- ஏ.ஜே.எம்.நிழாம்
1984 ஆம் ஆண்டு திம்புவில் நிகழ்ந்த இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் அரசு, தமிழ் ஆயுதப் போராளிகளோடு மட்டுமே பேசியது. ஜனநாயக தமிழ்த் தலைவர்களை அழைக்கவில்லை. முன்பு ஜனநாயக தமிழ் தலைவர்களைப் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றிய அரசு, தமிழ் ஆயுதப் போராளிகளோடு பேசியது காலத்தின் கோலம்தான். ஜனநாயக தமிழ்த் தலைவர்களையே தவிர்த்த அரசு முஸ்லிம்களை தவிர்த்ததில் வியப்பு இல்லை. அரசு தானாக முஸ்லிம்களோடு பேசாமல் 1985 ஆம் ஆண்டு பெங்களூரில் தமிழ் ஆயுதப் போராளிகளோடு முஸ்லிம்களைப் பேசவைத்தது ஏன்? அரசு முஸ்லிம்களைத் தவிர்த்துவிட்டு முஸ்லிம்களின் விடயங்களைத் தாரைவார்த்து இந்தியாவுடன் 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது ஏன்?
முஸ்லிம்களும் சிங்களவரே எனும் கணிப்பா? உரிமை இல்லாததால் உரிமை கோர மாட்டார்கள் எனும் நினைப்பா? பூர்வீகமற்றோர் எனும் நினைப்பா? கொடுக்காவிட்டாலும் சமாளிக்கலாம் எனும் இளக்காரமா? பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு உரிமை கோராதோர் எனும் மதிப்பீடா? இலங்கை முஸ்லிம்கள் அரபுத் தந்தைகளும் சிங்களத் தாய்மாரும் இணைந்த கலப்பு எனும் பழங்கதையால் உருவான மனப்பதிவா?
சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்குப் பல மாகாணங்களும் பல மாவட்டங்களும் இருக்கையில் முஸ்லிம்களுக்கு ஒரு மாவட்டமும் இல்லை. முஸ்லிம்கள் தனித்துவச் செறிவோடு வாழும் சிறு பிரதேசமும் இல்லை. இது ஏன்? முஸ்லிம்கள் பூர்வீக சுதேசிகள் இல்லையா? அதனால்தான் இன ரீதியிலான அதிகாரப் பரவலில் பிரதேசப் பகிர்வும் முஸ்லிம்களுக்கு அமைய வேண்டும் என்பதை அஷ்ரப் வலியுறுத்திக் கரையோர மாவட்டக் கோரிக்கையையும், முஸ்லிம் அதிகார அலகையும் முன்வைத்தார். இவற்றின் மூலமே இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றுரிமையையும், வாழ்வாதாரமும், சம உரிமையும், சுய நிர்ணயமும், இறைமையும், அடிப்படை உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும். இன்றேல் முஸ்லிம்கள் தேசிய உரிமைக்கான அங்கீகாரத்தை இழந்து சொந்தமில்லா நாட்டில் அண்டி வாழும் ஒரு சிறுகுழுவினராகவே வாழும் நிலை ஏற்பட்டு விடும்.
அஷ்ரப் முதலில் வடக்கு – கிழக்கு – முஸ்லிம் பகுதிகளை உள்ளடக்கிய நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அதிகார அலகு தேவை என்றார். பிறகு கிழக்கில் மட்டுமே நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அதிகார அலகு தேவை என்றார். அதற்கு தென்னிந்திய புதுச்சேரி மாகாணத்தை உவமை காட்டினார். தமிழ்ப் பகுதிகளை வடகிழக்கு எனவும் முஸ்லிம் பகுதிகளை தென் கிழக்கு எனவும் அடையாளப்படுத்தினார். பின்னர் தமிழ்த் தரப்பினரோடு எப்படியும் இணக்கம் கண்டேயாக வேண்டும் எனும் நோக்கோடு சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியதாக முஸ்லிம் அதிகார அலகைக் கோரினார். 1988 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டுவரையிலும் அதாவது அவர் மரணிக்கும்வரை முதற்கோரிக்கையான கரையோர மாவட்டம் கிடைக்கவேயில்லை. இறந்தும் தற்போது 18 ஆண்டுகள் கழிகின்றன. எனினும் அது கிடைக்கவேயில்லை.
மாவட்ட ரீதியில் அரச செயற்பாடுகளை அமுலாக்கவே மாவட்ட சபைகள் இயங்குகின்றன. அதிலும் கூட ஒரு முஸ்லிம் மாவட்ட சபை இன்னும் கிடைத்த பாடில்லை. திகாமடுல்ல எனும் சிங்கள மாவட்டம் முன்பு முஸ்லிம்கள் மட்டுமே செறிவாக வாழ்ந்த பிரதேசம் இது. திட்டமிட்டு பெரும்பான்மைச் சமூகத்தைக் குடியமர்த்தி அபகரித்துக் கொண்டதேயாகும். இக்குடியேற்றங்கள் மேலும் தொடர்வதால் தற்போது கிழக்கில் மூன்றில் ஒரு பங்கினராகப் பெருகியிருக்கும் அவர்கள் எதிர்காலத்தில் தமிழர் பூர்வீக பிரதேசங்களை இழப்பதோடு முஸ்லிம்கள் தேசிய அடையாளத்தை இழப்பார்கள்.
இந்நிலையில் முஸ்லிம் தலைவர்கள் செயலற்றிருந்தார்கள். அதனால்தான் ஜே. ஆரின் நிறைவேற்று அதிகாரத்தாலும் வடக்கு கிழக்கு தமிழ் ஆயுதப் போராளிகளாலும் முடக்கப்பட்ட கிழக்கு முஸ்லிம்களுக்காகவே அஷ்ரப் தனித்துவ முஸ்லிம் அரசியல் கட்சியை உருவாக்கினார். கிழக்கு முஸ்லிம்களால் தனித்து நின்றும் மட்டுமே போதிய வலிமையைப் பெற்றுவிட முடியாது எனக்கருதியே முழு நாட்டுக்குமாக அதை விஸ்தரித்தார். அம்பாறை மாவட்டத்தில் மட்டுமே முஸ்லிம்கள் திரளாக வாழ்வதால் அதை முன்னிலைப்படுத்தியே இலங்கை முஸ்லிம்களுக்கான சுயநிர்ணய உரிமையையும் இறைமையையும் வகுத்தார். இதனால்தான் கிழக்கு, இலங்கை முஸ்லிம்களின் நெஞ்சு என்றால் அம்பாறை மாவட்டம் இதயம் எனவும் உவமித்திருந்தார்.
இவற்றின் அடிப்படையிலேயே அவரது கரையோர மாவட்டக் கோரிக்கையும் முஸ்லிம் அதிகார அலகுக் கோரிக்கையும் அமைந்திருந்தன. நாடு முழுக்க வாழ்ந்த முஸ்லிம்கள் இவற்றை அங்கீகரித்திருந்தனர். சிங்களவருக்கு 7 மாகாணங்களும் தமிழருக்கு 2 மாகாணங்களும் இருக்கையில் முஸ்லிம்களுக்கு சிறு பிரதேசமும் இல்லாதிருந்தது அநீதம். சிங்களவருக்கு 18 மாவட்டங்களும் தமிழருக்கு 7 மாவட்டங்களும் இருக்கையில் முஸ்லிம்களுக்கு ஒரு மாவட்டமேனும் இல்லாததும் அநீதம் என்றெல்லாம் அஷ்ரப் கூறியதை இலங்கை முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொண்டது. முன்பு முஸ்லிம்களுக்கு அமைய வேண்டியிருந்த ஒரேயொரு மாவட்டம்தான் சிங்களப் பேரினவாதிகளின் திட்டமிட்ட குடியேற்றங்களால் அபகரிக்கப்பட்டு திகாமடுல்ல எனப் பெயரிடப்பட்டது எனவும் அவர் கூறி கரையோர மாவட்டத்துக்கான அங்கீகாரத்தையும் கோரினார்.
ஆக, நிறைவேற்று அதிகாரத்தாலும், ஆயுத முனைப்பாலும், நிராயுத இலங்கை முஸ்லிம்கள் மேலும் சிதறுண்டு போகாதிருக்கவே கிழக்கில் ஒரே பகுதியில் பாதுகாப்போடு திரளாக வாழ்ந்து கொண்டு பூர்வீகத்தையும், வாழ்வாதாரத்தையும், சுய நிர்ணயத்தையும், இறைமையையும் பாதுகாத்துக்கொள்ள அஷ்ரப் முஸ்லிம் அதிகார அலகுக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
கிழக்கு வடக்கோடு இணைக்கப்பட்டால் மட்டுமே கிழக்கில் முஸ்லிம் அதிகார அலகு எனவும் அவர் நிபந்தனை விதித்திருந்தார். சிங்களத் தரப்பு பிரித்துவைப்பதையே வலியுறுத்துகிறது. கிழக்கு தனியாக இருந்தால் மத்திய அரசின் ஆதிக்கத்தை வலுப்படுத்தலாம் எனவும் பேரினக் குடியேற்றங்களை முழுமையாக நிறைவு படுத்தலாம் எனவும் தமிழரின் வலுவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம் எனவும் அது கருதுகிறது.
தமிழ்த் தரப்பு இணைப்பையே விரும்புகிறது. கிழக்கைத் தனியாகவிட்டால் காலப் போக்கில் பேரினவாதம் திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் அதைக் கபளீகரம் செய்துவிடும். பின்பு அங்கிருந்து பெருவலிமை பெற்று வடக்கு கிழக்கில் ஆதிக்க இருப்பை ஆழமாக விதைக்கும். அதன் மூலம் தமிழரின் வாழ்வாதாரங்களையும் சுய நிர்ணயத்தையும் இறைமையையும் முடக்கும் என்றெல்லாம் தமிழ்த் தரப்பு கருதுகிறது.
இது “பூனைக்கு விளையாட்டு எலிக்கு சாவு” எனும் நிலையாகும். இரண்டு தரப்புகளுமே முஸ்லிம்களைப் பற்றி நினைப்பதாக இல்லை. ஒருவகையில் தமிழ்த் தரப்புக்கே அஷ்ரபின் கோரிக்கை வாய்ப்பாக இருக்கிறது. கிழக்கில் சிறு பகுதியை முஸ்லிம் அதிகார அலகாக ஏற்று மற்ற பகுதி முழுவதையும் வடக்கோடு இணைத்துக் கொள்ளலாம் அல்லவா?
அதனால் பேரின திட்டமிட்ட குடியேற்றங்களை விட்டும், பேரின ஆதிக்கத்தை விட்டும், சுய நிர்ணய இறைமைக்குரிய முட்டுக்கட்டையை விட்டும் தமிழ்த் தரப்பு தன்னைக் காத்துக்கொள்ள முடியும். 1957 ஆம் ஆண்டு நிகழ்ந்த திருமலையின் தமிழரசுக் கட்சி மாநாட்டிலும், அதே ஆண்டு நிகழ்ந்த பண்டா –செல்வா ஒப்பந்தத்திலும் முஸ்லிம் அலகு குறிக்கப்பட்டே இருக்கிறது. இவை சமஷ்டியை தமிழ்த் தரப்பு முன்னெடுத்த கால கட்டமாகும். சுய நிர்ணயத்தையும் தனி இறைமையையும் முன்வைத்த 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிறகே கிழக்கை முழுமையாகவே வடக்கோடு இணைக்கும் முடிவு காணப்பட்டிருந்தது.
1957 ஆம் ஆண்டின் திருமலை மாநாட்டில் கிழக்கை வடக்கோடு இணைத்து முஸ்லிம் அலகு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தபோதும் பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் வடக்கை வேறாக்கி கிழக்கில் தமிழ் அலகு, முஸ்லிம் அலகு சிங்கள அலகு எனக் குறிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் சமஷ்டித் தீர்வில் முஸ்லிம் அலகு எனும் உறுதிப்பாடு இருந்திருப்பது புலனாகிறது. இதே நிலைப்பாடு சுயநிர்ணய தனி இறைமைக் கோட்பாட்டிலும் இருக்கும் எனக் கருதித்தான் அஷ்ரப் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டிலும் கலந்துகொண்டு ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
ஆரம்பத்தில் அந்த நிலைப்பாடு காணப்பட்டபோதும் ஜனநாயக தமிழ்த் தலைவர்களை முடக்கி தமிழ் ஆயுதப் போராளிக்குழுக்கள் தலைதூக்கியதும், வடக்கு கிழக்கு இணைப்பு வலியுறுத்தப்பட்டு முஸ்லிம் அதிகார அலகுக் கோரிக்கை மறுக்கப்பட்டது. தமிழ் ஆயுதப் போராளிகள் முஸ்லிம்களின் அரசியல் முன்னெடுப்புகளையும் முடக்கினார்கள். தடைசெய்தார்கள். சிங்களத் தரப்புக்கு அரசு பூரண பாதுகாப்பை வழங்கியது. முஸ்லிம்களுக்கு ஊர்காவல் படையை மட்டுமே வழங்கியிருந்தது.
அஷ்ரப் கரையோர மாவட்டக் கோரிக்கையை முன்வைத்து இற்றைக்கு 30 வருடங்களாகின்றன. அதாவது கால்நூற்றாண்டும் கழிந்துவிட்டது. எங்கே அது? அதை மீட்டெடுக்க அஷ்ரபின் அடிச்சுவட்டில் வந்தவர்களால் ஏன் முடியாமற் போனது? யார் இதற்குத் தடை? யாழ். மாவட்டத்திலிருந்து கிளிநொச்சி மாவட்டமும் முல்லைத்தீவு மாவட்டமும் அமைய முடியுமாயின் ஏன் கிழக்கில் கரையோர மாவட்டம் அமைய முடியாது? முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தனி மாவட்டம் இருக்கக்கூடாது என்பது தானே இதற்கான அர்த்தம்? சிங்களப் பேரினவாதமும் தமிழ்ப் பேரினவாத முமே இதற்குக்காரணமாயின் அதற்கு அடிபணியாது முஸ்லிம்கள் தமது அடிப்படை உரிமைகளை முன்னெடுத்தாக வேண்டும்.
அண்மையில் நிகழ்ந்த தொகுதி நிர்ணயத்தின்போது அப்பகுதியிலுள்ள மூன்று முஸ்லிம் தேர்தல் தொகுதிகளிலிருந்தும் பல பகுதிகளைப் பிரித்தெடுத்து மூன்று சிங்கள தேர்தல் தொகுதிகளை உருவாக்க முயன்றார்கள். இவர்களின் திட்டம்? இலங்கையிலேயே முஸ்லிம்கள் திரளாக வாழும் அப்பகுதியில் முஸ்லிம்களின் வலுவைக் குறைத்துவிடுவதேயாகும். இது சாத்தியப்பட்டிருக்குமாயின் முழு இலங்கையிலும் முஸ்லிம்கள் ஒரே பிரதேசத்தில் திரளாக எங்கும் வாழாது சிதறும் நிலையே ஏற்பட்டிருக்கும். இலங்கை முஸ்லிம்களின் தொன்மையும், சுயநிர்ண இறைமையும், வாழ்வதாரமும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே ஆகியிருக்கும். அஷ்ரபின் அடிச்சுவட்டில் வந்தவர்கள் இதை எதிர்க்கவில்லை என்பதே பெரும் சோகம்.
யுத்தம் முடிவுற்ற பிறகு பிரிவினை கோரமாட்டேன் என தமிழ்த் தரப்பு சார்பாக சம்பந்தன் உயர்நீதிமன்றத்தில் சபதம் செய்திருந்தார். அவர் ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டு தீவிரவாதத்தை எதிர்த்து ஒரே நாட்டுக்குள் சமஷ்டித் தீர்வைப் பெற்று வாழவும் ஒப்புக்கொண்டிருக்கிறார். சமஷ்டி முறை யாப்புக்கு முரணல்ல எனவும் உயர்நீதிமன்றம் பொருட்கோடல் செய்திருக்கிறது. எனவே சமஷ்டி முறையில் தந்தை செல்வா உத்தரவாதப்படுத்திய முஸ்லிம் அலகை தமிழ்த் தரப்பு ஏற்றுக் கொள்வதில் தடையில்லை.
*தம்மை விடவும் பெரிய சமூகத்திடமிருந்து உரிமை கோரும் சமூகம் தம்மை விடவும் சிறிய சமூகத்துக்கு அதை உத்தரவாதப்படுத்தாதிருப்பது மனுநீதியல்ல.
*ஓர் இனத்தை அதன் விருப்புக்கு மாறாக வலுக்கட்டாயமாக மறு இனம் ஆள முடியாது.
*சிறுபான்மைகள் தமக்குள் முரண்பட்டு நின்றால் பேரினவாதிகளுக்கே அது வாய்ப்பாகிவிடும்.
*சிறுபான்மைகள் இணைந்து செயற்பட்டால் பேரினவாதத்தை முறியடிக்கும் வலிமையை அதிகமாகப் பெறலாம்.
*சிறுபான்மைகள் முரண்பட்டால் பேரினவாதம் பிரித்தாளும் கொள்கையைக் கையாண்டு தனது இலக்கைச் சுலபமாக அடைந்து கொள்ளும்.
*ஒரே சமயத்தில் இரு தரப்பினரை எதிரிகளாக்கிக் கொள்ளாமல் இரு தரப்பினரும் இணைந்து ஒரு தரப்பாகத் தனித்து வைத்து எதிர்கொள்ள வேண்டும்.
*ஒரு தரப்பை மறுதரப்போடு சேர்த்துவிடாமல், இணக்கமாகும் தரப்பை இணைத்துக் கொண்டு மறுதரப்பை எதிர்கொள்ள வேண்டும்.
இன்றேல் தமிழரும் முஸ்லிம்களும் தமது அடிப்படைத் தளமான கிழக்கைப் பறிகொடுத்து விடுவார்கள். தற்போதும்கூட தமிழரும் முஸ்லிம்களும் சேர்ந்து மூன்றில் இரண்டு பங்கினராக அங்கு வாழ்ந்து வருகையில் மாவட்ட செயலாளராக ஒரு பெரும்பான்மைச் சமூகத்தவரே செயற்படுகிறார். மாவட்ட ரீதியில் இரு பங்கினர் தமிழ் மொழியைப் பேசுகையில் சிங்களம் பேசும் ஒரு பங்கினருக்காக சிங்கள மொழி பேசுபவரே நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ் பேசும் தமிழர்களும் முஸ்லிம்களும் இரு பங்கினராக இருக்கையில் ஏன் இந்த பாரபட்சம்? இது முழு கிழக்கையும் சுலபமாகப் பேரின மயப்படுத்தும் முனைப்போ?
எனவே தமிழரும் முஸ்லிம்களும் இணைந்து ஒரு முகப்பட்டு செயற்பட்டாலன்றி எதிர்காலத்தில் அவர்களுக்கு கிழக்கில் ஒன்றுமே எஞ்சாது. பேரினவாதத்தின் கபளீகரத்திலிருந்து இருதரப்பினரும் கிழக்கை மீட்பதெனில் ஒன்றுபட்டேயாக வேண்டும். கிழக்கு முஸ்லிம்களின் சுய விருப்புடனன்றி ஒருபோதும் கிழக்கு வடக்கோடு இணைக்கப்படப் போவதில்லை.
வலுக்கட்டாயமாக முஸ்லிம்களைப் பகைத்துக் கொண்டு ஒரு தலைப்பட்சமாக இணைத்துவிடவும் முடியாது. முஸ்லிம்களின் அபிலாசைகளைக் கோராமல் ஆயுத முனையில் தமிழ்ப் போராளிகள் கிழக்கை வடக்கோடு இணையவிட்டதாலும் இந்தியா அதற்கு உடந்தையாக இருந்ததாலும் தமிழ் ஆயுதப் போராளிகள் தற்காலிக இணைப்பு காலத்தில் முஸ்லிம்களோடு நடந்து கொண்ட முறைகளாலுமே இணைப்பை முஸ்லிம்கள் வெறுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் தரப்பு ஆயுத மனப் போக்கிலும் தனி இறைமை நினைப்பிலும் ஆயுதமற்ற சுயேச்சை மாற்றத்துக்குப் பின் இருப்பார்களாயின் முஸ்லிம்களின் இணக்கப்பாட்டை ஒரு போதும் பெற்றுக்கொள்ள முடியாது. தற்போதும் கூட தமிழ்தரப்பு முஸ்லிம்களைக் கலந்து கொள்ளாமல் தனது கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்திருக்கிறது. இதன் மூலம் முஸ்லிம் தரப்பும் தனது கோரிக்கைளைத் தனியாக அரசிடம் முன்வைக்கும் நிலைப்பாட்டை ஏற்படுத்திவிட்டது. முஸ்லிம் தரப்பும் கூட தமிழ்த் தரப்பை நம்பாது நேரடியாக அரசுடனேயே பேசிக் கொண்டிருக்கிறது. முத்தரப்பாக அரசுடன் சேர்ந்து இரு தரப்பும் பேசிக் கொள்ள வேண்டும்.
அரசு தமிழ்த் தரப்பினரோடும் முஸ்லிம் தரப்பினரோடும் இணக்கம் காணும் வகையிலும் தமிழ் முஸ்லிம் தரப்புக்கள் அரசுடன் இணக்கம் காணும் வகையிலும் முடிவு அமையவும் வேண்டும். ஒருவரைத் தவிர முஸ்லிம் தனித்துவக்கட்சிகள் தனிச் சின்னத்தோடு பாராளுமன்றத்தில் இல்லை தமிழ் தனித்துவக் கட்சிகள் தனிச் சின்னதோடு இருக்கிறார்கள். முஸ்லிம் தனித்துவக் கட்சிகள் அமைச்சரவையிலும் இருக்கின்றன. தனித்துவத் தமிழ்க்கட்சி அமைச்சுப் பதவி வேண்டாம் எனக் கூறி அரசின் இருப்பைத் தக்கவைத்து கோரிக்கைகளையே நிபந்தனைகளாக விதித்திருக்கிறது.
அவற்றில் வடக்கு கிழக்கு இணைப்பு விடயம் மட்டுமே முஸ்லிம்களோடு இணக்கம் கண்டு முடிவு செய்ய வேண்டிய விடயமாகும். கரையோர மாவட்ட விடயத்தில் எவராலும் முரண்பட முடியாது. அதை மட்டுமாவது இப்போதைக்கு முஸ்லிம் தனித்துவக்கட்சிகள் உடனடியாகவே சாதிக்க வேண்டும். சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது.
-Vidivelli