அஷ்-ஷைக் டீ.ஹைதர் அலி
ஊடகப் பிரிவு
நினைவு கூரல் நிகழ்ச்சி
ஏற்பாட்டுக் குழு
எவ்வித விஞ்ஞான அடிப்படைகளுமின்றி அநியாயமாக கொவிட் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஏப்ரல் 06, 2025 அன்று கொழும்பு -– 06 மெரைன் கிரேண்ட் மண்டபத்தில் அதன் நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை இலங்கை இஸ்லாமிய மற்றும் சமூக அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, தேசிய சூரா சபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா, ஸ்ரீலங்கா மலே கூட்டமைப்பு, இலங்கை மேமன் சங்கம், அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் முன்னணி, ஸ்ரீலங்கா ஜமாத்தே இஸ்லாம், சலாமா அமைப்பு உள்ளிட்ட 15 முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்தது.
மேற்படி அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவை அமைத்து, அக்குழுவின் தலைவராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் பஹ்ஜி அவர்களை நியமித்தது. அத்துடன் இக்குழு நினைவு தின நிகழ்வின் தலைவராக தேசிய சூரா சபையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் அவர்களை நியமித்தது.
இந்நிகழ்ச்சியில் உலமாக்கள், மதத் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர், பிரதி சபாநாயகர், கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், இஸ்லாமிய அமைப்புக்களின் தலைவர்கள், நலன் விரும்பிகள், நாடு பூராவிலுமுள்ள பல சமூகங்களையும் சார்ந்த ஆண் பெண் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் நோக்கங்கள்:
வரலாற்றை நினைவுபடுத்தல் – முஸ்லிம் சமூகத்தின் மீது இழைக்கப்பட்ட இந்த அநியாயத்தை மறக்கவோ, அழிக்கவோ முடியாதவாறு நிலைநாட்டல்.
நினைவு கூரல்:
கட்டாய தகனத்திற்கு உட்படுத்தப்பட்டவர்களை நினைவு கூரல்.
துஆ மற்றும் பிரார்த்தனை:
கட்டாய தகனம் செய்யப்பட்டவர்களுக்கும் மற்றும் ஒட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் சிறப்பு துஆ பிரார்த்தனை புரிதல்.
தடுப்பு மற்றும் ஆதரவு – இந்த நாட்டில் எந்தவொரு தனிநபருக்கும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஒத்துழைத்தல்.
நினைவு தின நிகழ்வுகள்:
தலைமை மற்றும் வரவேற்புரையை நிகழ்வின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் நிகழ்த்தினார். அதில் அவர்: அடக்கலாம், தகனம் செய்யலாம் என்று இரு முறைகள் இருந்தும் எமக்கு அந்த உரிமை கிடைக்கவில்லை. இறுதியில் சுமார் 500 கி.மீ. தூரத்தில் கொண்டு போய் அடக்கம் செய்ய அனுமதித்தனர். ஆனால் எமது கலாசாரத்தில் (பலர்) தொடர்ந்து 40 நாட்கள் அடக்கஸ்தலம் சென்று பிரார்த்தனை புரிவர். மற்றும் சிலர் வாராந்தம் சென்று தரிசித்து பிரார்த்தனை புரிவர். ஆனால் இப்போது அப்படி செய்யலாமா என கேள்வி எழுப்பினார்.
அடுத்து “நெருப்பில் குளித்த அடையாளம்” கட்டாயத் தகனத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்களின் வலியை நினைவுகூரும் பாடல் ஒளிபரப்பப்பட்டது. இதனை எழுதி இசையமைத்து இருந்தார் புத்தளம் எஸ்.ஏ.சீ.பீ. மரிக்கார்.
அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அர்கம் நூராமித் உரையாற்றுகையில், அநியாயங்களை நாம் மறந்து விடக் கூடாது. இது சூரா புறூஜில் குறிப்பிடப்பட்டுள்ள கோட்பாடு. பொஸ்னியாவில் போன்று இங்கு தகனம் செய்யப்பட்டவர்களுக்கான அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஒரு நினைவு தூபி அல்லது இடம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தொடர்ந்தும் கவிஞர் றவூப் ஹஸீரின் “ஜனாஸா எரிப்பு” என்ற கவிதை இடம்பெற்றது. அடுத்து களனி பல்கலைக்கழக பேராசிரியர் கல்கந்தே தம்மானந்த தேரர் முஸ்லிம்களின் இறுதிக் கிரியை பற்றிய பல விடயங்களை நான் இப்போது தான் அறிந்து கொண்டேன். உண்மையில் ஒரு அன்புக்குரியவருக்கான இறுதி மரியாதை செய்யப்படாமல் இருப்பது அல்லது தவறிப்போவது மிகக் கடினமான விடயமாகும் எனக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து மாணவர் ஏ.எம். உமரின் சிங்கள மொழியிலான “விருதுப்” பாடல் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜனாஸா எரிப்பு தொடர்பான வரலாறுகள் அடங்கிய “தீயில் எரிந்த அந்த 333 நாட்கள்”என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.
தொடர்ந்தும் முன்னாள் பா.உ. சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றுகையில், இலங்கை வரலாற்றில் பல கறுப்புத் தினங்கள் இருக்கின்றன. 1983 ஆம் ஆண்டை நாம் ஞாபகம் செய்வது போலவே இதுவும் மறக்க முடியாத ஒரு கறுப்பு நாள் தான். இன்று நான் உயிரோடு இருப்பது அன்று 1983 ல் எமது பக்கத்து வீட்டு முஸ்லிம் கொழும்பில் அடைக்கலம் தந்ததனால் தான். ஒரு பௌத்த தேரர் பாதுகாத்ததனால் தான் எமது வீட்டையும் எரிக்கவில்லை. எப்பொழுதும் ஒரு சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படும் போது அதற்காக அடுத்த சமூகங்களும் குரல் கொடுக்க வேண்டும். தனக்கு தனக்கு என்றால் தான் சுழகு படக்கு படக்கு என்குமாம் என்று தமிழிலே சொல்லப்படுவது போல. மற்றவர்களினதும் நன்மையைக் கவனிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
போதகர் சார்லஸ் தோமஸ் உரையாற்றுகையில், நாம் எப்போதும் எமது மதம் மற்றும் கலாசார உரிமைகளைப் பாதுகாக்கும் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். மட்டுமல்லாமல் பேராசிரியர் கல்கந்தே தம்மானந்த தேரர் குறிப்பிட்டது போல அவருக்கு இப்போது தான் பல விடயங்கள் அறியவந்துள்ளது. அவரின் அந்த வார்த்தையின் மூலம் ஒரு செய்தியைச் சொல்கிறார். அதாவது பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் நாம் எல்லோரும் எமது மார்க்க விடயங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு பொறிமுறையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அடுத்து ஆங்கில மொழி மூல கவிதையொன்றை சப்னம் முஸம்மில் வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் அனுபவங்களும், மனக் கவலைகளும் அடங்கிய ஒரு காணொளி ஒளிபரப்பப்பட்டது. அடுத்து துஆப் பிரார்த்தனையை அஷ்-ஷைக் ஏ.ஜே. அப்துல் ஹாலிக் நிகழ்த்தினார்.
இறுதியாக அஷ்-ஷைக் எம்.எச்.எம்.புர்ஹான் பஹ்ஜியின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் முடிவுற்றன. – Vidivelli