தேசிய நிதியினை மோசடி செய்த அரசியல்வாதிகளின் வாரிசுகளும் நாட்டை சூறையாடுவர். இன்றைய அரசியல் நிலையில் முறையான அரசியல் வர்க்கத்தை உருவாக்குவது கடினமானதாகும். மஹிந்த மற்றும் ரணில் ஆகியோர் நாட்டை இனியும் ஆள தகுதியற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்த ஆதாரங்கள் ஏதும் தேவையில்லை. சிறந்த அரசியல் தலைவரை தெரிவு செய்யும் நடவடிக்கையினை அடுத்த மாதம் தொடக்கம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்போம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அதிக இலாபம் ஈட்டும் வியாபாரமாக இன்றைய அரசியல் காணப்படுகின்றது. ஊழல் மோசடிகளுக்கு எதிராக ஊழல்வாதிகளால் செயற்பட முடியாது. ஊழலற்ற அரசியல் முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டியதே எமது நோக்கம் என வலியுறுத்தினார்.
கொழும்பில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தினாலும், அரசியல் போட்டித்தன்மையாலும் நாளுக்கு நாள் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இவ்வருடத்தில் மாத்திரம் 5.6 பில்லியன் அரச கடன் மீள் செலுத்தப்பட வேண்டும். ஏற்றுமதியினால் கிடைக்கப் பெறுகின்ற வருமானத்தை விட இறக்குமதியால் அதிகளவிலான செலவினங்கள் காணப்படுகின்றன. ஒரு வருடத்தில் மாத்திரம் இறக்குமதிக்கு 20பில்லியன் ஒதுக்கப்பட வேண்டியுள்ளது. ஏற்றுமதிக்கும் , இறக்குமதிக்கும் இடையில் காணப்படுகின்ற இடைவெளியின் காரணமாக தேசிய உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
கடந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சியினால் ஏற்கனவே வீழ்ச்சியடைந்து காணப்பட்ட பொருளாதாரம் மேலும் தீவிரமடைந்தது. ஆனால் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கோ, அவரது தரப்பினருக்கோ எவ்வித அக்கறையும் கிடையாது. ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளை நடுத்தர மக்களே அனுபவிக்க வேண்டும்.
அரசியல் நெருக்கடியின் போது ஜனநாயகம் பற்றி பேசியவர்கள் இன்று ஜனநாயகம் என்ற சொல்லையே மறந்து விட்டார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய அரசாங்கம் பாரிய முரண்பாடுகளுக்கு மத்தியிலேயே செயற்படுகின்றது. அமைச்சுகளை பகிர்ந்து கொள்ளும் பொழுது ஐக்கிய தேசிய கட்சியினர் சிறுபிள்ளை தனமாக பகிரங்கமாக முரண்பட்டுக் கொள்கின்றார்கள். அன்று ஜனநாயகம் பற்றி பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆட்சி பொறுப்பை ஏற்றவுடனே அரசியலமைப்பிற்கு முரணாக செயற்பட ஆரம்பித்து விட்டார்.
தேசிய அரசாங்கம் ஒன்று காணப்படாத பட்சத்தில் அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும். என்று அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இத்திருத்தத்தை மறந்து விட்டார். அமைச்சரவையின் எண்ணிக்கையினை 36ஆக அதிகரிக்குமாறு ஜனாதிபதிக்கு அமைச்சர்களின் பெயர்பட்டியலை அனுப்பி வைத்தார். ஜனாதிபதி அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படுவார் என்று பிரதமர் அறிவார். ஆனால் தனது விடயத்தில் தனக்கு எதிராக செயற்படுவதற்கு அரசியலமைப்பை மீறமாட்டார். என்பதை மறந்து விட்டார்.
இன்று நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் மோசடிகளே முதனிலை வகிக்கின்றது. ஊழலுக்கு எதிராக ஊழல்வாதிகளால் செயற்பட முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இரண்டு அரசாங்கத்தின் தலைவர்களும் காணப்படுகின்றார்கள். மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்நாட்டை இனி முறையாக ஊழலற்ற முறையில் நிர்வகிக்க முடியாது. என்பதை அவர்களே பல விடயங்களில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மக்களின் அடிப்படை வாழ்வு இன்று மிகவும் அடிமட்டத்திலே காணப்படுகின்றது. பொருளாதார பின்னடைவினாலும், முறையற்ற அரசாங்கத்தின் நிர்வாகத்தினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் அரசியல் கொள்கைகளே மேற்குலக நாடுகளில் காணப்படுகின்றது. அரசியல் தூய்மையின் காரணமாகவே வெளிநாட்டவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக உள்ளது. மக்களின் அபிப்பிராயத்தை முன்னிலைப்படுத்தும் அரசியல் நிலையினை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்றார்.
-Vidivelli