முஸ்லிம் ஆசிரியைகள் ‘அபாயா’ வுடன் மீண்டும் ஷண்முகா கல்லூரி சென்றனர்

மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் விரைவில்

0 797

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு அபாயா அணிந்து கொண்டு சென்ற 4 முஸ்லிம் ஆசிரியைகளுக்கு பாடசாலை நிர்வாகம் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட முஸ்லிம் ஆசிரியைகள் கடந்த 9 மாத காலமாக தற்காலிக இடமாற்றத்தில் இருந்து வந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் குறித்த பாடசாலைக்கு அபாயா அணிந்து கடமைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

ஆசிரியைகளான பாத்திமா பஹ்மிதா ரமீஸ், சஜானா பாபு முஹம்மத் பசால், சிபானா முஹம்மத் சபீஸ்,ரஜீனா ரோஷான் ஆகியோரே நேற்று வழமைபோன்று இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் அபாயா அணிந்து ஷண்முகா இந்துக் கல்லூரியில் மீண்டும் கடமையேற்றனர்.

குறித்த ஆசிரியைகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்ததைத் தொடர்ந்து இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவை நிறைவுக்கு வந்துள்ளன. இது தொர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகள்  இன்னும் சில நாட்களில் வெளியிடப்படவுள்ளன.

இந் நிலையில் தற்காலிக இடமாற்றத்தல் இருந்த சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றக் காலக்கெடு சென்ற டிசம்பர் 31 ஆம் திகதியோடு முடிவுற்ற நிலையில் மீண்டும் ஷண்முகா இந்துக் கல்லூரியில்  நேற்று முதல் கடமையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஷண்முகா ஹபாயா சர்ச்சையின் ஆரம்பத்தில் இருந்து ‘குரல்கள் இயக்கம்’ சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்குத் தேவையான தொழில் நுட்ப மற்றும் சட்ட ஆலோசனைகளையும் வழங்கி வந்தது. ‘குரல்கள் இயக்க’ உறுப்பினர்களான சட்டத்தரணிகள் அஸ்ஹர் லதீப், ரதீப் அஹ்மத் ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளில் ஆசிரியைகள் சார்பாக வாதங்களை முன்வைத்தனர். இந் நிலையிலேயே 9 மாதங்களின் பின்னர் குறித்த ஆசிரியைகள் மீண்டும் அபாயா அணிந்து அதே பாடசாலைக்கு கடமைக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.