5. பல்வேறு ஆய்வுகள் பெற்றோர் தமது இணையதளப் பாவனை தொடர்பாக திறந்த மனப்பான்மையுடன் பிள்ளைகளுடன் நடந்து கொள்வது ஆரோக்கியமான ஒரு விடயம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பிள்ளைகளுடைய இணையதள பாவனை தொடர்பாக கேள்வி கேட்கும் அதேவேளை, பெற்றோர், பிள்ளைகளை நோக்கி “ எனக்குப் பிடித்த இணைய தளம் அல்லது கைபேசி விண்ணப்பம் எது” என்று பிள்ளைகளிடம் கேட்க முடியும். பெற்றோர் பயனுள்ள இணையதளங்களையும் கைப்பேசி விண்ணப்பங்களையும் பயன்படுத்துபவர்களாக இருந்தால் பிள்ளைகள் அது பற்றி ஆர்வத்துடன் பேச முடியும். சிலவேளை பெற்றோர் தாம் அதிகம் பயன்படுத்துகின்ற விண்ணப்பங்கள், சமூக ஊடகங்கள், சமூக வலைப்பின்னல் தளங்கள், கொள்வனவுத்தளங்கள் என்பனவற்றின் நன்மை தீமைகள் பற்றி தமது பிள்ளைகளுடன் பேசவும் முடியும். எனவே, அதீத இணையதள பாவனையின் தீமைகள் பற்றிய உரையாடல் இருவழிப்பட்டதாக அமைய வேண்டும். இவ்வாறு அமைகின்ற பொழுது பெற்றோர் பிள்ளைகளிடமிருந்து கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. தான் அறியாமலேயே பிரயோசனமான விடயங்களை கற்றுக் கொள்வதற்கு பிள்ளைகள் தூண்டப்படுகிறார்கள்.
6. நீங்கள் அதிகமாக பயன்படுத்த விரும்புகின்ற, அல்லது பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற கைப்பேசி விண்ணப்பம் ஒன்றை பாவிக்காவிட்டால் அது உங்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? எந்த கைபேசி விண்ணப்பம் உங்களின் பிரயோசனமான நேரத்தை நீங்கள் அறியாமலேயே பறித்தெடுக்கிறது? கல்விக்காக மற்றும் சமூகப் பணிகளுக்காக நீங்கள் ஒதுக்க வேண்டிய நேரத்தை அறியாமலேயே எந்த விண்ணப்பம் பறித்தெடுக்கிறது?
7. குழந்தைகளின் இணையதள பாவனை தொடர்பான பெற்றோரின் அனுமானங்கள் பெரும்பாலும் உண்மையாக அமைந்து விடுவதில்லை. பிள்ளைகள் அதிகமாக இணையதளங்களை பயன்படுத்துகின்ற பொழுது பெற்றோர் அச்சப்படுவது இயல்புதான். ஆனால் பிள்ளைகள் பெற்றோர் சந்தேகிக்கின்ற விடயங்களை அன்றி வேறொரு காரணத்துக்காக இணையதளத்தை பயன்படுத்த முடியும். பிள்ளைகளின் இணையதள பாவனை தொடர்பான தப்பான கருதுகோள்களை பெற்றோர் ஏற்படுத்திக் கொள்கின்றபோது அது பிள்ளைகளை அதிகம் பாதிக்கின்றது. இதனால் பிள்ளைகள் வெறுப்படைகிறார்கள். எனவே தவறான கருதுகோள்களின் அடிப்படையில் அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் பிள்ளைகளின் இணையதளப் பாவனை தொடர்பான தீர்மானங்களை எடுப்பதை விடுத்து அன்பையும் நம்பிக்கையையும் மையப் பொருளாகக் கொண்டு பிள்ளைகளுடன் திறந்த உரையாடலில் ஈடுபடுவது பெற்றோரின் கடமையாகும். சில பெற்றோர் தமது பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசியையோ அல்லது மடிக்கணினியையோ பயன்படுத்துகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அருகில் சென்று அல்லது தொலைவில் இருந்து கொண்டு ‘என்ன செய்கிறாய்’, ‘ இவ்வளவு நேரம் எலக்ட்ரானிக் டிவைஸ் பாவித்தது போதாதா?’, இவ்வளவு நேரமாக நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீ இலத்திரனியல் கருவியிலிருந்து விடுபடுவதாக தெரிவதில்லை’ என குழந்தைகளுக்கு வெறுப்பூட்டும் வகையிலான அவதாரங்களை வெளிப்படுத்துவதுண்டு. இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தும் ஒரு போக்காகும்.
8. ஆரோக்கியமான இணையதள பாவனைக்கு நீர் என்ன உபதேசங்களை எனக்கு வழங்க முடியும் என, பெற்றோர் பிள்ளைகளிடம் வினவ முடியும். இதன்போது, பிள்ளைகள் பெற்றோருக்கான அறிவுறுத்தல்களையும் நிபந்தனைகளையும் முன்வைக்கலாம். அவ்வாறு முன் வைக்கும் போது, பெற்றோர் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளைகளிடம் தர்க்கம் புரிந்து அவற்றை என்னால் செயல்படுத்த முடியாது என்று வாதங்களில் ஈடுபடுவதில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நடக்கின்ற பொழுது பிள்ளைகள் தமது பெற்றோருக்கு விதித்த அதே நிபந்தனைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் கட்டுப்பட வேண்டிய நிலைமை பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது. இங்கு நாம் வலியுறுத்துகின்ற விடயம் என்னவெனில், இணையதள பாவனை தொடர்பான பொதுவான நிபந்தனைகளும் வரையறைகளும் ஒரு குடும்பம் ஒன்றில் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதாகும். இந்த உரையாடலின் தொடர்ச்சியாக பெற்றோர், பிள்ளைகளுக்கு மாத்திரம் இன்றி குடும்பத்தில் உள்ள ஏனைய உறுப்பினர்களுக்கும், அதாவது முழு குடும்பத்துக்குமான இணையதள பாவனைக்குரிய நிபந்தனைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
பெற்றோரின் வழிகாட்டுதல் தொடர்பாக வெப் வாய்ஸ் நிறுவனம் மிக இலகுவான உதாரணம் ஒன்றை முன்வைக்கிறது. குறிப்பாக, பிள்ளைகள் சாப்பிடும் போது, சைக்கிள் ஓட்ட பழகும் போது, முதன் முதலில் எழுத பழகும் பொழுது, மழலை பேச்சில் இருந்து விடுபட்டு படிப்படியாக சிறுவர்கள் பேசக் கற்றுக் கொள்ளும் பொழுது, நீச்சல் தடாகத்தில் இறங்கி முதன் முதலில் நீண்ட கற்றுக் கொள்ளும் பொழுது, இலத்திரனியல் சாதனங்களை படிப்படியாக பயன்படுத்த தொடங்கும் பொழுது அவை ஆபத்தானவை என்று தெரிந்திருந்தும் பெற்றோர் மிகக் கருணையுடன் நிதானமாக படிப்படியாக பிள்ளைகளோடு கூட இருந்து அவர்களுக்கு வழிகாட்டுவது போல தான் சிறுவயது குழந்தைகள் இலத்திரனியல் கருவிகளுக்கு இயைவாக்கம் அடைகின்ற பொழுது அவர்களை பொறுமையோடு வழிநடத்த வேண்டும் என்பதும். குழந்தைகள் முதன் முதலில் இணைய உலகிற்குள் பிரவேசிக்கின்ற பொழுது, அவர்களை ஆர்வமூட்டும் வகையில் புத்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, மனதுக்கு புத்துணர்வு வழங்கக்கூடிய, மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய இணையத்தளங்கள், கேள்வி பதில் தளங்கள், ஊடகத் தளங்கள், கற்றல் தளங்கள் மற்றும் விளையாட்டுக்கள் என்பனவற்றை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைப்பதோடு மாத்திரமல்லாது சிறிது காலம் வரை பெற்றோரும் குழந்தைகளும் ஒன்றாக இணைந்து அவற்றை பயன்படுத்த வேண்டும். இதற்காக, குழந்தையின் ஏனைய கற்றல் சமூக செயற்பாடுகளுக்கு பெற்றோர் நேரம் ஒதுக்குவது போன்று, அலாதியான நேரத்தை ஒதுக்குவது அதிக பயனளிக்கத்தக்கது.
Webwise நிறுவனம் இன்னும் ஒரு முக்கியமான விடயத்தையும் சுட்டிக் காட்டுகிறது. அதாவது, பிள்ளைகள் தவறாக புரிந்து கொள்ளக்கூடும் என்பதற்காகவோ அல்லது பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான உறவு நிலையில் விரிசல் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சுவதாலோ பிள்ளைகளுடன் சுற்றி வளைத்து பேச வேண்டிய தேவைகள் எதுவும் இல்லை. இது தான் செய்கின்ற தவறான விடயங்களை தொடர்ந்தும் செய்வதற்கான வழிகளை சிறுவர்களுக்கு பெற்று கொடுக்கிறது. எனவே, பெற்றோர் பிள்ளைகளுக்கான உரையாடலின் ஒரு முக்கியமான பகுதியாக பிள்ளைகள் பேண வேண்டிய எல்லைகள் எவை, எத்தகைய பயன்பாடு பிள்ளைகளை ஆபத்தான வழிகளுக்கு இட்டுச் செல்கின்றது என்பதை அழுத்தம் திருத்தமாக உரையாட வேண்டும். எந்த இடத்தில் ஆபத்து இருக்கிறதோ, எத்தகைய இணையதள பயன்பாடு சிறுவர்களின் நடத்தைகளை பாதிக்கலாமோ அது பற்றிய உரையாடல்கள் எப்போதும் நேரடியாக இடம்பெற வேண்டும். அத்தோடு, தினமும் குறை கூறிக் கொண்டிருக்கின்ற பெற்றோரிடம் தாம் எதிர்கொள்கின்ற இணையவழி இம்சைகளை பிள்ளைகள் எடுத்துக் கூறுவதில்லை. அவற்றை தாமாகவே அனுபவித்து தமக்குள்ளேயே செயல்படுத்திக் கொள்கிறார்கள்.
நாளடைவில், இத்தகைய அனுபவங்கள் சிறுவர்களது உள்ளங்களில் மனவடுக்களை ஏற்படுத்த முடியும். வெப் வாய்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு ஏற்ப தாம் எதிர்கொள்ளும் துன்பகரமான அனுபவங்களை 19 வீதமான சிறுவர்கள் மாத்திரமே தமது பெற்றோரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. அது மாத்திரமன்றி, பெற்றோர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் 53 வீதமான பெற்றோர் தமது பிள்ளைகளின் குல நலனை பாதிக்கின்ற ஏதாவது ஒரு விடயத்தை அவதானிக்கின்ற பொழுது தான் பிள்ளைகளுடன் நெருங்கிப் பழகுவதாகவும் அவர்களுடைய உள்ளத்தை தொந்தரவு செய்யும் காரணி எது என்று அறிந்து கொள்ள முற்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இவ்விரு தகவல்களும் பரஸ்பரம் முரண்பாடானவை.
எனினும், பெற்றோர் இணையவழியில் பிள்ளைகள் சந்திக்கின்ற கசப்பான அனுபவங்களின் வாயிலாக சிறுவர்கள் பாதிக்கப்படுவதை இலகுவாக கண்டறியும் ஆற்றலை கொண்டிருப்பது அதிர்ஷ்டவசமானது. மேற்குறிப்பிட்ட ஆய்வு, அன்றாட வாழ்க்கையில் தான் சந்திக்கின்ற மனம் வருந்தத்தக்க அனுபவங்களை தாயிடமோ தந்தையிடமோ அல்லது உடன் பிறந்தவர்களிடமோ தயக்கமின்றி எடுத்துக் கூறும் ஆர்வம், இணையவெளியில் ஏற்படும் அத்தகைய சம்பவங்களின் போது சிறுவர்களிடம் ஏற்படுவதில்லை என்பதையும் கண்டறிந்துள்ளது. இங்கு பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றும் ஒரு விடயம் யாதெனில், சிறுவர்கள் தமது நண்பர்கள் அவமானப்படுத்தியதால், அல்லது சமூக ஊடகங்களில் தாக்கமான பின்னூட்டல்களை வழங்கியதால், அல்லது பொய்யான தகவல்களை பரப்பியதால் மாத்திரம் உள்ளம் பாதிக்கப்படுவதில்லை. சில பிள்ளைகள் தாம் இணைய வழியில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களுக்கான, லைக், பின்னூட்டல், ஷேரிங் என்பன கிடைக்காத போதும், தாம் நேசிக்கின்ற நண்பர்கள் தமது சமூக வலைத்தள உள்ளடக்கங்களை பார்வையிட தவறுகின்ற போதும் மனச்சோர்வடைகிறார்கள். தாம் பதிவிட்ட புகைப்படத்தை, அல்லது தாம் எழுதிய கவிதையை தனக்குப் பிடித்த வகுப்புத் தோழி அல்லது தோழர் பார்த்து பாராட்டிப் பேச மாட்டாரா என்ற ஏக்கம் ஏற்படுவது மிகவும் இயல்பானது. இணையவழியில் ஏதாவது ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம் சிறுவர்கள் எதிர்பார்ப்பது இத்தகைய விடயங்களை தான்.
(தொடரும்…)