முக்கியத்துவமிக்க துறைமுக நகரான ஹுதைதாவில் யுத்த நிறுத்தத்தை முன்கொண்டு செல்வதற்கான வழிவகைகள் பற்றி யெமன் தலைநகர் சன்ஆவில் ஹெளதி அதிகாரிகளை யெமனுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மார்டின் கிரிபித்ஸ் சந்தித்து உரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
துறைமுக நகரின் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவரான நெதர்லாந்தைச் சேர்ந்த ஓவ்வுபெற்ற ஜெனரலான பெட்ரிக் கம்மாயெட்டைச் சந்திப்பதற்கு முன்னதாக சனிக்கிழமையன்று யுத்த நிறுத்தம் தொடர்பில் ஹெளதி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ள கிரிபித்ஸ் யெமனின் ஜனாதிபதி அப்த்-ரப்பு மன்சூர் ஹாதி மற்றும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
சவூதி அரேபியாவுக்கான கிரிபித்ஸின் விஜயம் இம் மாத இறுதியில் மோதலில் ஈடுபடும் தரப்பினரை ஒன்றிணைப்பதற்கான முயற்சியாகும், கடந்த மாதம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக குவைத்தில் இந்த சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2014 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த யுத்தத்தின் முக்கிய முன்னேற்றமாக, உடன்படிக்கைக்கு அமைவாக, ஹெளதிகள் ஹுதைதா, சலீப் மற்றும் ராஸ் இஸா ஆகியவற்றின் துறைமுகைங்களின் கட்டுப்பாட்டினை யெமன் சட்டத்திற்கு அமைவாக உள்ளூர் அதிகாரிகளிடம் கையளிக்க வேண்டும்.
எவ்வாறெனினும், உடன்படிக்கையில் உள்ள வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்பில் இருதரப்பிலும் அதிருப்தி காணப்படுகின்றன.
2014 ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஹெளதிகளால் கையகப்படுத்தப்பட்ட குறித்த வசதிகளை முன்னர் அவற்றைக் கையாண்ட அதிகாரிகளுக்கு கையளிக்க வேண்டும் என அரசாங்கம் அதனை வியாக்கியானம் செய்துள்ளது.
எனினும், ஹெளதிகள் தெரிவித்திருப்பது என்னவென்றால் துறைமுகத்தை தற்போது கையாளும் அதிகாரிகளிடம் கையளிக்க வேண்டும் என்றே குறிப்பிடப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். தற்போது துறைமுகத்தை கையாள்பவர்கள் ஹெளதிகளோடு இணைந்தவர்களாவர்.
மீள படைகளை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பிலும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli