழுமையான சேவையினை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தலின் வெற்றியினை கருத்திற் கொண்டே தற்போது இந்த புதிய கூட்டணி அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக் ஷ இடம் பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றதை போன்று இனிவரும் தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட வேண்டும். மக்கள் செல்வாக்கு இல்லாமல் இருப்பவர்களே கூட்டணியமைத்துக் கொள்வார்கள். ஆகவே இவ்விடயத்தில் மஹிந்த ராஜபக் ஷ 2015 மற்றும் 2018ஆம் ஆண்டு தேசிய அரசாங்கத்தில் இடம் பெற்ற சம்பவங்களையும் நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இரண்டு தரப்பினரும் புதிய கூட்டணி ஒன்று அமைக்கும் பொழுது கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பு. பொதுஜன பெரமுனயினர் ஒருபோதும் தங்களின் தலைமைத்துவத்தினையும், கட்சியின் சின்னத்தினையும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இதனால் வீண் முரண்பாடுகளே இடம் பெறும் ஆகவே தேர்தல்கள் இடம் பெறும் வரையில் முழுமையாக இரண்டு தரப்பினரும் மக்களுக்கு சேவையாற்றினால் மக்களே தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள்.என்றார்.
-Vidivelli