அரசியல் நெருக்கடி நிலையினாலேயே தனியார் சட்ட திருத்தம் தாமதம்
விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை என்கிறார் அமைச்சர் தலதா
முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்த சட்டமூலத்தின் பணிகள் கடந்தகால அரசியல் நெருக்கடி நிலையினாலேயே பிற்படுத்தப்பட்டுள்ளன. அதனை துரிதமாக நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுப்பேன் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்தச்சட்ட மூலம் தொடர்ந்து தாமதித்து வருவது தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில்,
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பாக ஆராய 2009 ஆம் ஆண்டு நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொரகொட குழுவொன்றை அமைத்திருந்தார். பல்வேறு காரணங்களில் குறித்த குழுவின் அறிக்கை பிற்படுத்தப்பட்டு வந்தது. என்றாலும் நான் நீதியமைச்சை பொறுப்பேற்ற பின்னர் இதுதொடர்பாக பலதரப்பினரும் என்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க குழுவின் அறிக்கையை துரிதமாகக் கையளிக்குமாறு கேட்டிருந்தேன்.
அதற்கிணங்க குழுவின் தலைவராக செயற்பட்ட ஜனாதிபதி சடத்தரணி சலீம் மர்சூப் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். என்றாலும் குறித்த அறிக்கையில் ஒருசில விடயங்களில் குழுவிலிருந்த உறுப்பினர்கள் மத்தியில் இணக்கப்பாடு இருக்கவில்லை. அதனால் அதுதொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலருடன் கலந்துரையாடல் நடத்தி பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருமாறு நான் கேட்டிருந்தேன்.
என்றாலும் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதன் பின்னர் கடந்த நவம்பர் மாதத்துக்குள் அதன் பணிகளை நிறைவடையச்செய்ய நடவடிக்கை எடுத்திருந்தேன். என்றாலும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் சதித்திட்டம் காரணமாக அதனை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போனது. தற்போது மீண்டும் நான் நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம் விவாக விவாகரத்து திருத்தச்சட்டம் தொடர்பான நடவடிக்கைகளை நிறைவுக்கு கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன். நான் முஸ்லிம் அல்லாதவர் என்பதால் எனக்கு ஒரு தீர்மானத்தை எடுக்க முடியாமல் இருக்கின்றது.
எனவே, குறித்த குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சலீம் மர்சூப் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விரைவில் கலந்துரையாட நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அத்துடன் இந்த விடயத்தை மேலும் காலதாமதமாக்க இடமளிக்க முடியாது என்றார்.
-Vidivelli