கைது செய்யப்பட்ட பிள்ளையானிடம் தடுப்புக் காவலில் தீவிர விசாரணை
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேரம் தடுத்து வைப்பு
எப்.அய்னா
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்புக்கு சென்ற சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவினரால், மட்டு. நகரில் வைத்து நேற்று முன் தினம் (8) மாலை கைது செய்யப்பட்ட பிள்ளையான், இரவோடிரவாக கொழும்பு கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்துக்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், உதவி பொலிஸ் அத்தியட்சர் நிலைக்கு உயர்வான பதவி நிலை ஒன்றினை கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவரினால் வழங்கப்படும் 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவின் கீழ், பிள்ளையான் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.
கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி, கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தராக கடமையாற்றிக்கொண்டிருந்த பேராசிரியர் ரவீந்திரநாத், கொழும்பு 07 இல் நடைபெற்ற Sri Lanka Association for the Advancement of Science வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த போது காணாமல் போயிருந்தார். அதன் பின்னர் அது குறித்து அன்றைய தினம் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில், உப வேந்தரின் மகள் பொலிஸ் நிலைய முறைப்பாட்டு இலக்கம் – CIB 2 225/260 எனும் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டை அளித்திருந்தார்.
இது குறித்து தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், அந்த விசாரணைகள் குறுகிய காலத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், 18 வருடங்களின் பின்னர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இந்த விசாரணைகள், பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசகரவிடம் கையளிக்கப்பட்டன. அவரின் நேரடி கட்டுப்பாட்டில், இந்த விசாரணைகள் சி.ஐ.டி. சிறப்புக் குழுவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளில், கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதியாக 2006 ஆம் ஆண்டு கடமையாற்றிய கே.பால சுகுமார் 2006ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளார். அவ்வாறு அவரை கடத்திய கும்பல் பின்னர் உப வேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரனாத்தை உபவேந்தர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு அச்சுறுத்தியுள்ளமை குறித்து தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.
இதன்படி, உப வேந்தர் ரவீந்திரநாத் தனது இராஜினாமா கடிதத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.
எனினும், அவரது இராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளாது அவரை கொழும்பிலிருந்து தனது கடமைகளை செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன.
ரவீந்திரநாத்துக்கு உயிரச்சுறுத்தல் இருந்தமையால் கொழும்பு – தெஹிவளையில் உள்ள அவரது மகளின் வீட்டில் இருந்தவாறு உப வேந்தர் கடமைகளை முன்னெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது. வெளியில் செல்வதாக இருந்தால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்து அவர்கள் வழங்கும் வாகனம் ஒன்றை பெற்றுக்கொண்டு வெளியில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.
ரவீந்திரநாத்துக்கு காணப்பட்ட உயிரச்சுறுத்தல் தொடர்பில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
சம்பவம் நடைபெற்ற 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி கொழும்பு 07இல் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்றுவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு வருவேன் என மகளிடம் ரவீந்திரநாத் கூறியிருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், மதிய உணவுக்காக அவர் வீட்டுக்கு வரவில்லை என்பதால் அவரது மகள் மதியம் 2.45 மணியளவில் ரவீந்திரநாத்துக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டபோது அவரது தொலைபேசி செயலிழந்து காணப்பட்டதாகவும், அவரை அழைத்துச் சென்ற சாரதிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து பேசியபோது ரவீந்திரநாத்தின் தொலைபேசி செயலிழந்துள்ளதாக சாரதியும் மகளிடம் கூறியதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்திருந்தது.
2007 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இது குறித்த விசாரணைகளில், இந்த காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் பின்னால், கருணா அம்மானின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களே இருப்பதாக சி.ஐ.டி.க்கு தகவல்கள் வெளிப்பட்டிருந்தன. எனினும் அதன் பின்னர் இந்த விவகாரத்தில் விசாரணைகளில் எந்த குறிப்பிடத்தக்க நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறான நிலையிலேயே, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பிள்ளையான் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார்.
இதற்கு முன்னர் பிள்ளையான் உள்ளிட்டவர்கள் 2005 டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவ்வழக்கை சட்ட மா அதிபர் தொடர்வதில்லை என தீர்மானித்ததை தொடர்ந்து விடுவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
– Vidivelli