எப்.அய்னா
ஒரு விடுமுறை தினத்தில், மேன் முறையீட்டு நீதிமன்ற கதவுகள் திறக்கப்பட்டு அவசரமாக ஒரு வழக்கு தொடர்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட மிக அரிதான சம்பவம் கடந்த நோன்புப் பெருநாள் தினத்தன்று நடந்தது. புத்தளம் மேல் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்கவை சிறை அறைகளுக்குள் இருந்து மீட்க நடந்த போராட்டமே அது. இந்த போராட்டத்தின் ஆரம்ப புள்ளி அல்லது அச்சாணி ஒரு துணிச்சல் மிக்க சட்டத்தரணியின் நீதிக்கான போராட்டமாகும். புத்தளம் நீதிமன்றில் அத்தனை சட்டத்தரணிகளும் கை விரிக்க துணிச்சலாக தனது சக தோழிக்காக நீதி கோரி போராடிய சட்டத்தரணி நதிஹா அப்பாஸ் தொடர்பில் இன்று நாடே பேசுகிறது. அவரது அந்த போராட்டமே இறுதியில் விடுமுறை தினத்திலும் மேன் முறையீட்டு நீதிமன்ற கதவுகளை திறக்கச் செய்தது.
உண்மையில் இந்த விவகாரம் என்ன என்பதை பலரும் அறியாமல் இருக்கலாம். ஆம் கடந்த மார்ச் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் ஒரு பிணை மனு விசாரணைக்கு வருகிறது.
ஆணமடுவ நீதிவான் நீதிமன்றில் உள்ள, ஐஸ் போதைப் பொருள் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவருக்கு பிணை பெறுவதற்கான வழக்கு அது. அதில் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்க. அவரது வாதங்களை தொடர்ந்து சந்தேக நபருக்கு பிணையும் கிடைக்கிறது. ஆனால் சம்பவம் அதுவல்ல.
மாற்றமாக, பிணைக் கோரி வாதிட்ட சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்க, வழக்குக்காக நீதிமன்றுக்குள் உள் நுழையும் போது தலை வணங்கவில்லை, சமர்ப்பணம் செய்யும்போது நீதிபதியை விழிக்காமல் வேண்டுமென்றே பொதுப்படையாக நீதிமன்றை விழித்து சமர்ப்பணம் செய்ததன் ஊடாக நீதிமன்றை அவமதித்ததாக ஒரு குற்றச்சாட்டு நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொடவினால் முன் வைக்கப்படுகிறது.
இது தொடர்பில் நீதிமன்ற அறையில் தடுத்து வைக்கப்படும் குறித்த சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்கவுக்கு பின்னர் இரு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையும், நீதிமன்ற பதிவாளர் ஊடாக தாக்கல் செய்யப்படுகின்றது. இது தான் அன்று நடந்த சம்பவம்.
உண்மையில் புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட, இதற்கு முன்னர் சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்கவுக்கு எதிராக பிறிதொரு வழக்கில் பொய்யான விடயங்களை முன் வைத்ததாக உயர் நீதிமன்றுக்கு முறையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறான ஒரு பின்னணி இருக்கையிலேயே, கடந்த மார்ச் 28 ஆம் திகதி குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இதன்போது இந்த விடயம், புத்தளம் மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நதிஹா அப்பாஸுக்கு கேள்விப்பட்டுள்ளது. உடனடியாக மேல் நீதிமன்ற அறைக்கு சென்று அங்கு சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்கவை சந்தித்துள்ள சட்டத்தரணி நதிஹா, நடந்தவைகளை வினவியுள்ளார். இதன்போது தனக்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகி பிணை கோருமாரு சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்க தனது சக தோழியான சட்டத்தரணி நதிஹாவிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் உடனடியாக சட்டத்தரணி நதிஹா, புத்தளம் சட்டத்தரணிகள் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ள நிலையில், அப்போது சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்க சார்பில் ஆஜராக அவர்கள் எவரும் முன் வரவில்லை. மாற்றமாக நதிஹாவுக்கு தனிப்பட்ட ரீதியில் ஆஜராவதென்றால் ஆஜராகுமாறு மட்டும் கூறியுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே சட்டத்தரணி நதிஹா தனியாக தனது சக தோழி சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்கவுக்காக புத்தளம் மேல் நீதிமன்றில் ஆஜராகி, பிணை விண்ணப்பம் செய்துள்ளார். அவரது பிணை விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டுள்ள நீதிபதி, பிணை அளித்துள்ளார்.
ஆனால் அவர் அளித்த நிபந்தனைகள் தான் அங்கு சிக்கலானவை. அவர் அளித்த பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய போதுமான கால அவகாசம் அப்போது இருக்கவில்லை. இரு சரீரப் பிணையாளர்களும் புத்தளத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன் சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்கவின் சொத்து மதிப்பீடு அறிக்கை சமர்ப்பிக்கப்படல் வேண்டும் போன்ற நிபந்தனைகளை உடனடியாக பூர்த்தி செய்வது சாத்தியமில்லாமல் போயுள்ளது.
எனினும் பிணை நிபந்தனைகளை இலகுவாக்குமாறும் அல்லது அதனை பூர்த்தி செய்ய பிறிதொரு தினத்தை வழங்குமாறும் சட்டத்தரணி நதிஹா மேல் நீதிமன்றில் விண்ணப்பம் செய்துள்ள போதும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமையினால் பின்னர் அன்றைய தினம் சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்க வாரியபொல சிறையில் விளக்கமறியல் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த விடயத்தை உடனடியாகவே அன்றைய தினம் இரவு, சட்டத்தரணி நதிஹா அறிக்கையாக தயாரித்து நடந்தவைகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். இந்த அறிக்கை பகிரங்கமானதும், சட்டத்தரணிகள் பலரும் இது தொடர்பில் பேச ஆரம்பித்தனர்.
இதன் பிரதிபலன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய உடனடியாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜி.ஜி. அருள் பிரகாசம் ஊடாக மேன் முறையீட்டு நீதிமன்றில், புத்தளம் மேல் நீதிமன்றின் நடவடிக்கையை சவாலுக்கு உட்படுத்தி சி.ஏ. ரிட் 270/2025 எனும் எழுத்தாணை மனுவை தாக்கல் செய்தார். புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட, புத்தளம் மேல் நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் இம்மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். நீதியை நிலை நாட்டுவதில், நீதிபதிகளுக்கும் சட்டத்தரணிகளுக்கும் இடையே இருக்க வேண்டிய சட்ட ரீதியிலான அன்னியோன்ய தொடர்பு, புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதியின், சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்கவை விளக்கமறியலில் வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை ஊடாக சீர்குலையலாம் எனும் அடிப்படையில் இந்த விவகாரத்தில் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தலையீடு செய்திருந்தார்.
எவ்வாறாயினும் சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்க விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் சட்டத்தரணி நதிஹா அப்பாஸ் முன்னெடுத்த நடவடிக்கை மற்றும் அவர் வழங்கிய தகவல்களை அடிப்படையாக கொண்டே இந்த ரிட் மனு சாத்தியமானது. மார்ச் 28 வெள்ளிக்கிழமை சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்க விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், அடுத்த இரு நாட்கள் வார இறுதி விடுமுறை என்பதால் நீதிமன்றங்கள் விடுமுறையில் இருக்கும். மறுநாள் திங்கட் கிழமையும் நோன்புப் பெருநாள் விடுமுறைக்காக பொது விடுமுறை எனும் அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மூடியிருக்கும்.
இவ்வாறான நிலையில் சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்க தொடர்ந்து விளக்கமறியலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், மார்ச் 31 திங்களன்று விடுமுறை தினத்தில் இந்த ரிட் மனுவை அவசர மனுவாக கருதி பரிசீலிக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேன் முறையீட்டு நீதிமன்றைக் கோரியது.
இதனை மேன் முறையீட்டு நீதிமன்ற பதில் தலைமை நீதிபதி மொஹம்மட் லபார் தாஹிர் ஏற்றுக்கொண்டு இது குறித்து சட்ட மா அதிபருக்கும் அறிவிக்கவே, சட்ட மா அதிபரும் தனது பிரதி நிதியை அனுப்ப சம்மதம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்தே, பெருநாள் தொழுகையை தொடர்ந்து தனது சக நீதிபதி பிரியந்த பெர்ணான்டோவுடன் பதில் தலைமை நீதிபதி மொஹம்மட் லபார் தாஹிர் சட்டத்தரணிகள் சங்க தலைவர் ரஜீவ் அமரசூரியவின் ரிட் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டார்.
இதன்போது மனுதாரருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் கீழ், ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், பைசர் முஸ்தபா, ஆகியோரும் சட்டத்தரணிகளான செனானி தயாரத்ன, அசந்த எஸ். பெர்ணான்டோ, திஷ்ய வேரகொட, நிரஞ்சன் அருள் பிரகாசம், கீர்த்தி திலகரத்ன, நிஷாதி விக்ரமசிங்க, ஜனனி அபேவிக்ரம, லக்மினி முதன்னாகய உள்ளிட்ட குழு, சட்டத்தரணி ஜி.ஜி. அருள்பிரகாசத்தின் ஆலோசனைக்கு அமைய ஆஜராகினர்.
பிரதிவாதிகளில் ஒருவரான சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நவோதி டி சொய்ஸாவுடன் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மனோஹர ஜயசிங்க ஆஜரானார்.
இந்த நிலையில் விடயங்களை ஆராய்ந்த மேன் முறையீட்டு நீதிமன்றம், உடனடியாக சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்கவை வாரியபொல சிறையில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.
அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் புத்தளம் மேல் நீதிமன்றில் உள்ள கோவையை மேன் முறையீட்டு நீதிமன்றின் பொறுப்பில் எடுக்கவும் உத்தரவிட்ட மேன் முறையீட்டு நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் ஏப்ரல் 28 வரை ஒத்தி வைத்தது.
உண்மையில், நீதிமன்ற அவமதிப்பு எனும் ரீதியில், சிறு பிள்ளைத்தனமான விடயங்கள் அல்லது அடிமைத்தனத்தை பிரஸ்தாபிக்கும் சில சம்பிரதாயங்களை கட்டிக்காப்பது தற்போது சமூகத்தின் மத்தியில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக நீதிமன்றுக்குள் நுழையும் போது தலை வணங்குவது, நீதிபதியை மை லோட் போன்ற வார்த்தை பிரயோகங்களால் விழிப்பது போன்றன மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டிய சம்பிரதாயங்கள் என்ற கருத்தும் வலுப்பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் இவ்வாறான கருத்தாடல் இந்தியாவில் ஏற்பட்டு, அதற்கான சில தீர்மானங்களும் அங்கு எடுக்கப்பட்டுள்ளன. எனினும் வழக்கமான நடைமுறைகளை மாற்றுவதில் அது எந்தளவு தூரம் தாக்கம் செலுத்தியது என்பது கேள்விக் குறியே.
எனினும் இதுசார்ந்த கருத்தாடல்கள் தற்போது இலங்கையின் சட்டத்துறைக்குள்ளும் பேசு பொருளாகியுள்ளதுடன், இலங்கையில் புதிதாக கொண்டுவரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் பயங்கர கோர முகம் மற்றும் அதில் கொண்டுவர வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் பேசுவதற்கான களத்தையும் சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்கவின் சம்பவம் அமைத்துக்கொடுத்துள்ளது.
எனவே தான் இவை அனைத்துக்கும் பின்னணியில் இருந்து துணிச்சலுடன் தனியாக போராடி ஆரம்ப புள்ளியை இட்ட சட்டத்தரணி நதிஹா அப்பாஸை சட்டத்தரணிகள் சமூகமும், பொது மக்களும் கொண்டாடுகின்றனர்.- Vidivelli