பாரிய கூட்டணி அமைக்க சுதந்திர கட்சி தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு அழைப்பு

0 651

பாரிய கூட்டணி அமைத்து தேர்தலுக்கு முகம்கொடுக்கத் தயாராகி வருகின்றோம். அதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றோம். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புக் குழுக்கள் அனைத்தையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவிருக்கும் தேர்தல்களுக்கு முகம்கொடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த வருடத்தில் ஆரம்பமாக மாகாணசபை தேர்தல் இடம்பெற இருக்கின்றது. அதன் பின்னர் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். அதனையடுத்தே பொதுத்தேர்தல் இடம்பெறவிருக்கின்றது. எந்த தேர்தல் ஆரம்பத்தில் இடம்பெற்றாலும் அதற்கு முகம்கொடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார் நிலையில் இருக்கின்றது. என்றாலும் நாங்கள் பாரிய கூட்டணி அமைத்துக்கொண்டு தேர்தலுக்கு செல்லவே ஆலோசித்து வருகின்றோம்.

அத்துடன் எமது கூட்டணியில் இணைந்துகொள்ளுமாறு தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் அவர்களின் நிலைப்பாட்டை  அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை நாட்டின் பொருளாதாரத்துக்கு பொருத்தமில்லை.  எமது வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பதற்கு இடமளிக்க முடியாது.

அதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை இணைத்துக்கொண்டு பாரிய கூட்டணியாக செல்வதன் மூலமே நாட்டின் எதிர்காலம் மற்றும் அபிவிருத்து நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளலாம். நாட்டின் மீது ஆதரவுள்ள அனைவரும் எமது கூட்டணியில் இணைந்துகொள்ளலாம்.

அத்துடன் பொதுஜன பெரமுன கட்சியும் கூட்டணி அமைத்தே எதிர்வரும் தேர்தல்களுக்கு செல்லத் தீர்மானித்திருப்பதாக பசில் ராஜபக் ஷ தெரிவித்திருந்தார். கூட்டணியின் சின்னம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றபோதும் கட்சிகளின் பிரதான உறுப்பினர்களுடன் இதுதொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வரலாம் என்ற நம்பிக்ககை எமக்கிருக்கின்றது. ஏனெனில் பொதுஜன பெரமுன கட்சியின் சில உறுப்பினர்கள் மொட்டு சின்னத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் என தெரிவிக்கின்ற கருத்துக்கள், ஊடகங்களில் தங்களின் கருத்துக்கள் வரவேண்டும் என்பதற்காகும்.

அதனால் எதிர்வரும் தேர்தல்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வாறு முகம்கொடுப்பது தொடர்பான தீர்மானங்களை இன்று இடம்பெற இருக்கும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராயவிருப்பதுடன் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கவிருக்கின்றது என்றார்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.