இலங்கை முஸ்லிம் சமூகம் மிகவும் நெருக்கடியான ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்களே இதற்குக் காரணமாகும்.
கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதி வாரத்திலும் அதற்கு முன்னரான காலப்பகுதியிலும் நாட்டின் சில பாகங்களில் புத்தர் சிலைகள் உடைத்துச் சேதமாக்கப்பட்ட விடயத்தில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும். இதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மத்தியிலும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியிலும் சலசலப்பும் அச்ச நிலையும் தோற்றம் பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துருவாக்கம் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாத சக்திகள் உருவாக்கம் பெற்றுள்ளதாகவும் சர்வதேச தீவிரவாத சக்திகளுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் கதைகள் பரப்பப்படுகின்றன.
முஸ்லிம்களுக்கு எதிராக இதே பிரசாரங்கள் கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் இன்று அந்தப் பிரசாரங்களை உண்மைப்படுத்தும் வகையிலான சில நடவடிக்கைகளில் முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளமையே இந் நிலை தீவிரமடையக் காரணமாகும்.
அந்தவகையில் இலங்கை முஸ்லிம் சமூகம் மிகவும் தீர்க்கமான ஒரு கால கட்டத்தில் உள்ளது. நமது இளைஞர்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனையும் குறிப்பாக பிற மதத்தவர்களையும் அவர்களது வணக்கத்தலங்களையும் எதிர்நிலை மனப்பாங்கில் நோக்குகின்ற போக்கும் ஆங்காங்கே வளர்ந்து வருகிறது. சர்வதேச தீவிரவாத அமைப்புகளின் பிரசாரங்களினால் கவரப்பட்ட சில இளைஞர்கள் இன்று அவற்றை இந்த நாட்டில் பிரயோகிக்க முனைகின்றனர் என்பதையே சமீபத்தைய சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
இவ்வாறான தீவிரவாத சிந்தனையின் பின்னால் செல்கின்ற இளைஞர்கள் 20 முதல் 40 வயதுக்கிடைப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். துடிப்புமிக்க இந்தப் பருவத்தில் இவர்கள் எதனையும் செய்யத் துணிகிறார்கள். இதனையே இந்த சக்திகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
எனவேதான் இந்த விடயத்தில் பெற்றோரும் சமூகமும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும். தமது பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளை அணுவணுவாக கண்காணித்து நெறிப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு இன்று சகல பெற்றோரும் தள்ளப்பட்டுள்ளனர். தனது மகன் எங்கு போகிறான்? யாருடன் நேரம் செலவளிக்கிறான்? அவனது நண்பர்கள் யார்? அவனது சிந்தனைப் போக்கு என்ன? அவனது பேச்சுக்கள் செயற்பாடுகள் எவ்வாறுள்ளன? அவனது சமூக வலைத்தளப் பயன்பாடு எவ்வாறுள்ளது? மார்க்கத்தில் அவனது கொள்கை நிலைப்பாடு என்ன? என்றெல்லாம் பெற்றோர் மிகவும் தீவிரமாக விழிப்புடன் செயற்படாத வரைக்கும் இளைஞர்களை இவ்வாறான தீவிரப் போக்கிலிருந்து பாதுகாக்க முடியாது போய்விடும்.
மாவனெல்லையில் நேற்று நடந்தது நாளை வேறு பல பகுதிகளிலும் நடைபெறலாம். அதனுடன் தொடர்புபடும் இளைஞன் நமது வீட்டு, நமது குடும்பத்து பிள்ளையாகவும் இருக்கலாம். கைது செய்யப்பட்ட பின்னர் அழுது புலம்புவதை விட முன்கூட்டியே விழிப்புணர்வுடன் செயற்பட்டு அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாப்பதே புத்திசாலித்தனமானதாகும். இது விடயத்தில் பெற்றோரும் சமூகமும் விழிப்புடன் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
-Vidivelli