ஹஜ் கடமைக்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகள் தமது பயணத்தை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்பு உறுதிசெய்யுமாறும் மீளளிக்கப்படக்கூடிய பதிவுக்கட்டணமாகிய 25 ஆயிரம் ரூபாவை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு பற்றுச்சீட்டினை திணைக்களத்தில் கையளிக்குமாறும் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹஜ் பயணத்தை உறுதி செய்யுமாறு கடந்த மாதம் திணைக்களம் 3000 விண்ணப்பதாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பிவைத்திருந்தும் 700 க்கும் குறைவான விண்ணப்பதாரிகளே தங்களது பயணத்தை உறுதிசெய்துள்ளனர்.
அதனால் மேலும் 4000 விண்ணப்பதாரிகளுக்கு அவர்களது கையடக்கத் தொலைபேசிகளுக்கு பயணத்தை உறுதிசெய்யுமாறு குறுந்தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடிதங்களும் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மீளக்கையளிக்கப் படக்கூடிய பதிவுக்கட்டணம் 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி தங்கள் பயணங்களை உறுதி செய்யும் விண்ணப்பதாரிகள் மாத்திரமே இவ்வருட ஹஜ் பயணத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கலாநிதி எம். ரி. சியாத் தெரிவித்தார்.
இறுதிநேர அசௌகரியங்களையும் சிரமங்களையும் தவிர்ப்பதற்காக அரச ஹஜ் குழு முன்கூட்டியே இவ்வருடத்திற்கான ஹஜ் ஏற்பாடுகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
-Vidivelli