எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தல் ஜூலை மாதம் 20 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒக்டோபர் மாத பாராளுமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகளைச் சீர் செய்வதற்கு கால அவகாசம் வழங்குவதற்காக தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சுதந்திர தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிப் பேச்சாளர் அப்துல் அஸீஸ் இப்ராஹீமி தெரிவித்தார்.
தேர்தல் மோசடிகளைக் குறைப்பதனை நோக்கமாகக் கொண்ட பயோமெற்றிக் அடையாளப்படுத்தல் முறைமையின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை உறுதிப்படுத்துவதற்கும், தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்கும் நீண்ட காலம் தேவைப்படுகின்றது. பாராளுமன்றத் தேர்தலின் போது வாக்குச் சாவடிகளில் பயோமெற்றிக் அடையாளப்படுத்தல் முறைமை குறைந்த எண்ணிக்கையான பயிற்றப்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டமையினால் தேர்தல் முடிவுகள் தாமதமாகின.
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுள் அநேகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் காணப்படவில்லை.
வாக்குச் சாவடிகள் சில மணிநேரங்கள் கழித்து திறக்கப்பட்டதனால் இரண்டாம் நாளும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. பெறுபேறுகள் தொடர்பில் பல்வேறு சட்ட ரீதியான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அதிகமான தேர்தல் முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
2014 ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் தாமதமானமையினால் பல்வேறு சர்ச்சைகளும் மோசடி தொடர்பான பரவலாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli