பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞரான லியாவுதீன் முகம்மது ருஷ்தி நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேலுக்கு எதிரான வார்த்தைகள் அடங்கிய ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்ட போதிலும் அவர் மீது எந்தவித குற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்படாமலேயே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்ட பயங்கரவாத தடைச்சத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவுப் பத்திரம் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிவந்ததைத் தொடர்ந்து பலரும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். கடந்த காலங்களில் இச் சட்டத்திற்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்த அநுரகுமார திசாநாயக்கவே சிறுபான்மை இளைஞர் ஒருவர் மீது இச் சட்டத்தைப் பிரயோகிக்க கையெழுத்திட்டமை பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. இதன் காரணமாக எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் தேசிய மக்கள் சக்தியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷங்களும் வலுப்பெற்றன. இந்த சம்பவம் எதிர்க்கட்சிகளுக்கு சிறந்த பிரசார உத்தியாகவும் அமைந்தது. இதனிடையே உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளும் இந்தக் கைதை வன்மையாகக் கண்டித்தன. குறிப்பாக இளைஞர் ருஷ்தியை உடனடியாக விடுவிக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபையும் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இப் பின்னணியிலேயே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் கடுமையான நிபந்தனைகளின் கீழேயே விடுவிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்ய சட்டத்தரணிகள் தயாராகி வருவதாக அறிய முடிகிறது.
இலங்கையின் அண்மைக் காலப் போக்குகளை அவதானிக்கின்ற போது பலஸ்தீனுக்காக குரல் கொடுப்பவர்களை அடக்கி ஒடுக்கவும் இஸ்ரேலிய நலன்களைப் பாதுகாக்கவும் சில தரப்புகள் திட்டமிட்டு செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் வலுக்கிறது. இவ்வாறான சக்திகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் துணை போகக் கூடாது. அதிலும் கொடூரமான சட்டத்தைப் பயன்படுத்தி பலஸ்தீன ஆதரவாளர்களை கருவறுக்க ஒருபோதும் முனையக் கூடாது.
இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இறுக்கமான சட்டங்கள் தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் பயங்கரவாத தடைச்சட்டமானது ஆட்சியிலுள்ளவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகளில் இருந்த போது இதனை ஒழிப்பதற்காக கடுமையாக குரல் கொடுத்த மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன தற்போது தமக்காகவோ அல்லது வேறு யாரினதும் தேவைக்காகவோ அதே கொடூர சட்டத்தைப் பயன்படுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது. போதைப் பொருள் குற்றங்கள் மற்றும் தீவிரவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தேவையானதொரு புதிய சட்டவரைபு குறித்து சர்வதேச மனித உரிமை வரையறைகளுக்குள் நின்று அரசாங்கம் சிந்திக்க முடியும். இதற்காக தாம் குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய நேற்று பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார். இது வரவேற்கத்தக்கதாகும். எனினும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் குழு அமைத்து காலத்தைக் கடத்தும் கடந்த கால அரசாங்கங்களின் பாணியை இந்த அரசாங்கமும் கையிலெடுக்கக் கூடாது.
அது மாத்திரமன்றி ருஷ்தியின் விடுதலையோடு பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த முஸ்லிம்களும் பாயைச் சுருட்டிவிடக் கூடாது. மாறாக இந்தச் சட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் எவரும் அநியாயமாக கைது செய்யப்படாமலிருப்பதை உறுதிப்படுத்த தொடர்ந்தும் குரல் எழுப்ப வேண்டும். முஸ்லிம் இளைஞர்களுக்காக மாத்திரமன்றி யார் இதனால் பாதிக்கப்பட்டாலும் அதற்காக குரல் எழுப்புவதற்கு நாம் பின்னிற்கக் கூடாது.- Vidivelli