ஆயிஷா ஸித்தீக்கா
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
இன்றைய உலகில் பிள்ளைகளுக்கிடையேயான உளவியல் பிரச்சினைகள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. அதனால் தற்கொலை, விரக்தி, மன அழுத்தம் போன்றவை சமூக சிக்கல்களாக உருவாகியுள்ளமையையும் அவதானிக்கலாம். இதனை சமூக நோக்கிலும் உளவியல் நோக்கிலும் அவதானிப்பது முக்கியமாகும். சாதாரணமாக பிள்ளைகளின் பிரச்சினைகள் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களை சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் சிதம்பர சக்கரமாக தான் இருக்கும். அதனை சரியாக அணுகுவது பிள்ளைகளை பராமரிப்பவர்களின் கட்டாயக்கடமையாகும்.
பிள்ளைகள் விடயத்தில் அவர்களின் பிரச்சினைகள் ஆரம்பத்தில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளாகவே இனங்காணப்படுகிறது. உதாரணமாக “படிப்பதில்லை”, “ஒழுக்கமாக நடப்பதில்லை”,”செல்போனை அதிகம் நாடுகிறார்” போன்ற பலவகையான விடயங்கள் குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. ஆனால் அவை உளவியல் ரீதியாக ஆராயப்பட வேண்டிய கட்டாயம் உள்ளதை மறுப்பதற்கில்லை. பல பொழுதுகளில் பிள்ளைகள் மீதான குற்றச்சாட்டுகளில் ஒளிந்திருக்கும் உளவியல் குறைபாடுகள் அவதானிக்கப்படுவதில்லை என்பது கவலைக்குரியதாகும்.
“ஐந்து விரலும் ஒரு அமைப்பில் இல்லை” என்பது போல் எல்லாப்பிள்ளையும் ஒன்று போல் இல்லை என்பதை கட்டாயம் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளைகளை பொறுத்த வரையில் அவர்கள் எதை உள்வாங்குகிறார்களோ அதையே விம்பமாக்கி வெளியிடுகிறார்கள். ஆகவே படங்களை சரியாக உள்ளிடும் வேலை பராமரிப்பவர்களுக்கு உண்டு. இந்த உள்ளீட்டை சரிசெய்யும் உத்தியில் ஒன்று தான் அவர்களை புரிந்து கொள்ளும் கலை. சரியான புரிதல் உளவியல் ரீதியாக அணுக வேண்டிய ஒன்றாகும்.
பிள்ளை மனதளவில் பிரச்சினையில் இருக்கும் போது நடத்தையில் வெளிக்காட்டுவர். அவ்வாறு நடக்கும் போது நாம் அதை அணுகி புரிந்து கொண்டு மேற்கொண்டு செயற்பட வேண்டும். பிள்ளை நன்றாக படிக்கிறார் ஆனால் வாசிப்பதில் சிரமப்படுகிறார் என்றால் அது “டிஸ்லக்சியா”வாக கூட இருக்கலாம். அதை அவதானித்து பெரிய படங்களை கொண்ட குறுகிய சொற்களை கொடுத்து பயிற்சி கொடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். இதை விடுத்து பிள்ளையை வைதல் ஆகாது.
இவ்வாறாக நடத்தைகளை சரியாக அவதானித்து அணுகுவது முக்கியமாகும்.
அதிக துடிப்பாக இருக்கும் பிள்ளைகள் சுட்டித்தனத்தில் மிஞ்சியவராக இருப்பர். இதனால் பலரும் சஞ்சலப்படுவர். அவர்கள் செல்லும் இடமெல்லாம் அமர்க்களம் செய்வார்கள். இது “ADHD” ஆக கூட இருக்கலாம்.
கசப்பான அனுபவங்கள் பதிந்த மனம் (Trauma) அதை தூண்டும் விடயங்களை காணும் போது வித்தியாசமாக நடப்பார்கள். இவைகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் உடலியல் ரீதியான கோளாறுகள் அல்லது பின்னடைவுகளும் மனதை பாதிக்கும். ஊட்டச்சத்துகள் குறைகளும் பிள்ளைகள் நடத்தையை பாதிக்கும். இதற்கு குழந்தையை குறை சொல்ல முடியாது. உதாரணமாக இரும்புச் சத்து குறைவதால் சோம்பல் நிலை உருவாகும். இவ்வாறான நிலைகளில் பெற்றோர்களின் புரிந்துணர்வு கட்டாயமாகும்.
இவ்வாறாக சரியான புரிதல்கள் சரியான அணுகுமுறைகளுக்கு வழிவகுக்கிறது.
பிள்ளை வாழ்க்கை வளமாக இவை அனைத்தும் முக்கிய சங்கிலிகளாகும்.
பொதுவாக பிள்ளைகள் நாம் எதை வேண்டாம் என்று கூறுவோமா அதை தான் அதிகம் நாடுவார்கள். எதற்கு தடை இருக்கிறதோ அதை உடைப்பதே அவர்களுக்கு வேலையாக இருக்கும். இதற்கு “Reverse psychology” என்பார்கள். அதாவது தலைகீழ் உளவியல். உதாரணமாக பிள்ளை எட்டு மணிக்கு செல்ல வேண்டும் ஆனால் தயாராக தாமதமாவார் என்றால் உன்னால் முடியும் என்றால் எட்டு மணிக்கு தயார் ஆகு பார்க்கலாம். அது உன்னால் முடியாது நீ தாமதமாவாய் என்றால், அப்பிள்ளை அதை சவாலாக எடுத்து செய்வார். இதை ஒரு நுட்பமாகவே பயன்படுத்தலாம்.
ஆகவே புரிந்து கொள்ளல் எனும் கலை பிள்ளைகளுக்கு அதிகமாக தேவைப்படும் அத்தியாவசிய விடயமாகும். அதுவும் உளவியல் ரீதியான புரிதல் பிள்ளைகளின் அடைவை மேம்படுத்தும்.- Vidivelli