336 கோடி ரூபா ஹெரோயின் விவகாரம்: பிரதான சந்தேகநபர் பங்களாதேஷ் பெண்
நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்
இலங்கை முழுவதும் ஹெரோயின் விநியோகிக்கும் பாதுகாப்பு இல்லமாகவும் மத்திய நிலையமாகவும் செயற்பட்டுவந்த வீடொன்றை சுற்றிவளைத்து அங்கிருந்து 336 கோடி ரூபா பெறுமதியான 278 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை மீட்ட விவகாரத்தின் பின்னணியில் உள்ள சந்தேகநபர் பங்களாதேஷ் பெண் ஒருவரெனத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் இடம்பெறும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விசாரணைகளில் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரின் சுறறிவளைப்புக்கு முன்னரேயே அந்தப் பெண் இலங்கையை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக அது தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுள்ள குறித்த பெண் அதன் பின்னரேயே தெஹிவளை அத்திடிய வீட்டின் ‘ரிமோர்ட் கொன்ட்ரோல்’ திறப்பை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவ்வீட்டுக்கு செல்லாது கல்கிசை பகுதி வீட்டில் தங்கியிருக்குமாறு கைதான இருவருக்கும் அப்பெண்ணே ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் நம்பகரமாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
இந்நிலையில் இந்த பங்களாதேஷ் பெண் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்க வேண்டுமென சந்தேகிக்கும் பொலிஸார், அவருக்கு இலங்கையில் இந்த ஹெரோயின் சட்டவிரோத வர்த்தகத்தை முன்னெடுக்க வலையமைப்பொன்று இருந்திருக்க வேண்டுமெனத் தெரிவிக்கின்றனர். அதன்படி அவ்வலையமைப்பின் இலங்கை உறுப்பினர்களை அடையாளம் காணவும் அவர்களைக் கைது செய்யவும் தற்போது சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் கைதான இரு பங்களாதேஷ் பிரஜைகளிடமும் தடுப்புக்காவலில் நீண்ட விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி எம்.ஆர். லத்தீபின் நேரடிக் கட்டுப்பாட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ மெதவத்த, அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலக் சமிந்த தனபால ஆகியோரின் வழி நடத்தலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லூடவைட்டின் கீழான சிறப்புக் குழுவினரால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் போதைப்பொருள் பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார், தெஹிவளை வீட்டிலிருந்து இறுதிநிலை போதைப்பொருள் பயன்பாட்டாளர்களுக்கு பயன்படுத்தும் வகையில் இரசாயனங்களுடன் கலக்கப்படுவதாக நம்புகின்றனர். இலங்கையில் சாதாரணமாக வீதிகளில் கைதாகும் போதைப் பொருள் பயன்படுத்துவோரிடமிருந்து மீட்கப்படும் ஹெரோயின் போதைப் பொருளில் 10 வீதமே சுத்தமான ஹெரோயின் அடங்கியிருக்கும் என்று சுட்டிக்காட்டிய விசாரணைகளுக்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், எனினும் தெஹிவளை வீட்டில் மீட்கப்பட்ட ஹெரோயினில் 85 வீதமான சுத்தமான ஹெரோயின் இருப்பதாகக் குறிப்பிட்டார். இந்நிலையில் அதனை கடைநிலை போதைப்பொருள் பயன் படுத்துவோருக்கு ஏற்ற விகிதத்தின் அடிப்படையில் அந்த வீட்டிலிருந்தே தயார் செய்யப்பட்டு நாடு முழுதும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார். கடந்த டிசெம்பர் 14 ஆம் திகதி நுகேகொட – பாகொட பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியிலிருந்து மீட்கப்பட்ட 1 கிலோ நிறையுடைய ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் டிசெம்பர் 15 ஆம் திகதி ரத்மலானையில் கைதான பங்களாதேஷ் பெண்ணிடமிருந்து ஒரு கிலோ மற்றும் ரத்மலானை பகுதியில் குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து 31 கிலோ நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டன.
இவையனைத்தும் கேக் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி மீட்கப்பட்ட ஹெரோயினும் கேக் பெட்டிகளிலேயே சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இவையனைத்தும் ஒரே வலையமைப்பின் போதைப்பொருள் என்பதையும், கைதான பங்களாதேஷ் பிரஜைகள் இருவரும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு உறுப்பினர்கள் என்பதையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்கின்றனர்.
இலங்கை வரலாற்றில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஒருகொடவத்தை பகுதியில் வைத்து சுங்கப் பிரிவு மற்றும் பொலிஸ் போதைத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 261 கிலோ நிறையுடைய ஹெரோயின் தொகையே இலங்கையில் மீட்கப்பட்ட அதிகூடிய தொகை கொண்ட போதைப்பொருளாக கடந்த வருடத்தின் இறுதிநாள் வரை காணப்பட்டது.
எனினும், தெஹிவளையில் 278 கிலோ நிறையுடைய 336 கோடி ரூபா பெறுமதிவாய்ந்த ஹெரோயின் மீட்கப்பட்ட நிலையில் தற்போது அதுவே இலங்கையிலிருந்து மீட்கப்பட்ட அதிகூடிய ஹெரோயின் தொகையாகக் கருதப்படுகின்றது.
-Vidivelli