சீனாவில் இஸ்லாம் எவ்வாறு பின்பற்றப்பட வேண்டும் என்பதை மீள்வரைபு செய்யும் சீனாவின் தற்போதைய நடவடிக்கையாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இஸ்லாத்தை சீனமயப்படுத்தும் புதிய சட்டத்தை சீனா நிறைவேற்றியுள்ளது.
அரசாங்க அதிகாரிகள் மற்றும் எட்டு இஸ்லாமிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கிடையே இடம்பெற்ற கூட்டமொன்றில் சோஷலிசத்தோடு இணங்கிச் செல்லத்தக்க இஸ்லாம் மற்றும் சமயத்தை சீனமயப்படுத்துவதற்கான வழிவகைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக சீனாவின் பிரதான ஆங்கிலப் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் கடந்த சனிக்கிழமை தெரிவித்தது.
இது தொடர்பான மேலதிக தகவல்களையோ, அரச கட்டளைக்கு இணக்கம் தெரிவித்த இஸ்லாமிய நிறுவனங்களின் பெயர்களையோ அப்பத்திரிகை வெளியிடவில்லை.
மதநம்பிக்கை கொண்டுள்ள பிரிவினர் மீது சீன மயப்படுத்துவதற்கான செயற்பாடுகள் மாஓ சேதுங்கிற்கு அடுத்ததான சீனாவின் மிகவும் அதிகாரமிக்க ஜனாதிபதியான ஸீ ஜின்பிங்கின் ஆட்சியின் கீழ் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமது உரிமைகள் கடுமையாக ஒடுக்கப்படுவதை அம் மக்கள் மிகவும் பொறுமையுடன் சகித்துக்கொண்டிருக்கின்றனர்.
சீனாவின் சில பகுதிகளில் இஸ்லாத்தை பின்பற்றுதல் தடை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுதல், நோன்பிருத்தல், தாடி வளர்த்தல் அல்லது ஹிஜாப் அணிதல் என்பன கைது செய்யப்படுவதற்கான காரணங்களாக அமைந்துள்ளன.
ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இஸ்லாத்திலிருந்து விலகுவதற்கும் உத்தியோகபூர்வ நாத்திகவாத ஆளும் கமியூனிசக் கட்சியுடன் இணைவதற்கும் நிர்பந்திக்கப் படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இனச்சுத்திகரிப்பில் சீன அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக மனித உரிமைக் குழுக்கள் சீனா மீது குற்றம் சுமத்தியுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை உலகம் கருத்திலெடுக்காதிருக்க முடியாது என கடந்த ஆகஸ்ட் மாதம் வொசிங்டன் போஸ்ட் தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்திருந்தது.
இஸ்லாமியப் பிறை வடிவங்கள் மற்றும் மினாராக்கள் பள்ளிவாசல்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளன, சமயப் பாடசாலைகளுக்கும் அரபு மொழி வகுப்புக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது, இஸ்லாமிய செயற்பாடுகளில் சிறுவர்கள் பங்குபற்றுவதற்கும் சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.
இவ்வாறான விமர்சனங்கனை மறுத்துள்ள சீனா, சமயத்தினையும் சிறுபான்மையினரின் கலாசாரங்களையும் பாதுகாப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், கடந்த வாரத்தில் மாத்திரம், மியன்மாரை எல்லையாகக் கொண்ட சீனாவின் யுன்னான் மாகாணத்தில் அதிகாரிகளால் ஒடுக்கப்பட்ட ஹுயி முஸ்லிம் இனச் சிறுபான்மையினரால் உருவாக்கப்பட்ட மூன்று பள்ளிவாசல்கள் மூடப்பட்பட்டுள்ளன என தென் சீன மோர்ணிங் போஸ்ட் அறிக்கையிட்டுள்ளது.
-Vidivelli