ஆஷிகுல் ஹக்
என்.பி.பி அரசு, ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களை அண்மிக்கிறது. அதற்கிடையில் இந்த ஆட்சியோடு தொடர்பான பல்வேறு சிக்கல்களையும் பிரச்சினைகளையும் நாம் கண்டு வருகிறோம். அரசு அண்மித்து வரும் தேர்தலில் தோல்வியடையப் போகிறது. என்.பி.பி தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை போன்ற கருத்துக்கள் படிப்படியாக எழும்பத் தொடங்கி உள்ளன. அத்தோடு இந்த அரசு சிறுபான்மைக்குச் சாதகமான அரசுமல்ல. அந்த வகையில் அது பழைய அரசுகள் போன்றதுதான் என்ற குரல்களும் வலுப்பட்டு எழுந்து வருகின்றன. இந்நிலையில் சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாம் இந் நிலைமைகளை எவ்வாறு நோக்க வேண்டும் என்பது பற்றிய சில அபிப்பிராயங்களே இங்கு தரப்படுகின்றன.
என்.பி.பி அளித்த தேர்தல் வாக்குறுதிகளை அது நிறைவேற்றியுள்ளமை, இல்லாமை என்பவற்றுக்கு அப்பால் இந்த அரசிடம் ஒரு நேர்மையான போக்கு காணப்படுகிறதா என்பதுவே முதன்மையானதாகும். தேர்தல் பிரசார வேகத்தில் நிதானமின்றிப் பேசுவது எங்கும் அவதானிக்கத் தக்க உண்மையாகும். இந்நிலையில் அவற்றை மாத்திரம் வைத்து ஓர் அரசைக் கணிப்பீடு செய்வது மிகப் பெரிய தவறாகும். இங்கு நாம் அவதானிக்க வேண்டிய விடயங்களை கீழ்வருமாறு குறிப்பிடலாம்:
ஜனாதிபதியும் அவருக்கு நெருக்கமாக உள்ள என்.பி.பியின் அல்லது ஜே.வி.பியின் தலைவர்கள் இலஞ்சம், ஊழல் என்பவற்றை விட்டுத் தூரமானவர்கள். இனத் தீவிர நிலை இல்லாதவர்கள், இன உணர்வைத் தூண்டி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலைப்பாடு அவர்களிடம் இல்லை. அவர்களிடம் இனப்பற்று கிடையாது. பௌத்த மதத்திற்கு அவர்கள் முன்னுரிமை கொடுக்கவில்லை என்று நான் கூறவில்லை. இன உணர்வுத் தீவிரம், அதனைத் தூண்டி ஆட்சி செய்யும் போக்கு அவர்களிடம் இல்லை என்றுதான் கூறுகிறேன். இதுவே எமக்கும் போதுமானதாகும். இதற்கு மேல் எதிர்பார்ப்பது இந் நாட்டின் யதார்த்தம், வரலாறு அறியாத போக்காகும்.
ஆட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றுவதில் அவர்கள் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். எனவே அதனால் தளம்பலும் ஓர் அதிர்வும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். பல ராஜினாமாக்கள், இடம் மாறல்கள், சில ஆர்ப்பாட்டங்கள் இந்நிலையில் தவிர்க்க முடியாததாகும்.
பாதாள உலகத்தோடு மோதியமை இன்னொரு முக்கிய உண்மையாகும். எவ்வளவோ அபாயங்கள் காணப்பட்டும் அவர்கள் அதனைச் செய்கிறார்கள்.
பொருளாதார ரீதியாகக் காணப்பட்ட பல சிக்கல்களை அவிழ்ப்பதில் தீவிரமாக அவர்கள் ஈடுபடுகிறார்கள்.
இவற்றுக்கு ஆதாரங்கள் கூறி நான் விளக்கவில்லை. அது அரசியல் நிலவரத்தை அவதானிக்கும் நேர்மையான யாரும் ஏற்றுக் கொள்ளும் உண்மையாகும்.
இந்த அரசு ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற மனநிலையில் ஆட்சிக்கு வந்தது. அந்த வகையில் பல அரசியல் சீர்திருத்தங்களை பாராளுமன்றத்தில் செய்தது. பாராளுமன்ற அங்கத்தவர்களது அரசியல் வாழ்வை மாற்றி அமைக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கிறது. ஊழல், களவு, சமூக செல்வங்களை அநியாயமாகப் பயன்படுத்தியமை போன்றவற்றிற்கு எதிராக வேலை செய்கிறது.
இந்தச் செயற்பாடுகள் நாட்டில் ஒரு கடுமையான அதிர்வை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகும். அந்த அதிர்வையே இன்று நாம் எங்கும் காண்கிறோம்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் மாற்றங்களை ஏற்படுத்தல் என்பதற்குத் தடையாக உள்ள காரணிகளை இப்போது அவதானிப்போம்.
I. சர்வதேச சூழ்நிலை
சர்வதேச, பிராந்திய வல்லரசுகளை முழுமையாகப் புறக்கணித்து இலங்கை போன்ற ஒரு சிறிய நாடு எதுவும் செய்ய முடியாது. மேற்குறிப்பிட்ட எல்லா சிக்கல்களுக்கு பின்னாலும் சர்வதேச அழுத்தங்கள் உள்ளன என்பது மிகச் தெளிவான உண்மையாகும்.
II. சீர்கேடுகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தமை
இந்நிலையில் ஆழவேரூன்றி விட்டிருப்பதால் அவற்றை இலகுவில், சிறிய ஒரு காலப் பகுதியில் களைவது சாத்தியமில்லை.
III. பெரும்பான்மை சமூக மனநிலை
பெரும்பின்மையினர் 30 ஆண்டு கால யுத்தத்தைக் கண்டார்கள். நாடு பிரிந்துவிடுமோ என்று பயந்தார்கள். அவர்களுக்கு எப்போதும் சிறுபான்மையினர் பற்றிய பயம் உள்ளது. சிங்கள இனமும் பௌத்தமும் இந்த நாட்டில் முழுமையான ஆதிக்க சக்தியாக இருக்க வேண்டும் என்ற மனநிலை அவர்களிடம் ஆழமாக உள்ளது.
30 ஆண்டு கால யுத்தம், சிங்கள முஸ்லிம் இனக் கலவரங்கள் மிக அதிகமாக நிகழ்ந்து வந்தமை என்பவை எல்லாம் இதனையே காட்டுகிறது.
இந்நிலையில் எந்த ஒரு அரசும் பெரும்பான்மையினர் இந்த மனநிலையை மதிக்காது, அதற்கு ஓரளவாவது இடம் கொடுக்காது செயற்படுவது சாத்தியமில்லை.
IV. தமது அரசியல் இருப்புக்காக நேர்மை, உண்மை பற்றிய எந்த எண்ணமுமின்றி எதனைச் செய்யவும் துணியும் எதிர்க்கட்சிகள்.
அரசியலில் பல மூத்த தலைவர்களும் அவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமது அரசியல் இருப்புக்கு ஒரு பலமான அச்சுறுத்தல் உள்ளது என உணரத் தலைப்பட்டுள்ளமை இதற்குப் பிரதானமான காரணமாகும்.
இவை அனைத்தையும் கவனத்திற் கொண்டுதான் முஸ்லிம்கள் தமது அரசியல் நிலைப்பாட்டை வகுத்துக் கொள்ள வேண்டும். மேலே விளக்கப்பட்ட உண்மைகளை நோக்குவதோடு முஸ்லிம்கள் கீழ்வரும் விடயங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே ஆட்சி செய்த கட்சிகள் இனத்துவேஷத்தோடு இயங்கியமையையும் அதனால் உருவான இனக் கலவரங்களையும் முஸ்லிம் சமூகம் பல்வேறு தாக்குதல்களுக்கு உட்பட்டமையையும் மறந்து மீண்டும் அதே கட்சிகளின் பின்னால் செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
என்.பி.பி இனி இந் நாட்டின் பலமான அரசியற் கட்சி. ஆட்சியிலோ அல்லது பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகவோ அவர்கள் இருக்கப் போகிறார்கள். இதுவரை முஸ்லிம்கள் ஜே.வி.பியோடு நெருங்கி உறவாடவில்லை. அவர்களின் உள்ளே இருந்து உழைக்கவில்லை. எனவேதான் அக்கட்சியின் உள்ளே முதிர்ந்த தலைவர்கள் யாரும் எமக்கு உருவாகவில்லை. இந் நிலையை மாற்றும் வகையில் இனி முஸ்லிம்கள் இக்கட்சியுடன் பயணிப்பது மிகவும் அவசியமானதாகும்.
முன்னாள் ஆட்சி செய்த கட்சிகள் முஸ்லிம்கள் உள்ளே காணப்படும் பிளவுகளை இனம் கண்டு அவற்றின் ஊடாக முஸ்லிம்களைப் பிரித்து அவர்களினுள்ளே பல சிக்கல்களை உருவாக்கி விட்டார்கள். அக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அதனையே செய்யப் போகிறது என்பது உணரப்பட வேண்டும்.
சர்வதேச முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளோடு இலங்கை முஸ்லிம்கள் ஈடுபாடு காட்டுவது இயல்பானதாகும். ஆனால் சிறுபான்மையாக இருந்து அந்த ஈடுபாட்டை எவ்வாறு நாம் காட்டிக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய ஒரு தெளிவுக்கு நாம் வர வேண்டும். சர்வதேச முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளின் போது நாம் தெளிவாக அடுத்த சகோதர சமூகங்களின் கணிசமான பங்களிப்பு இன்றி இயங்குவது பொருத்தமற்றதாகும் என்பது அவற்றில் ஒன்றாகும்.
இந்த விடயங்கள் அனைத்தையும் கவனத்திற் கொண்டு முஸ்லிம் சமூகம் தனது அரசியல் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என வேண்டுகிறோம்.- Vidivelli