ஐக்கிய நாடுகள் ஆதரவுடனான சோமாலியப் படைகளின் செயற்பாடுகள் குறித்து கவலை வெளியிட்டு சில நாட்களின் பின்னர் தேசிய இறைமையில் தலையிடுவதாகத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்டத் தூதுவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு சோமாலிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
சோமாலியாவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதியான நிக்கொலஸ் ஹெயிஸம் இந்நாட்டுக்கு அவசியமில்லை, அவரது சேவை தேவையுமில்லை என கடந்த செவ்வாய்க்கிழமை வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.
சோமாலியாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் உரிய நடத்தைகளை அப்பட்டமாக மீறியதால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெயிஸம் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி உள்துறைப் பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ஆதரவுடனான சோமாலியப் படையினரால் முக்தார் ரோபொவ் கைது செய்யப்பட்டமை, 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் 15 பேர் கொல்லப்பட்டமை மற்றும் டிசம்பர் , 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 300 இற்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டமை என்பன தொடர்பில் கவலை தெரிவித்திருந்தார்.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தனிநபர் முக்தார் ரோபொவ் என்பவர் அல்-ஷபாப் ஆயுதக் குழுவின் முன்னாள் உறுப்பினராவார். அவர் கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தல் மூலம் பிராந்தியத் தலைவராவதற்கு முயன்றார் எனினும் அம்முயற்சி தடுக்கப்பட்டது.
அவர் தலைமைத்துவப் பதவிக்குப் போட்டியிடும் தென்மேற்குப் பிராந்தியத் தலைநகரான பைதேஆ தெற்கு நகருக்கு ஆயுதங்களையும், போராளிகளையும் அழைத்து வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என உள்துறைப் பாதுகாப்பு அமைச்சு தெரிவிததுள்ளது.
அவரது கைதைத் தொடர்ந்து அவருக்கு விசுவாசமாக ஆயுததாரிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சேமாலியாவிலுள்ள ஆபிரிக்க ஒன்றிய அமைதிகாக்கும் படையினரான எத்தியோப்பிய பாதுகாப்புப் படையினரும் இதனோடு இணைந்து கொண்டனர். இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.
-Vidivelli