ஆசிரியர் இடமாற்றம் சவாலாகுமா? சாத்தியமாகுமா?

0 1,876
  • எம்.எம்.ஏ.ஸமட்

ஒவ்வொரு வரும் வாழ்நாளில் சந்திக்கின்ற வாழ்வியலோடு இணைந்த மாற்றங்கள் சிலரது வாழ்வியலின் பக்கங்களுக்கு வலுவூட்டுவதாக அமையும். இன்னும் சிலரது வாழ்வியலின் பக்கங்கள் அம்மாற்றங்களினாலேயே வலுவிழந்தும் போய்விடுகின்றன.

மாற்றங்களை ஆரோக்கியமாக மாற்றுவதும் ஆரோக்கியமற்றதாக ஆக்குவதும் அவரவர் மனப்பாங்கைப் பொறுத்ததே. இந்த மாற்றத்தின் வரிசையில் அரச அல்லது தனியார் ஊழியர்கள் பணிபுரியும் நிலையங்கள் மாறுகின்றபோது அல்லது அவர்களுக்கு இடமாற்றங்கள் கிடைப்பெறுகின்றபோது அம்மாறுதல்கள்; சிலரது பணியை ஆரோக்கியமாகவும், சிலரது பணியை ஆரோக்கியமற்றதாகவும் மாற்றி விடுகின்றமை நிதர்சனமாகும்.

மாறுதல்களும், மாறுதலுக்குள்ளாகும்; சூழல்களும் செய்யும் தொழிலைத் திருப்தியாக செய்வதற்கு வளமுள்ளதாக அமையுமாயின் இவ்விடமாற்றம் ஆரோக்கியமானதாக அமையும். இந்நியதிகள் திருப்தியாக அமையாதவிடத்து இவ்விடமாற்றங்கள் ஆரோக்கியமற்றதாகவே அமையக்கூடும். இருப்பினும், மனப்பாங்கை ஆரோக்கியமாக மாற்றிக்கொள்ளுமிடத்து மாற்றங்களை சாதகமாக்கிக் கொள்ளலாம் என்பது நிஜமானது

இலங்கையின்; கல்விப் புலத்தில் ஒவ்வொரு வருடமும்  ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றபோது இந்நியமனங்கள் கிடைக்கப்பெறுகின்ற பாடசாலைகளுக்கு சென்று கற்பிக்கும் மனப்பாங்கு நியமனம் பெறுவோர் மத்தியில் உருவாகாமையும், வருடாந்த இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றபோது அவ்விடமாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படாமையும் என்ற இரு மனநிலைகள் சில தசாப்த காலமாக கல்விப் புலத்தில் தொடர்வதை அவதானிக்க முடிகிறது.

இந்நிலைகள் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்வதற்கான பொறிமுறைகள் காலத்திற்குக் காலம் அல்லது அரசாங்கங்கள் மாறுகின்றபோது  உருவாக்கப்பட்டிருக்கின்றபோதிலும், தலையீடுகளும், செல்வாக்குகளும் இப்பொறிமுறைகளில் தாக்கம் செலுத்துவதனால், இம்பொறிமுறைகளை நடைமுறைப்படுத்தும்போது  செல்வாக்குமிக்க ஒரு தரப்பினர்; நன்மையடகின்ற அதேவேளை மற்றுமொரு தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர். இதனால், இம்பொறிமுறைகள் கேள்விக்குள்ளாகின்றன. இவற்றின் காரணமாக இப்பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்ட முடியாத நிலை உருவாகுவது நீண்ட காலமாக அவதானிக்கக் கூடிய சவால்மிக்க விடயமாகக் காணப்படுகின்றன.

எந்தவொரு பிரச்சினையாக அல்லது சவாலாக இருந்தாலும் அதில் அனாவசிய தலையீடுகளின்றி, பிரச்சினையோடு தொடர்புபட்ட தரப்புக்களில் கணிசமானோர் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுக்கான சிறந்த பொறிமுறை ஏற்படுத்தப்படும்போது, அப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்கும். இருப்பினும,;  சிறந்ததொரு பொறிமுறையை உருவாக்குவதில் எடுக்கப்படும் முயற்சிகள் அதன் இலக்கை அடையாமலே இடைநடுவில் கைவிடப்படுகின்போது, அதன் விளைவு உரிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படாமல் அப்பிரச்சினைகள் தொடர்கதையாகும் சந்தர்ப்பம் உருவாகிறது. இந்நிலைமையே பிரச்சினைகள், சிக்கல்கள் தொடர்பான இந்நாட்டின் சரித்திர வரலாறுகளாக எழுதப்பட்ட கதையாயிற்று.

பாடசாலை ஆசிரியர்கள்

இவ்வரலாற்றுத் தொடரில் பாடசாலை ஆசிரியர்கள் எதிர்நோக்கும் இடமாற்றப்பிரச்சினைகளும் காணப்படுகின்றன. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட சகல மாகாணங்களிலும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு  இதுவரை சிறந்ததொரு பொறிமுறை உருவாக்கப்படவில்லை என்பதே ஆசிரியர் தொழிற் சங்கங்களின் குற்றச்சாற்றாகவுமுள்ளது.

ஆசிரியர் சமூகத்தின் பெரும்பாலனோர் அங்கீகரிக்கக் கூடிய ஆசிரியர் இடமாற்றத்திற்கான ஒழுங்கமைக்கப்பட்ட இடமாற்றப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு, அது தேசிய மட்டத்தில்  முன்னெடுக்கப்படுமாயின்,  ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சிக்கல் நிலைக்கானத் தீர்வை எட்டமுடிவதுடன் இடமாற்றத்தினால் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் உள ஆரோக்கியமற்ற கற்பித்தல் சூழ்நிலையிலிருந்து அவர்களை மீட்டு, உள ஆரோக்கியத்துடனான கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடிய, அவர்கள் ஈடுபடக் கூடியதொரு நிலையை உருவாக்க முடியும்.

வழமையாக ஆசிரியர்கள் மரபுகளையும் மரபு வழித்திறன்களையும் கையளித்து வந்தார்கள். ஆனால், சமகால ஆசிரியர்கள் பற்றிய எதிர்பார்ப்பு இதற்கு அப்பால் செல்கின்றது, இல்லங்களில் வழங்க முடியாத புதிய அறிவையும் திறன்களையும் வளரும் மாணவ சமுதாயத்திற்கு அறியமுகம் செய்ய வேண்டிய பொறுப்பில் ஆசிரியர்கள் உள்ளனர். இப்பொறுப்பை முன்னெடுப்பதற்கு தன்னலமற்ற தியாக மனப்பாங்குகளுக்குப்பால் கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

செய்யும் தொழில் மீது பற்றும் அதன் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணமும் இருக்கும்போதுதான், அத்தொழிலில் வெற்றியும் அதனால் சமூகத்தில் கௌரமும் கிடைக்கும். பொருளாதார விருத்தி மற்றும் பதவி உயர்வு என்பவற்றை மையமாகக் கொண்டு அவைகளுக்காக மாத்திரம் அத்தொழில் முன்னெடுக்கப்படுகின்றபோது, அதனால் வெற்றிக்குப் பதிலாக தோல்வியும் கௌரவத்திற்குப் பதிலாக அவகௌரவமுமே கிடைப்பது வரலாறுகள் கற்றுத்தரும் பாடங்களாகும்.

கல்வியமைச்சின் 2016ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் 1 ஏபி பாடசாலைகள் 1,016உம், 1சீ பாடசாலைகள் 1,805உம் வகை 2 பாடசாலைகள் 3,408உம் மற்றும் வகை 3 பாடசாலைகள் 3,993உம் என மொத்தமாக 10,162 பாடசாலைகள் உள்ளன. இப்பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கைக்ளுக்குள்ளேயே தேசிய பாடசாலைகள் 353உம் மாகாணப் பாடசாலைகள் 9,809உம் அடங்கும்.

10,162 பாடசாலைகளிலும் 2,32,555 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர். இவ்வாசிரியர் எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்கள் 99,724 பேரும் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் 127,857 பேரும் பயிற்றப்படாத ஆசிரியர்கள் 2,426 பேரும் பயிலுனர் ஆசிரியர்கள் 4,887 பேரும் ஏனைய ஆசிரியர்கள் 661 பேரும் உள்ளதாக அப்புள்ளி விபரம் குறிப்பிடுகிறது. இவற்றின் பிரகாரம் மொத்தமாகவுள்ள 353 தேசிய பாடசாலைகளில்  உள்ள 803,499 மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக 36,759 ஆசிரியர்கன் நியமிக்கப்பட்டுள்ளதோடு 9,809 மாகாணப் பாடசாலைகளில் உள்ள  3,339,831 மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக 195,864 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பணி என்பது கல்வியை மட்டும் போதிப்பதல்ல. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னத பொறுப்பும் நிறைந்ததாகும். ஏனெனில், நவீன கலாசாரத் தாக்கங்களின் காரணமாக மாணவ சமூகம் சுலபமாக வழிதவறும் வாய்ப்புக்கள் இக்காலத்தில் அதிகம் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. ஒரு சில மாணவர்கள் வழி தவறிச் சென்றுகொண்டிப்பதைப் புடம்போடும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன.

வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருத்தர் ஆசானாக இருந்திருக்கிறார்கள். அதேபோல், இன்று பாடசாலைகளில் கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் இன்றைய ஒவ்வொரு ஆசிரியரும் வாழ்வியல் வழிகாட்டிகளாக இருக்கத்தான் செய்கிறார்கள். மாறுபட்ட குணாதிசயங்கள், மாறுபட்ட சிந்தனைகள், மாறுபட்ட நடத்தைக் கோலங்களைக் கொண்ட ஒவ்வொருவரையும் காண வேண்டுமாயின் ஒரு வகுப்பறையை நோக்கினால் போதுமென்று சொல்வார்கள். அவ்வாறான மாறுபட்ட பண்புகளையுடைய மாணவர்களின் மத்தியில் எல்லோரினதும் கவனம் திசை திருப்பப்படாமல், சிந்தனைச் சிதறல்கள் ஏற்படாமல் ஓர் ஆசிரியரால்  கற்பித்தல் பணி புரிவதென்பது இலேசான கருமமல்ல.

இந்நிலையில், தவறிழைக்கும் அல்லது வகுப்பறைக் கற்பித்தலின்போது எண்ணச் சிதறல்களை ஏற்படுத்தும் மாணவர்களால் தற்காலத்தில் ஆசிரியர்கள் மிகவும் மனம் நொறுங்கிய நிலையில் தமது பணியைப் புரிகிறார்கள் என்பதையும் சமூகம் அறிந்துகொள்ள வேண்டுமென்பது முக்கியமாகும்.

இருப்பினும், ஒரு நாட்டின் எதிர்காலத் தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து பணிபுரிகின்றபோது, இத்தகைய மாணவர்களால் ஏற்படுகின்ற அழுத்தங்கள்,  சிரமங்கள் பொருட்டாக அமையாது என்பது ஒருவகை நேர்சிந்தனையாகும். அதேபோல், மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்க விழுமியமுள்ளவர்களாக இருக்க வேண்டியதும் அவசியமாகும்.  ஆசிரியர்களால் மாணவர்கள்  துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வேலியே பயிரை மேயும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலைமையை உருவாக்கியுள்ள ஒருசில  ஆசிரியர்களின் செயற்பாடுகள் ஆசிரிய சமூகத்திற்கே வரலாற்றுப் பழியாக அமைந்துவிடுகின்றன.

சமூக நம்பிக்கை

தற்காலத்தில் ஆசிரியர்கள், சமூகத்தினால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது புரிதலுக்குரியதாகும்.  பாடசாலை நேரத்தில் பாடவேளையில் தனக்குரிய நேரசூசிக்கமைய பாடங்களைக் கற்பிக்காது ‘டியுசன’; வகுப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கி பணமையக் கற்பித்தலை மேற்கொள்ளும் ஒரு சில ஆசிரியர்கள் மீதான சமூக நம்பிக்கை நலிவடைந்து செல்கிறது. இவ்வாறு கற்பிக்கும் ஆசிரியர்களினால்  ஆசிரியர் சமூகம்; பல விமர்சனங்களுக்குள்ளாகுவதையும் சுட்டிக்காட்டாமலிருக்க முடியாது.

ஆசிரியர்கள் பாடசாலை  வகுப்புக்களுக்கு தவறாமல் சமுகமளித்து அந்த வகுப்புக்களின்போது பாடங்களை முழு அவதானத்துடன் மாணவர்களுக்குப் புரியக்கூடிய வகையில் கற்றுக்கொடுப்பார்களேயானால் ஆசிரியர் மீதான சமூகத்தின் நம்பிக்கை ஆரோக்கியமானதாக அமையும்.  அவ்வாறு ஆசிரியர்கள் செயற்படுகின்றபோது மாணவர்கள் மேலதிக தனியார் வகுப்புக்களுக்கு செல்வதற்கான தேவை ஏற்படாது. வகுப்பு நேரத்தில் பாடங்களை கற்றுக்கொடுக்காமல் மாணவர்களை ‘ரியூசன்’ வகுப்புக்களுக்கு வருமாறு கோரும் ஆசிரியர்களின் பணம் சம்பாதிக்கும் ஆசையின் பொறுப்பற்ற தன்மையே இன்று ‘ரியூசன்’ வகுப்புக்கள் நாடெங்கிலும் பெருகி வருவதற்கான பிரதான காரணமாக மாறியிருக்கிறது.

மாணவர்களின் அடைவு மட்டங்களை அதிகரிக்கவும் பாடசாலையை முன்னேற்றவும் சிந்திக்க வேண்டிய, கூட்டம் கூட்ட வேண்டிய, கலந்தாலோசிக்க வேண்டிய ஆசிரிய சமூகம் பாடசாலைகளில் குழுக்களாகச் செயற்பட்டு, அப்பாடசாலையின் அதிபருக்கு எதிராகவும் பிற ஆசிரியர்களை பழிவாங்குவதற்காகவும் தங்களது பாடசாலை  நேரங்களை செலவழித்து செயற்படுவதை அறிகின்றபோது, இரத்தக் கண்ணீர் வடிக்க நேரிடுவதாக ஆசிரிய சமூகத்தை அவதானிப்பவர்கள்; கூறுவதையும் இங்கு குறிப்பிட்டுக் காட்டாமலிருக்க முடியாது.

இந்நிலையில், ஆசிரியர்கள் சிறந்த நற்பழக்கங்கள், ஒழுக்கங்கள் கொண்ட முன்மாதிரிமிக்க சமூக முன்னோடிகளாக செயற்பட வேண்டும். அப்போதுதான் ஆசிரியர் சமூகத்தின் மீதும் ஆசிரிய  தொழில் மீதும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்,  சமூகத்திற்கும் நம்பிக்கை ஏற்படும். இவ்வாறான நிலையில்தான் ஆசிரிய இடமாற்றமும், நியமனங்களும் கல்விப் புலத்தில் சவால் மிக்கதாகவும் அழுத்தங்கள் நிறைந்ததாகவும்; காணப்படுகின்றன.

கிழக்கும் ஆசிரியர் இடமாற்றமும்

ஆசிரிய இடமாற்றங்கள் ஆசிரியர்களின் உள ஆரோக்கியத்தை இல்லாமல் செய்யும் அளவிற்கு அமைந்துவிடக் கூடாது. தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்ற நியதிகளும் பொறிமுறைகளும் வேறாகவும் மாகாணப் பாடசாலை ஆசிரிய இடமாற்ற நடவடிக்கைகளும் பொறிமுறைகளும் வேறாகவும் காணப்படுகின்ற நிலைமைகளினால் ஆசிரிய இடமாற்றம் என்பது ஆசிரிய சமூகத்தின் மத்தியில் பெரும் விமர்சனங்களையும், வியாக்கியானங்களையும் உள ஆரோக்கியமற்ற கற்பித்தலுக்கான நிலைமைகளையும் உருவாக்கியுள்ளது.

இந்நாட்டிலுள்ள 9 மாகாணங்களிலும் இந்த ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினையுள்ள போதிலும், தமிழ் மொழிப் பாடசாலைகளை அதிகளவில் கொண்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆசிரிய இடமாற்றம் என்பது ஆசிரியர் தொழிலே வேண்டாம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினை அதிகம் நிகழும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தைக் குறிப்பிடலாம்.

ஆசிரியர் சமப்படுத்தல் நியதியின் கீழ் கிழக்கில் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்ற போதிலும் கிழக்கு மாகாணத்தின் எல்லா வலயங்களுக்கும் இந்நியதி சரியாகப் பின்பற்றப்படுகிறதா? என்ற கேள்விக்கு மத்தியில் சமப்படுத்தலில் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் பல சவால்களையும், அழுத்தங்களையும் உள்வாங்கிக் கொள்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தில் 437 பாடசாலைகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 123 பாடசாலைகளும், அம்பாறை மாவட்டத்தில் 357 பாடசாலைகளும் இயங்கு நிலையில் உள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தில் 8,942 ஆசிரியர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,855 ஆசிரியர்களும், அம்பாறை மாவட்டத்தில் 6,750 ஆசிரியர்களும் பணிபுரிவதாக கல்வியமைச்சின் 2016ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில், கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர் சமப்படுத்தலைக் கருதி முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய  760 ஆசிரியர்களை இவ்வருடம் இடமாற்றுவதற்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு இடமாற்றம் பெறவுள்ளவர்களுள் 313 பேர் சேவைக்காலத்தைப் பூர்த்திசெய்து சுயவிருப்பின் பெயரில் விண்ணப்பித்து இடமாற்றம் பெறுகின்றவர்கள். எஞ்சிய 447  இடமாற்றத்திற்குரிய ஆசிரியர்களும் அதிகஷ்ட மற்றும் கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றாதவர்கள் அல்லது ஏற்கனவே அக்காலத்தைப் பூர்த்தி செய்யாதவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த 447 ஆசிரியர்களில் 99 வீதமானோர் மேன்முறையீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளதுடன், இம்மேன்முறையீடானது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ள பணிப்பாளர், கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேசங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் கல்வி உரிமையைப் பெறுவதில்லையா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

பணிப்பாளாரின் கேள்வியில் நியாமில்லாமில்லை. ஏனெனில், ஆசிரியர் சேவைக்கு வருகின்ற ஒருசில ஆசிரியர்கள் தான் கல்வி கற்ற பாடசாலையில் ஆசிரியர் நியமனம் பெற்று அப்பாடசாலையிலிருந்தே ஆசிரியர் சேவையில் ஓய்வுபெறும் நோக்குடன் ஆசிரியர் சேவைக்குள் நுழைவதை இத்தகைய இடமாற்றங்களுக்கெதிராக முன்வைக்கப்படுகின்ற மேன்முறையீடுகளும் அதில் குறிப்பிடப்படுகின்ற காரணங்களும் தெளிவாகப் புலப்படுத்துகின்றன

கிழக்கு மாகாணத்தில் சேவையிலுள்ள ஆசிரியர்களை பாடசாலைகள், பாட விடயங்களுக்கு ஏற்ப சமப்படுத்துவதில் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களமும் அவற்றின் பணிப்பாளர்களும் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.   இவ்வாறானதொரு சவாலை தற்போதைய கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூரும் எதிர்கொண்டுள்ளார். கிழக்கின் ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கைகள் தொடர் சவால்மிக்கதாகவுள்ள நிலையில் இவ்வாண்டுக்கான ஆசிரியர் இடமாற்றம் சவாலாகுமா? சாத்தியமாகுமா? என்பதைப் பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.