முஸ்லிம் சமூகத்தின் மீது பெரும்பான்மை மக்கள் மீண்டும் குரோதம் கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாடெங்குமுள்ள மஸ்ஜித்கள் இளைஞர்களைக் கண்காணித்து வழிநடாத்துவதில் மும்முரமாகச் செயற்பட வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மஸ்ஜிதுகளுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள செயற்றிட்டங்கள் மேலும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
மாவனெல்லை உட்பட சில பகுதிகளில் புத்தர்சிலை சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், முஸ்லிம் இளைஞர்கள் முகநூல்களை அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பயன்படுத்தக்கூடாது. முகநூல்கள் நல்ல விடயங்களுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படவேண்டும். முஸ்லிம்களின் செயல்கள் எப்போதும் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஊக்குவிப்பதாக அமையவேண்டும். உலமா சபை முஸ்லிம் சமூகத்தைக் குறிப்பாக இளைஞர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்தும் பாதுகாப்பதற்காகவும், தீவிரவாதத்திலிருந்தும் விடுவிப்பதற்காகவும் வேலைத்திட்டமொன்றினைத் தயாரித்து அமுல்படுத்தி வருகிறது.
மஸ்ஜிதுகள் ஊடாக மேற்கொள்ளப்படும் தேசிய வலையமைப்புத் திட்டத்தின் மூலம் இந்த வருடத்தில் மாவட்ட ரீதியில் 48 நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், உலமாக்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் மூலம் இத்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.
முஸ்லிம்கள் சமாதானத்தை விரும்புபவர்கள் ஏனைய சமயங்களையும், இனங்களையும் கௌரவப்படுத்துபவர்கள் என்பதை வரலாறு நெடுகிலும் நாம் நிரூபித்து வந்துள்ளோம். என்றாலும் ஒருசில இளைஞர்களால் தூரநோக்கின்றி மேற்கொள்ளப்படும் செயல்கள் நாட்டில் இனவாதத்துக்குத் தூபமிடுவதாக அமைந்துவிடும். இதன் விளைவால் ஏற்படும் விபரீதங்களை சமூகமே அனுபவிக்க வேண்டியேற்படும்.
ஏனைய சமூகங்களுடன் சகவாழ்வைப் பேணவேண்டும் என்பதில் உலமாசபை உறுதியாக இருக்கிறது. புனித குர்ஆனின் போதனைகள் மீது பெரும்பான்மைச் சமூகம் சந்தேகம் கொண்ட சந்தர்ப்பங்களில் அச்சமூகத்திற்கு தெளிவுகள் வழங்கி அவற்றைத் தீர்த்திருக்கிறது. அனர்த்தங்கள் இடம் பெற்ற சந்தர்ப்பங்களில் ஏனைய சமூகத்தினருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.
பெருபான்மைச் சமூகத்தின் மத்தியில் வாழும் நாம் அன்பால், அறிவால், நிதானமாக எமது பிரச்சினைகளை அணுகவேண்டும். மனிதாபிமான அடிப்படையில் உதவிகளைப் பரிமாற்றிக்கொள்ளவேண்டும்.
மாவனெல்லை உட்பட சில இடங்களில் புத்தர்சிலைகள் சிதைக்கப்பட்டமையை உலமாசபை வன்மையாகக் கண்டிக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் உலமாக்களும், புத்திஜீவிகள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் இளைஞர்களை வழிநடத்துவதற்கு தாமதமின்றி ஒன்றுபட வேண்டும் என்றார்.
-Vidvelli