லக்ஷ்மன் கிரியெல்லவை பழிவாங்கும் நோக்கம் என்னிடமிருக்கவில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

0 650

அரச தொழில் முயற்சி மலைநாட்டு மரபுரிமை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அமைச்சின்  கீழ் நான்கு நிறுவனங்கள் மாத்திரம் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கி பிரசுரிக்கப்பட்டமை அமைச்சர் மீது பழிவாங்கும் முயற்சியல்ல. அந்த எண்ணத்தோடு செயற்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அரச தொழில் முயற்சி, மலைநாட்டு மரபுரிமை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சின் கீழ் பெயர் பலகைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட நான்கு நிறுவனங்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளதென  அதிருப்தி தெரிவித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதி தன்மீது பழி வாங்குவதற்காகவே இவ்வாறு 4 நிறுவனங்கள் மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்திருந்தார். அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்லவின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையிலே அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இது தொடர்பில் மேலும் விளக்கமளிக்கையில் ‘எவரையும் பழிவாங்க வேண்டிய தேவையோ அவசியமோ எனக்கில்லை. பிரதமரின் செயலகத்திலிருந்து அமைச்சுகளின் பெயர் பட்டியல் அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டது. புதிய வருடத்தில் அமைச்சுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பதால் வர்த்தமானி அறிவித்தல் அவசரமாக வெளியிடப்பட்டது.

அமைச்சர் கிரியெல்லவின் அமைச்சுக்கு நிறுவனங்கள் ஒதுக்கப்படவேண்டிய விதம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அதன்படி கலந்துரையாடல்களின் பின்பு நிறுவனங்களின் ஒதுக்கீடு இடம்பெறும்’ என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.