இஸ்ரேலியர்களின் வருகை இலங்கைக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்
பாராளுமன்றில் ரிஷாத் பதியுதீன் எச்சரிக்கை
(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யதமையை படித்தவர்கள் யாரும் அனுமதிக்க மாட்டார்கள். பொலிஸார் செய்த கேவலமான செயலாகவே இதை நான் பார்க்கின்றேன். அதேநேரம் இஸ்ரேலியர்களின் இலங்கைக்கான வருகையை அரசாங்கம் சாதாரணமாக நினைக்கக் கூடாது. அது எதிர்காலத்தில் நாட்டுக்கு பாரிய பாதிப்பாக அமையும் அபாயம் இருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட விடயங்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக ருஷ்தி என்ற ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டு இருந்தார். அவர் கைது செய்யப்பட்டது தவறல்ல. அவரை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் செயல்பட்டிருந்தால் இந்த விடயம் குறித்து இந்த அளவு பேசப்பட்டிருக்காது.
அதிலும் அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதை படித்தவர்கள் யாரும் அனுமதிக்க மாட்டார்கள். பொலிஸார் செய்த ஒரு கேவலமான செயலாகவே இதை நான் பார்க்கின்றேன். இது அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை எதிர்காலத்தில் உணர்ந்து கொள்ளவீர்கள்.
எனவே பொலிஸார் யாரை சந்தோஷப்படுத்துவதற்கு இதனை செய்தார்களோ என தெரியவில்லை. இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகமாகவே பேசி இருக்கிறார். இந்த சட்டத்தின் ஊடாக அநியாயமாக பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இலங்கை வரலாற்றின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக இருந்தால் அது நானாகவே இருக்கும். ஈஸ்டர் தாக்குதலுடன் எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை என நான் இன்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றேன். இதேபோன்று அசாத் சாலி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னாப் ஜெசீம் போன்ற பல சகோதரர்கள் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். யாரோ செய்த ஈஸ்டர் தாக்குதலை மறைப்பதற்கு இந்த சட்டத்தை பயன்படுத்தினார்கள். இன்றும் கூட இளைஞர்கள், உலமாக்கள் என பலர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் இருந்து வருகிறார்கள். எனவே அநியாயமாக சிறைகளில் இருப்பவர்களை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோன்று இஸ்ரேலியர்களின் இலங்கைக்கான வருகையை அரசாங்கம் சாதாரணமாக நினைக்கக் கூடாது. இவ்வாறு தான் காஸாவுக்கும் பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலியர்கள் சென்று, அவர்களையே அழித்து வருகின்றார்கள். இஸ்ரேலியர்களின், நெதன்யாகுவின், அமெரிக்காவின் அடாவடித்தனத்தை பார்ப்பதற்கு இன்று யாரும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபை கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது.
அவ்வாறானதுதொரு நிலைமை யில் இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு வந்து வெலிகமையில்,கொழும்பில் என மதஸ்தானங்களை அமைத்தும் சொத்துக்களை வாங்கியும் இலங்கையில் தமிழ், சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்தி பாரிய அநியாயங்களை செய்து, இந்த நாட்டை குட்டிச்சு வராக்கி விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனால் அரசாங்கம் இஸ்ரேலியர்களின் வருகையை சாதாரணமாக கருத வேண்டாம். அவர்களைப் பாதுகாப்பதற்காக இங்குள்ள மக்களை தண்டிக்க வேண்டாம். அவர்களைப் பாதுகாப்பது என்பது எமது நாட்டின் எதிர்காலத்தை அழித்து விடுவதற் கான நடவடிக்கையாகும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள் என்றார்.- Vidivelli