ஊடகவியலாளர்கள் அதிகமாக கொல்லப்பட்ட ஆண்டு 2018 ஆகும்
சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம்
கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்படும் எண்ணிக்கை மூன்றாண்டுகளாகக் குறைவடைந்து சென்று கொண்டிருந்த போதிலும் 2018 ஆம் ஆண்டு அதிகரித்திருந்ததாக சர்வதேச தொழிற்சங்கமொன்று தனது புதிய அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
2018 இல் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள், குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தாக்குதல்களில் சிக்குண்டு 94 ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும் உயிரிழந்துள்ளதாக கடந்த திங்கட்கிழமை சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட 84 ஊடகவியலாளர்களும், சாரதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 10 ஊடக பதவியணி உறுப்பினர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.
உயிரிழந்தவர்களுள் ஆறுபேர் பெண்களாவர், மேலும் மூவர் தொழில் சார்ந்த விபத்தில் சிக்குண்டு உயிரிழந்ததாகவும் பிரசல்ஸை தளமாகக் கொண்ட சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம் தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக ஆப்கானிஸ்தான் காணப்பட்டது. அங்கு 16 ஊடகப் பணியாளர்கள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது ஒன்பது ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.
ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து குற்றச் செயல்கள் இடம்பெறும் மெக்சிகோவில் 11 ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
யெமனில் ஒன்பது பேரும், சிரியாவில் எட்டுப் பேரும், இந்தியாவில் ஏழு பேரும், சோமாலியாவில் ஆறு பேரும், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் தலா ஐந்து பேரும் கொல்லப்பட்டனர். பிலிப்பைன்ஸ், ஈக்குவடோர், பிரேஸில் ஆகிய நாடுகளில் தலா மூன்று பேரும், கொளத்தமாலாவில் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன ஊடகவியலாளர்களான அஹமட் அபூ ஹுஸைன் மற்றும் யாஸிர் முர்தஜா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேலிய எல்லை வேலிக்கு அருகில் பல மாதங்களாக இடம்பெற்றுவரும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது கொல்லப்பட்டனர்.
சவூதி அரேபிய ஊடகவியலாளரும் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான ஜமால் கஷோக்ஜி கொடூரக் கொலை ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு எந்தளவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதைப் படம்பிடித்துக் காட்டுவதாகவும் சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
கஷோக்ஜி கடந்த ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி இஸ்தான்பூலிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். எனினும் அவரது உடல் இதுவரை கிடைக்கவில்லை.
கஷோக்ஜி சவூதி அரேபியாவை கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார். இக் கொலையில் சவூதி அரேபியாவின் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் சம்பந்தப்பட்டிருப்பதாக பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
”ஜமால் கஷோக்ஜி சிறந்த நபர். உங்களுக்குத் தெரியும் மிகப் பெரும் அதிர்ச்சி தருகின்ற விடயம் என்னவென்றால், ஊடகவியலாளரைக் கொன்ற 10 பேருள் ஒன்பது பேர் இந்த உலகில் தண்டிக்கப்படாமலேயே இருக்கின்றனர்” என சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் பிலிப்பே லேருத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரகடனமொன்றை அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் பிலிப்பே லேருத் கடந்த ஒக்டேபர் மாதம் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் அதனைச் சமர்ப்பித்ததிருந்தார்.
-Vidivelli