ஜனாஸா எரிப்பு: புதிய அரசாங்கமாவது நீதியை நிலைநாட்டுமா?

0 31

றிப்தி அலி

“அமைச்­ச­ர­வையில் மன்­னிப்பு பத்­தி­ர­மொன்றை சமர்ப்­பித்துவிட்டு பல­வந்த ஜனாஸா எரிப்புக் குற்­றத்­தினை ஒரு­போதும் மறைக்க முடி­யாது” என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரி­வித்தார்.
குறித்த பத்­தி­ரத்தின் மூலம் நிறை­வேற்­றப்­பட்ட அமைச்­ச­ரவை தீர்­மா­னத்தின் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்ட பகி­ரங்க மன்­னிப்பின் ஊடாக பல­வந்த ஜனாஸா எரிப்பு அநி­யா­யத்­தி­லி­ருந்து எவ­ராலும் தப்ப முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இந்த அநி­யா­யத்­திற்கு பொறுப்­புக்­கூற வேண்­டி­யுள்­ளது. அதனால், இந்த அநி­யா­யத்­திற்கு துணை போன­வர்கள் தானாக முன்­வந்து பிழை­களை ஒப்­புக்­கொள்ள வேண்டும் என அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் கூறினார்.

அதே­வேளை, பல­வந்­த­மாக எரிக்­கப்­பட்­ட­வர்­களின் பெயர்­களை உள்­ள­டக்­கிய ஞாப­கார்த்த இட­மொன்று அமைக்­கப்­பட வேண்டும் என்ற வேண்­டு­கோ­ளையும் அவர் அர­சாங்­கத்­திடம் முன்­வைத்தார்.

கொவிட் – 19 தொற்­றுக்கு இலக்­கா­கிய நிலையில் உயி­ரி­ழந்த நீர்­கொ­ழும்­பினைச் சேர்ந்த நபரின் ஜனாஸா கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி பல­வந்­த­மாக எரிக்­கப்­பட்­டது. உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் பரிந்­து­ரை­களை மீறியே இந்த பல­வந்த எரிப்பு இடம்­பெற்­றது.

இதனைத் தொடர்ந்து சுமார் 300 ஜனா­ஸாக்கள் பல­வந்­த­மாக இலங்­கையில் எரிக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எனினும், குறித்த எண்­ணிக்கை தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ தகவல் எதுவும் இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இந்த அநி­யா­யத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நியாயம் கோரி பல­வந்த ஜனாஸா எரிப்பின் ஐந்து வருட பூர்த்தி நிகழ்வு கடந்த 6ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பில் அனுஷ்­டிக்­கப்­பட்­டது.

இந்த நிகழ்வில் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச, பிரதி சபா­நா­யகர் றிஸ்வி சாலி, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான், பைசர் முஸ்­தபா, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி உட்­பட சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­மு­கர்கள், அர­சியல் தலை­வர்கள், சமூக முக்­கி­யஸ்­தர்கள் என பலர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

எனினும், ஆளும் கட்­சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் பிரதி சபா­நா­ய­கரைத் தவிர வேறு எவரும் இந்த நிகழ்வில் பங்­கேற்­க­வில்லை என்­பது சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

அடிப்­படை மனித உரி­மை­க­ளையும், மத உரி­மை­க­ளையும் மீறி பல­வந்­த­மாக எரிக்­கப்­பட்ட முஸ்லிம் ஜனா­ஸாக்கள், இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் ஆறாத வடுக்­களை விட்டுச் சென்­றுள்­ளன.

இதனால், பல­வந்த ஜனாஸா எரிப்­பினால் பாதிப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு நியாயம் கிடைக்கும் வரை இது போன்ற நிகழ்­வுகள் வரு­டாந்தம் அனுஷ்டிக்கப்­பட வேண்­டி­யுள்­ளது.

அதே­வேளை, இந்த நிகழ்­வினை கொழும்பில் மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தாமல் நாட்டின் அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் நடத்­தப்­பட வேண்டும். இதன் ஊடாக பல­வந்த ஜனாஸா எரிப்­பிற்­கான நியாயம் கோர­லுக்கு அனைத்து இன மக்­களின் ஆத­ர­வி­னையும் பெற முடியும்.

யுத்­தத்­தினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் நினைவு தினம் வரு­டாந்தம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­வது போன்று பல­வந்த ஜனாஸா எரிப்பு நிகழ்வும் வரு­டாந்தம் அனுஷ்­டிக்­கப்­பட வேண்டும்.
இலங்கை ஜன­நா­யக சோஷ­லிச குடி­ய­ரசின் அர­சி­ய­ல­மைப்பில் வழங்­கப்­பட்­டுள்ள உரி­மை­களை மீறியே முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவின் அர­சாங்­கத்­தினால் இந்த செயற்­பாடு மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதனைத் தொடர்ந்து வந்த ரணில் விக்­ர­ம­சிங்­கவின் ஆட்­சி­யிலும் குறித்த அநி­யா­யத்­திற்கு பொறுப்­பா­ன­வர்கள் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில், தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீட­மே­றினால், ஜனாஸா எரிப்­புக்கு கார­ண­மா­ன­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­துவோம் என அமைச்சர் பிமல் ரத்­னா­நா­யக்க ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் விடி­வெள்­ளிக்கு வழங்­கிய நேர்­கா­ணலின் போது தெரி­வித்தார்.

எனினும், அநுர குமார திநா­நா­யக்க ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டு 6 மாதங்கள் கழிந்­துள்ள நிலையில் பல­வந்த ஜனாஸா எரிப்பு தொடர்பில் இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அமைச்சர் பிமல் ரத்­நா­யக்­க­வினால் வழங்­கப்­பட்ட குறித்த வாக்­கு­று­தியும் காற்றில் பறக்­க­வி­டப்­பட்­டுள்­ளது.

இந்த நேர்­காணல் குறித்து அமைச்சர் பிமல் ரத்­நா­யக்­க­விடம் இக்­கட்­டு­ரை­யாளர் பல தட­வைகள் வின­விய போதும் அவரால் எந்தப் பதிலும் வழங்­கப்­ப­ட­வில்லை.
இதே­வேளை, பல­வந்­த­மாக எரிக்­கப்­பட்­ட­வர்­களின் பெயர்ப் பட்­டி­யலை வழங்­கு­மாறு சுகா­தார அமைச்சர் நளிந்த ஜய­திஸ்­ஸ­விடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பல தட­வைகள் பாரா­ளு­மன்­றத்தில் வின­விய போதும் இது­வரை எந்த பதிலும் வழங்­கப்­ப­ட­வில்லை.

ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­கவின் அர­சிலும் பல­வந்த ஜனாஸா எரிப்புக்கு நியாயம் கிடைக்­­காதோ எனும் சந்தேகம் எழுவதற்கு மேற்­படி சம்­ப­வங்கள் வலுச் சேர்க்­கின்­றன.

இவ்­வா­றான நிலை­யி­லேயே பல­வந்த ஜனாஸா எரிப்பு தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொண்டு பொருத்­த­மான விதந்­து­ரை­களைச் சமர்ப்­பிப்­ப­தற்­கான பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வொன்றை நிய­மிக்­கு­மாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீ­மினால் பாரா­ளு­மன்­றத்தில் தனி­நபர் பிரே­ர­ணை­யொன்று முன்­வைக்­கப்­பட்­டது.

இந்தப் பிரே­ரணை தொடர்பில் கடந்த பெப்­ர­வரி 7ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­தப்­பட்டு ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது. எனினும், இரண்டு மாதங்கள் கழிந்தும் குறித்த பிரே­ர­ணைக்­க­மைய இது­வரை எந்­த­வொரு தெரி­வுக்­கு­ழுவும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

இது தொடர்­பாக சபா­நா­யகர் ஜகத் விக்­ர­ம­ரத்ன மற்றும் பிரதி சபா­நா­யாகர் றிஸ்வி சாலி ஆகி­யோ­ரிடம் இக்­கட்­டு­ரை­யாளர் பல தட­வைகள் வின­விய போதிலும் எந்தப் பதிலும் கிடைக்­க­வில்லை.

அதே­வேளை, குறித்த தெரி­வுக்­கு­ழு­வினை நிய­மிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை விரைவில் எடுப்­ப­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இக்­கட்­டு­ரை­யா­ள­ரிடம் உறு­தி­ய­ளித்த போதிலும் இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை.

இதனால் குறித்த அநி­யாயம் தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொண்டு பொருத்­த­மான விதந்­து­ரை­களைச் சமர்ப்­பிப்­ப­தற்­கான பாரா­ளு­மன்றத் தெரிவுக்குழுவொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.
இதற்­காக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்­கட்­சி­யினர் இணைந்து செயற்­பட வேண்டும். மாறாக இந்த தெரி­வுக்­குழு நிய­மிக்கும் விடயம் தேர்­த­லுக்­கான வாக்­கு­று­தி­யாக அமை­யக்­கூ­டாது.

அர­சி­ய­ல­மைப்­பினை மீறி முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ அர­சாங்­கத்­தினால் அநி­யா­ய­மாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள இந்த செயலை முஸ்லிம் சமூ­கத்­திற்கு மாத்­திரம் நடந்த அநி­யா­ய­மாக ஒரு­போதும் கருத முடி­யாது.

இந்த அநி­யா­யத்­தினை இலங்கை மக்­க­ளுக்கு நடந்த அநி­யா­ய­மா­கவே பார்க்க வேண்­டி­யுள்­ளது. இதனால், குறித்த அநி­யா­யத்­திற்கு பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.