எப்.அய்னா
மொஹம்மட் லியாஉத்தீன் மொஹம்மட் ருஷ்தி. நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 22 வயது இளைஞன். கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள சிட்டி சென்டர் எனும் பிரபல வர்த்தக கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள ஸ்பா சலூன் எனும் வர்த்தக நிலையத்தில் சேவையாற்றிய குறித்த இளைஞனை கடந்த மார்ச் 22 ஆம் திகதி அந்த வர்த்தக நிலையத்துக்குள் வைத்து கைது செய்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு, 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்த பின்னர் எந்த குற்றச் சாட்டும் சுமத்தாமல் விடுவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாத போதும் ருஷ்தி பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியிலேயே அத்தனகல்ல நீதிவான் முன் ஆஜர் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
ருஷ்திக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் வருமாறு:
1. ருஷ்தி தற்போது வசிக்கும் …………. நிட்டம்புவ எனும் முகவரியில் வசிக்க வேண்டும்.
2. வீட்டிலிருந்து வெளியேறும் போதும் மீள வீட்டுக்கு வரும் போதும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.
3. சிலவேளை நிரந்தர வதிவிடத்தை மாற்றுவதானால் அது குறித்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.
4. வெளிநாடு செல்ல விரும்பினால், அது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளரின் அனுமதியை பெற வேண்டும்.
5. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை,கொழும்பு கோட்டையில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் ஆஜராக வேண்டும்.
6. அழைப்பொன்று கிடைக்கும் பட்சத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி முன்னிலையில் 72 மணி நேரத்துக்குள் ஆஜராக வேண்டும்.
7. நீதிமன்ற அறிவித்தல் கிடைத்தால் உடனடியாக அதன்படி மன்றில் ஆஜராக வேண்டும்.
8. அடிப்படைவாத, பயங்கரவாத அமைப்புக்களின் நடவடிக்கைகள், தனி நபர்களுடனான நடவடிக்கைகள் தொடர்புகளில் இருந்து தவிர்ந்திருத்தல் வேண்டும்.
உண்மையில் ருஷ்தி பலஸ்தீனுக்கு ஆதரவாக அல்லது இஸ்ரேலுக்கு எதிராக ‘ ….. இஸ்ரேல்’ எனும் ஸ்டிக்கரை ஒட்டியமையை மையப்படுத்தி கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் நாம் விரிவாக கடந்த வாரம் எழுதியிருந்தோம். கைது தொடர்பில் சி.ரி.ஐ.டி. முறையாக அவ்விளைஞனின் பெற்றோருக்கு அறிவித்திருக்காத நிலையில் 24 மணி நேரத்தின் பின்னரேயே தொலைபேசியில் அழைத்து, மார்ச் 23 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு பெற்றோருக்கு அறிவித்துள்ளனர்.
அதன் பின்னர் விசாரணைக்கு சென்ற பெற்றோரை விசாரித்த பின்னர் அவர்களை ஜீப்பில் ஏற்றி, நிட்டம்புவ பகுதியில் உள்ள அவர்களது வீட்டுக்கு அழைத்து வந்து வீட்டை முற்றாக சோதனை செய்துள்ளனர்.
இப்படித்தான் இவ்விசாரணைகள் ஆரம்பமானது. அதன் பின்னர் இது தொடர்பில் கடந்த மார்ச் மாதம் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் இருந்து தடுப்புக் காவல் உத்தரவை ( MOD/LEG/PTA/21/2025 ) பெற்றுக்கொண்டுள்ள சி.ரி.ஐ.டி. யினர் அதன் பிரகாரம் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரித்தனர்.
இதனிடையே, இந்த கைது விவகாரம் பொது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்திய பின்னர், குழப்பமடைந்த சி.ரி.ஐ.டி.யினர் குறித்த இளைஞனை சி.ரி.ஐ.டி.யினர் எவ்வாறாயினும் ஏதேனும் குற்றச்சாட்டு ஒன்றுக்குள் தள்ள பல முயற்சிகளை முன்னெடுத்தனர். இதனைவிட, பெற்றோர் நீதிமன்ற , ஏனைய நிவாரணங்களை பெறுவதை தவிர்ப்பதற்காக பல்வேறு அச்சுறுத்தல்கள் பொய் வாக்குறுதிகளையும் கொடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனின் பெற்றோருடன் நாம் முன்னெடுத்த சந்த்திப்பில் அவர்கள் இவற்றை வெளிப்படுத்தினர்.
‘ மனித உரிமை செயற்பாட்டாளர் முஹீத் ஜீரான் இந்த விடயத்தை சமூக வலைத் தளத்தில் வெளியிட்ட பின்னர் சி.ரி.ஐ.டி.யினர் எங்களை அச்சுறுத்த ஆரம்பித்தனர். அவர்கள் தொலைபேசி அழைப்பெடுத்து மகனை பேசச் செய்து, யாரிடமும் எதுவும் கூற வேண்டாம் என எமக்கு தெரிவித்தனர். முஹீத் ஜீரானின் தொலைபேசி இலக்கத்தை கோரினர்.’ என குறித்த இளைஞனின் தந்தை எம்மிடம் தெரிவித்தார்.
இதனைவிட,’ கடந்த வாரம் விசாரணையாளர்கள் தொலைபேசியில் அழைத்து, மகனை விடுவிக்கின்றோம்… ஒரு கடிதத்தை எழுதிக்கொண்டு வாருங்கள் என தெரிவித்தனர். அவர்கள் கூறியதைப் போலவே, ஒரு கடிதத்தை நான் எழுதினேன். எனது மகன் தவறு செய்துள்ளான். மன வேதனையில் அதனைச் செய்துள்ளார். இனிமேல் அவ்வாறு நடக்காது. அதற்கு நாம் பொறுப்பு என சி.ரி.ஐ.டி. அதிகாரிகள் கூறியதைப் போல எழுதினேன். அதனை எடுத்துக்கொண்டு நிட்டம்புவ பஸ் தரிப்பு நிலையத்துக்கு வரச் சொன்னார்கள். அங்கு போனோம். அங்கு யாரும் இருக்கவில்லை. மகனை உடனே விடுவிப்பதாக கூறியே கடிதத்தை கேட்டனர். அப்போது நாம் அந்த அதிகாரிக்கு மீள அழைப்பெடுத்தோம். அவர் எங்களை நிட்டம்புவ திலகவர்தன வர்த்தக நிலையம் அருகே வரச் சொன்னார். அங்கு சென்ற போது அவர் வந்து கடிதத்தை எடுத்துச் சென்றார். ஆனால் மகனை விடுவிக்கவில்லை.’ என ஏமாற்றத்தோடு அவ்விளைஞனின் தாய் எம்மிடம் கூறினார்.
இதனைவிட, சி.ரி.ஐ.டி. அதிகாரிகள், குறித்த இளைஞனின் புகைப் படம் ஒன்றில் இருந்த வாளொன்றினை மையப்படுத்தி விசாரணை செய்துள்ளனர். அந்த வாள், அந்த இளைஞனின் மாமாவால் வழங்கப்பட்டது என்பதும் அவர் மரணித்துள்ளமையும் தெரியவந்துள்ளது. எனினும் அது தொடர்பில் மேலும் பலரை விசாரித்தும் எந்த சாட்சியமும் இல்லாத நிலையில் அதனை அவர்கள் கைவிட்டுள்ளனர்.
இதனைவிட, குறித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளை அவரது நண்பர் எடுத்துச் சென்று விபத்தொன்றினை ஏற்படுத்திய சம்பவம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகவும் அது தொடர்பில் அந்த நண்பனையும், இதற்கு முன்னர் அவ்விளைஞன் வேலை பார்த்த நிட்டம்புவ நகரின் துணிக்கடை ஒன்றின் உரிமையாளரையும் விசாரித்துள்ளதாக பெற்றோர் கூறுகின்றனர்.
இவ்வாறான நிலையில் குறித்த இளைஞனின் மூத்த சகோதரன் வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில் அவரின் வேலையை இல்லாமலாக்கி, அவரையும் இந்த விடயத்தில் தொடர்புபடுத்தி கைது செய்வோம் எனவும், குறித்த இளைஞன் 13 வயது சகோதரியை விசாரணைக்கு அழைத்துவருமாறும் சி.ரி.ஐ.டி. அதிகாரிகள் பெற்றோரை தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளனர்.
இவற்றின் ஊடாக இளைஞன் ருஷ்தி தொடர்பில் பெற்றோர் சி.ரி.ஐ.டி. அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகலுக்கு எதிராக நீதிமன்றை அல்லது சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் உதவியை பெற்றுக்கொள்வதை தடுக்க இவ்வாறு செயற்பட்டுள்ளதை அவதனிக்க முடிகின்றது.
இவ்வாறான நிலையிலேயே குறித்த இளைஞன் பெற்றோர் 14 நாட்கள் சி.ரி.ஐ.டி. அதிகாரிகளின் பொய்யான வாக்குறுதிகளில் ஏமாந்து, இறுதியில் நீதிமன்றுக்கு இது தொடர்பில் முறையிடும் நோக்குடன் சட்டத்தரணி ஒருவரை அணுகியுள்ளனர். அத்துடன் இது தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், சிவில் பிரதிநிதிகளும் அரசாங்கத்தை கேள்வி கேட்ட பின்னரேயே ருஷ்தி அவசர அவசரமாக யாருக்கும் தெரியாமல், அத்தனக்கல்ல நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த விடுவிப்பானது நிபந்தனையின் கீழான விடுவிப்பாகும். ஒரு சாதாரண குற்றம் தொடர்பில் கூட 24 மணி நேரத்தில் விசாரித்து நீதிமன்றில் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயங்களை முன் வைக்கும் பொலிஸ், தொடர்ச்சியாக 14 நாட்கள் வரை தடுப்பில் வைத்து ருஷ்தியை விசாரித்தும் எந்த குற்றச்சாட்டினையும் அவர் மீது முன் வைக்க தவறியுள்ளனர். அவ்வாறான நிலையில், எந்த குற்றச்சாட்டும் இல்லாத ஒரு இளைஞனின் அன்றாட வாழ்வை பாதிக்கும் விதமான நிபந்தனைகளை சி.ரி.ஐ.டி. அதிகாரிகள் விதித்துள்ளமை வெறுக்கத்தக்கது.
இது தொடர்பில் கண்டிப்பாக உயர் நீதிமன்றம் அவரை அவதானத்துக்கு உட்படுத்தி குறித்த இளைஞனுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும். இவ்வாறான நிபந்தனைகள் ஊடாக அப்பாவி இளைஞர்கள், அரசியல் அமைப்பூடாக உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் உரிமையிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.
எனவே ருஷ்தி, விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிந்தாலும், அதனை ஒரு முழுமையான விடுதலையாக கருத முடியாது.
இவ்வாறான அடக்குமுறை களுக்கு எதிராக சட்ட ரீதியாக நியாயங்களை பெற்றுக்கொள்ள ருஷ்தி போன்ற அப்பாவிகள் விடயத்தில் சட்ட வல்லுநர்கள் முன்வர வேண்டும்.- Vidivelli