இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ள நிலையில் கூரை வரை புதையுண்டுள்ள டசின் கணக்கான வீடுகளை மூடியுள்ள களி மண்ணைத் தோண்டி மேலும் உடல்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டு வருகின்றனர்.
மோசமான காலநிலை காரணமாக ஒரு நாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீட்புப் பணிகள் கடந்த சுகாபூமி மாவட்டத்தில் அமைந்துள்ள சேர்னாரெஸ்மி கிராமத்தில் புதன்கிழமை மீண்டும் ஆரம்பமானது.
கடந்த திங்கட்கிழமை மாலை வேளையில் 30 வீடுகளைத் தாக்கிய மண்சரிவினால் புதையுண்டதாக நம்பப்படும் இருபது கிராமவாசிகளைத் தேடும் நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தோனேசியாவின் அனர்த்த முகாமைத்துவ முகவரகத்தின் பேச்சாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 101 பேரில் 63 பேர் பாதுகாப்பாக உள்ளதாகவும் மூவர் காயடைந்துள்ளதாகவும் நுக்ரோஹோ தெரிவித்துள்ளார்.
மேலும் சிறியளவிலான நான்கு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. கடுமையான மழை பெய்யும்போது இறுக்கமற்றுக் காணப்படும் மண் மீட்புப் பணியாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மலைப்பாங்கான வலயத்தில் அமைந்துள்ள சேர்னாரெஸ்மி கிராமம் மண்சரிவு ஆபத்தைக் கொண்டதாகும். இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் மண்ணியல் அனர்த்த முன்னாயத்த முகவரகத்தின் தரவுகளின் பிரகாரம் சுகாபூமி மாவட்டத்திலுள்ள 33 உப மாவட்டங்கள் இடைநிலை தொடக்கம் உயர்நிலை வரையான மண்சரிவு ஆபத்துக்களைக் கொண்டவையாகும்.
-Vidivelli