எப்.அய்னா
கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, கடந்த மார்ச் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 22 வயது இளைஞன் நாடு முழுதும் பேசு பொருளாக மாறியுள்ளான்.
இந்த கைது கருத்து, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், எதிர்ப்பு தெரிவிப்பதற்கு உள்ள சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கை என ஒரு தரப்பு கூறும் நிலையில், பொலிஸ் தரப்போ இது நியாயமான சந்தேகத்தின் எதிரொலி என சமாளிக்கின்றது.
காஸாவில் இடம்பெறும் அட்டூழியங்களுக்கு எதிராக, கொழும்பு, கொம்பனித் தெருவில் உள்ள சிடி சென்டர் எனும் பிரபல வர்த்தக கட்டிடத் தொகுதியின் ‘லொபி’ பகுதியில் உள்ள குப்பை போடும் இடத்தில் இரு ஸ்டிக்கர்களை ஒட்டியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமானது, குறித்த இளைஞன் ஏதோ ஒரு வகையில் பயங்கரவாதச் செயலைச் செய்யத் தயாராக இருந்திருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் இறுதியாக வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெறுப்பூட்டும் விடயங்களை பிரசாரம் செய்தமைக்காக, குறித்த ஸ்டிக்கரை ஒட்டிய சம்பவத்தை மையப்படுத்தி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் கடந்த 22 ஆம் திகதி 22 வயதான நிட்டம்புவ பொலிஸ் பிரிவினை வதிவிடமாக கொண்ட அவரைக் கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரித்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் புத்திக மனதுங்க கடந்த வாரம் விடிவெள்ளியிடம் தெரிவித்திருந்தார்.
இதன்போது, குறித்த இளைஞன் தொடர்பில் நடாத்தப்பட்ட வேறு விசாரணை ஒன்றின் பிரதிபலனாக அவர் ஸ்டிக்கர் ஒட்டியதன் பின்னர் கைது செய்யப்பட்டாரா என விடிவெள்ளி பொலிஸ் பேச்சாளரிடம் கேட்ட போது, அவ்வாறு எந்த விசாரணையும் இல்லை எனவும், ஸ்டிக்கர் ஒட்டியதன் ஊடாக வெறுப்புணர்வை தூண்டியமைக்காக கைது செய்யப்பட்டதாக பதிலளித்திருந்தார்.
ஆனால், அதே பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் புத்திக மனதுங்க பி.பி.சி. சிங்கள சேவைக்கு அளித்துள்ள தகவலில், ‘ஸ்டிக்கர்களை ஒட்டியதால் அவர் கைது செய்யப்பட்டதாக நினைக்க வேண்டாம். ஸ்டிக்கர் சம்பவத்தின் பின்னர் நாம் அவர் தொடர்பில் அவதானிப்புக்களை முன்னெடுத்தோம். அவர் அடிப்படைவாத சிந்தனைகளின் பால் மாற்றமடைந்துள்ளதை அவதானித்தோம். அதன் பின்னரே கைது செய்தோம். ஸ்டிக்கர் ஒட்டியதால் அவரை அவதானித்து பின்னர் கைது செய்தோம்.’ என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இளைஞர், கொம்பனித்தெரு சிட்டி சென்டர் வர்த்தக கட்டிடத் தொகுதியில் உள்ள கடை ஒன்றில் சேவையாற்றும் நிலையிலேயே, பணி நிமித்தம் சென்ற போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கட்டிடத் தொகுதியின் லொபி பகுதியில் உள்ள குப்பைகளை போடும் இடத்தில் ‘ f… இஸ்ரேல்’ எனும் வாசகம் தரித்த ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளதாகவும், காஸாவில் இடம்பெறும் அட்டூழியங்களுக்கு எதிராக அவர் அதனை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய, கொம்பனித்தெரு பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டு, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் முன்னேற்றத்தை பொலிஸ் தலைமையகம் கடந்த மார்ச் 30 ஆம் திகதி வெளிப்படுத்தியது. இதுவே கடந்த மார்ச் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இளைஞன் தொடர்பில் பொலிஸார் விடுத்த ஒரே உத்தியோகபூர்வ அறிக்கையாகும். பொலிஸ் ஊடகப் பிரிவூடாக விஷேட அறிக்கை ஒன்றினை விடுத்துள்ள பொலிஸ் தலைமையகம் ஸ்டிக்கர் ஒட்டியது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் இலங்கை பொலிஸார் விசாரணையைத் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளது.
இந்தச் செயலைச் செய்த இளைஞன் குறித்து விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவர் ஸ்டிக்கர் ஒட்டியதை தாண்டிச் சென்ற ஒரு வலுவான மனப்பான்மை கொண்ட நபர் என்பது தெரியவந்ததாகவும், விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட பிற முக்கிய தகவல்களின் அடிப்படையில், அவர் ஏதோ ஒரு வகையில் பயங்கரவாதச் செயலைச் செய்யக்கூடிய நபர் என்ற அனுமானத்தின் பிரகாரம் நியாயமான சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் நடவடிக்கைகள் குறித்து நீண்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கும் பொலிஸார் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களின் அடிப்படையில், குறித்த இளைஞன் இணையம் மற்றும் பிற முறைகளைப் பயன்படுத்துவதால் சில உளவியல் உந்துதல்களுக்கு ஆளானவர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் மேலும், அந்த மனநிலையின் அடிப்படையில் மத தீவிரவாதச் செயலைச் செய்வதற்கான அவரது உணர்திறன் குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபருக்குச் சொந்தமான கணினி வன்பொருள், தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் குறித்து தடயவியல் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், பி.பி.சி.யிடம் விடயங்களை வெளிப்படுத்தியிருந்த பொலிஸ் பேச்சாளர், “இந்த நபர் (கைது செய்யப்பட்ட இளைஞன்) உலமா சபைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் உலமா சபை உண்மையில் அவ்விளைஞனின் நிலைமை ஒரு சாதாரண முஸ்லிமின் நிலைமையை விட வித்தியாசமாக இருப்பதாகவும், அவருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது,” என குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இவ்வாறு ஒரு அவதானிப்பினை தாங்கள் வழங்கவில்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மறுத்துள்ளது.
உண்மையில் பி.பி.சி.யிடம் சொன்ன அந்த விடயத்தை ஏன் பொலிஸ் ஊடகப் பிரிவு 30 ஆம் திகதி வெளியிட்ட ஊடக அறிக்கையில் உள்ளடக்கவில்லை. குறித்த ஊடக அறிக்கை வெளியிட இரு நாட்களுக்கு முன்னர் ( 27 ஆவது நோன்பு) அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் மூன்று பிரதிநிதிகளை பொலிஸ் தலைமையகத்துக்கு அழைத்து சந்தித்த பொலிஸார், ஜம்இய்யதுல் உலமா சபை வழங்காத ஒரு நிலைப்பாட்டை, வழங்கியதாக தனது உத்தியோகபூர்வ அறிக்கையில் மறைத்துவிட்டு, ஊடகங்களிடம் பரப்புவதன் நோக்கம் என்ன என கேட்கத் தோன்றுகிறது.
உண்மையில் பொலிஸ் தலைமையகத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்ற ஜம் இய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள் பொலிஸாருக்கு எந்த நிலைப்பாட்டையும், கைது செய்யப்பட்ட இளைஞன் ருஷ்தி தொடர்பில் அறிவித்திருக்கவில்லை. எனினும் குறித்த இளைஞனுடன் கலந்துரையாட அந்த பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்து. அவ்வாறான நிலையில், இவ்வாறு ஒரு சந்திப்பை ஏற்படுத்திவிட்டு, பொலிஸார் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் மீது விடயங்களை சாட்டி, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான கைதை நியாயப்படுத்தவும், முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சமனிலை செய்யவும் எடுத்துள்ள செயற்பாட்டை ஏற்க முடியாது.
பொலிஸ் பேச்சாளரின் கருத்துப்படி, குறித்த இளைஞன் அடிப்படைவாதத்தின் பால் சென்ற பின்னரேயே கைது செய்யப்பட்டதாக வைத்துக்கொண்டால், அவரை அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை முன் கைது செய்யப்பட்டு 6 நாட்களின் பின்னர் முன்னிலைப்படுத்தியதன் நோக்கம் என்ன? சட்ட ரீதியாக ஒருவர் அடிப்படைவாதத்தில் அல்லது தீவிரவாத சிந்தனையில் இருக்கின்றார் என்பதை அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையால் தீர்மானிக்க முடியுமா?
உண்மையில் பொலிஸார் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினரை அழைத்து, இந்த ஸ்டிக்கர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கதைக்கச் செய்ததன் ஊடாக, வேறு ஏதோ ஒரு விடயத்தை எதிர்பார்த்துள்ளது. அதுவே பொலிஸ் பேச்சாளரின் பி.பி.சி. செய்திச் சேவைக்கு அளித்த கருத்துக்களில் பிரதிபலித்துள்ளது.
“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை, அது எங்கள் இலட்சியமோ அல்லது கொள்கையோ அல்ல. இருப்பினும், ஒரு புதிய சட்டம் உருவாக்கப்படும் வரை, தற்போதுள்ள சட்டங்களை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றும் வரை இது அவசியம்,” என்று இலங்கை பலஸ்தீன ஒற்றுமைக் குழுவின் உறுப்பினர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.
அதிகாரத்தைப் பெறுவதற்காக, தேசிய மக்கள் சக்தி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் இப்போது அவர்கள் தொடர்ச்சியாக அதனை பயன்படுத்தி வரும் நிலையில் மக்கள் அரசின் மீதான நம்பிக்கையை இழக்க ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் சமூக வலைத் தளங்களிலும், நேரடியாகவும் குறித்த இளைஞரின் கைதுக்கு எதிராக பலரும் எதிர்ப்பு வெளியிட ஆரம்பித்துள்ளனர். அரசியலமைப்பு ஊடாக வழங்கப்பட்டுள்ள கருத்து, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு வெளியிடுவதற்கான சுதந்திரம் பயங்கரவாத தடை சட்டம் கொண்டு நசுக்கப்படுவதாக குற்றம் சுமத்தி, ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், குறித்த இளைஞனின் கைது தொடர்பில் தவறான தகவல்கள் சமூக வலைத் தளங்களில் பரப்பப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர் ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு 6 மணி நேரம் விசாரணை செய்தது. இதன்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை பயங்கவாதி என கூறுவதற்கான சான்றுகள், பலஸ்தீனுக்கு ஏன் இலங்கையில் இருந்து ஆதரவளிக்கின்றீர்கள் போன்ற கேள்விகளை சி.சி.டி. அதிகாரிகள் தொடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் ஏறாவூரில், பலஸ்தீனுக்கு ஆதரவாக கவிதை எழுதிய ஒருவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
பேருவளை பகுதியில் பலஸ்தீனுக்கு ஆதரவான வீடியோ ஒன்றினை பகிர்ந்த ஒருவர் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு அவரது தொலைபேசி பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பல சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகும் நிலையில், தங்களை பலஸ்தீன் ஆதரவாளர்களாகவும் மனிதாபிமான காவலர்களாகவும் பலஸ்தீனுக்கு குரல் கொடுக்கும் பலஸ்தீனின் நண்பர்களாகவும் காட்டிக் கொள்ளும் அரசாங்கம், இரட்டை போக்கை கடைப் பிடிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. உலக அளவில் பலஸ்தீனுக்கான ஆதரவு அதிகரித்து செல்லும் நேரத்தில் இலங்கையின் அதன் தாக்கத்தை குறைக்க அல்லது இவ்வாறான கைதுகள் ஊடாக பயமுறுத்தி கட்டுப்படுத்த அரசுடன் இணைந்து அல்லது அரசாங்கத்தின் சக்திக்கு அப்பால்பட்டு மூன்றாம் தரப்பொன்று செயற்படுகின்றதா என்ற சந்தேகமும் நிலவுகின்றது.
இந்த நிலையில் இந்த கைது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை குறிப்பிடும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, குறித்த கைது தவறு எனில் அது தொடர்பில் உயர் நீதிமன்றை நாடி கைது செய்தவர்கள், தடுப்புக் காவல் உத்தரவில் வைத்திருந்தோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
அப்படியானால், இளைஞர் ருஷ்தியின் கைது சட்டத்துக்கு உட்பட்டதா சட்ட விரோதமானதா? அடக்குமுறையின் பிரதிபலனா என்பதை இனி நீதிமன்ற படியேறியே உறுதி செய்ய வேண்டும். அதையே அரசாங்கம் சொல்லாமல் சொல்லி இருக்கின்றது.- Vidivelli