ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஆளுநர் நியமனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருத்தமில்லாத ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி ஆளுநர் பதவியை கொச்சைப்படுத்தியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர் நியமனம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள சில ஆளுநர்கள் அந்த பதவிக்கு எந்தவகையிலும் பொருத்தமில்லாதவர்களாகும். மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படும் போது அவர்கள் அரசியல் கட்சி பேதமற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். ஆனால் தற்போது நியமிக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படுபவர்களாகும்.
அத்துடன் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட சில ஆளுநர்களுக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. நிதி மோசடி தொடர்பான விசாரணைக்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் பெயர் இருக்கின்றது. அதனால் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள புதிய ஆளுனர் நியமனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் குறித்த ஆளுநர் நியமனங்களை பார்க்கும் போது ஜனாதிபதி எதிர்வரும் தேர்தல்களில் மாகாணங்களை இலக்குவைத்து வழங்கியது போல் இருக்கின்றது. நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர்கள் அனைவரும் கடந்த காலங்களில் ஜனாதிபதிக்காக பாடுபட்டவர்கள். ஜனாதிபதியின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
எனவே மாகாண ஆளுநர் நியமனமானது மிகவும் கெளரவமான பதவியாக மதிக்கப்படவேண்டியதொன்றாகும். அந்த நியமனங்கள் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சி சார்பற்ற கெளரவமான நிலையில் இருப்பவர்களுக்கே வழங்கப்படவேண்டும். ஆனால் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநர் என்ற பதவியையும் அகெளரவப்படுத்தி, இவ்வாறானவர்களை நியமித்து அவரும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றார்.
-Vidivelli