அஷ்-ஷைக் டீ.ஹைதர் அலி
(அல்-ஹலீமி)
கடந்த ஒரு தசாப்த காலமாக காலத்திற்குக் காலம் ஏதோ ஒரு காரணம் சொல்லப்பட்டு முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். அந்தத் தொடரில் தான் இந்தப் படு மோசமான ஜனாஸா எரிப்புச் செயலும் அரங்கேற்றப்பட்டது.
இலங்கையில் COVID-19 நோய்த் தொற்று காலத்தில், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கட்டாயமாக தகனம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கை மிகுந்த சர்ச்சைகளையும், மன உளைச்சலையும் முஸ்லிம்களுக்கு உருவாக்கியது. இந்த நடவடிக்கை 2020 முதல் 2021 வரை சுமார் 333 நாட்கள் வரை நீடித்தது. இது இலங்கை முஸ் லிம்கள் மட்டுமல்லாமல், முஸ்லிம் அல்லாதவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும், சர்வதேச சமூகமும் கடுமையாக எதிர்த்த ஒரு கொடூரமான நடைமுறையாக இருந்தது.
கட்டாய தகனம் எப்போது,
எப்படி ஆரம்பமானது?
2020 மார்ச் மாதம், COVID-19 தொற்று நோய் இலங்கையில் பரவத் தொடங்கியபோது, உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் மருத்துவ நிபுணர்கள், உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்றும், தகனம் செய்ய அவசியமில்லை என்றும் தெரிவித்தனர். எனினும், இலங்கை அரசு, விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களின்றி, அனைத்து COVID-19 மரணங்களையும் கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றியது. இதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் முதலாக ஒரு முஸ்லிமின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இது உலக முஸ்லிம்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் மரணித்தவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்ற மத நம்பிக்கையுடன் இருப்பவர்கள்.
ஆனால், இலங்கை அரசு மண்ணில் அடக்கம் செய்யும் நடைமுறையால், நிலத்தடி நீர் மாசுபடும் என்றும், அதனால் மீண்டும் கிருமிகள் பரவலாம் என்றும் தவறான காரணத்தைக் கூறி, கட்டாய தகனத்தை நடைமுறைப்படுத்தியது. இதில் சுமார் 13,183 உடல்கள் தகனம் செய்யப்பட்டாத இன்றைய சுகாதார மற்றும் மக்கள் ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் கடந்த தனது பாராளுமன்ற உரையில் தெரிவித்தார். இவைகளில் சுமார் 300 உட்பட்ட உடல்கள் முஸ்லிம்களுடையது என நம்பப்படுகிறது. அதிலும் மிகவும் மனவேதனை தரும் சம்பவமாக, 20 நாட்கள் மட்டுமே நிரம்பிய ஷைக் என்ற குழந்தையின் உடல் 2020 டிசம்பர் மாதத்தில் கட்டாய தகனம் செய்யப்பட்டது. குழந்தையின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், அதிகாரிகள் எந்தவித அனுமதியும் இன்றி, குடும்பத்தினரின் விருப்பத்திற்கு விரோதமாக தகனம் செய்தனர். இது முஸ்லிம் சமூகம் மட்டுமின்றி சகல சமூகங்களையும் கவலைக்குட்படுத்திய சம்பவமாக மாறியது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்:
உலகம் முழுவதும் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. முஸ்லிம் சமூகமும் மனித உரிமை அமைப்புகளும், தமது கடுமையான எதிர்ப்புக்களைத் தெரிவித்தன. மரணித்த உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று குடும்பத்தினர், மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் தொடர்ந்தும் கோரிக்கை வைத்தனர். கொழும்பு, கிழக்கு மாகாணம் மற்றும் பிற பகுதிகளில் பல அமைதி ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்தன. உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சர்வதேச அழுத்தங்கள்:
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்செலெட் (UN High Commissioner for Human Rights Michelle Bachelet) உட்பட பலரும் இலங்கை அரசை இந்த முடிவை மாற்ற அழுத்தம் கொடுத்தனர். அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International), ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch), மற்றும் OIC போன்ற சர்வதேச அமைப்புகள், இலங்கை அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த கொள்கையை கண்டித்தன.
சர்வதேச வழக்கறிஞர் சங்கத்தின் மனித உரிமை நிறுவனம்(IBAHRI –- International Bar Association’s Human Rights Institute) இலங்கையின் கட்டாய தகனக் கொள்கை மனித உரிமை சட்டங்களை மீறுவதாகவும், அரசாங்கம் இதனை மாற்ற வேண்டும் என்றும் கடுமையாக கண்டித்தது.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்துகன், மற்றும் மாலைதீவு அரசு இலங்கை அரசை இக்கொள்கையை விடும் படி உறுதியாக வேண்டிக் கொண்டன. மேலும் மாலைதீவு அரசு, COVID-19 ஆல் இறந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்களை தங்களது நாட்டில் அடக்கம் செய்யத் தயாராக உள்ளது என்றும் அறிவித்தது.
2021ல் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி உதவி வழங்கும் போது, முஸ்லிம்களின் ஜனாஸா அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதனுடன், பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த அழுத்தங்களால் அரசாங்கம் தனது முடிவை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது. அது போலவே சர்வதேச ஊடகங்களும் தொடர்ச்சியாக இதனைக் கண்டித்து வந்தன.
இலங்கை அரசின் முடிவில் மாற்றம்:
பல மாதங்களாக மக்கள் போராடிய பிறகு, 2021 மார்ச் மாதம் இலங்கை அரசு முஸ்லிம்களுக்கு ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியது. இதன் மூலம், ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வந்த மத அடக்க உரிமை மீறல் முடிவுக்கு வந்தது. இம்முடிவுக்கு வந்த பின் தகனம் செய்யப்படாத உடல்கள் ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டன. இங்கு மொத்தமாக 3634 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 2986 முஸ்லிம்களும் 269 இந்துக்களும் 293 பௌத்தர்களும் 86 கிறிஸ்தவர்களும் அடங்குகின்றனர். அப்படியானால் தகனம் செய்யப்படக் கூடாது என முஸ்லிம்கள் மட்டுமல்ல சகல இன மக்களும் விரும்பியுள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
இலங்கையில் COVID-19 கட்டாய தகனம், மனித உரிமை மீறல் மற்றும் மத உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு முக்கிய சம்பவமாக கருதப்படுகிறது. இது இலங்கையின் மத நல்லிணக்கத்திற்கும், சமூக நீதி மற்றும் மனித உரிமை காக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்திற்கும் பாடமாக மாறியது. முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், நீதியை விரும்பும் பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் பலரும் எதிர்த்த ஒரு விடயமாக மாறியது.
இறுதியில் இந்தக் கட்டாயத் தகனம் ஒரு பாரிய குற்றமாக கடந்த அரசு ஏற்றுக் கொண்டு மன்னிப்பும் கோரியது. அது போலவே இந்த அரசாங்கமும் இது பாரிய தவறு என்றும் அமைச்சரவைப் பேச்சில் குறிப்பிட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அரசாங்கம் இந்த அநியாயத்திற்கான நீதியை முஸ்லிம்களுக்குப் பெற்றுத் தர வேண்டும். அன்பான ஒருவருக்கு இறுதியாக செய்ய முடியுமான ஒரேயொரு கைம்மாறு இறுதிக் கிரியைகளும், நல்லடக்கமும் தான்.
அந்த உரிமையும் அரசியல் பழிவாங்கலின் மூலம் பறிக்கப்படுமானால் எவ்வளவு பெரிய அநியாயமாகும் என்பதை இலங்கை மக்கள் என்ற வகையில் நாம் வெட்கித்து தலைகுனிய வேண்டும். இந்த அழகான தாய் நாட்டில் பல்லின மக்களும் ஒரு தாய் பிள்ளைகள் போல ஒன்றாய் ஒற்றுமையாய் வாழும் பொழுது இப்படியான அரசியல் பழிவாங்கல்கள் இனங்களுக்கு மத்தியில் முறுகலையும், பிளவுகளையும் ஏற்படுத்தும். எனவே இந்நாட்டில் யாருக்கு என்ன அநீதி நடந்தாலும் ஒரே வரிசையில் நின்று மனித நேயத்திற்காக சகல இனத்தவரும் ஒன்றிணைந்து போராடுவோம்.
இனி ஒருபோதும் இப்படியான மத, இன ரீதியான அரசியல் பழிவாங்கல்கள் இந்நட்டில் நடைபெறக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
மேலும் தகனம் செய்யப்பட்டு ஐந்தாண்டுகள் பூர்த்தியாகும் இந்த துக்கமான வேளையில் தகனம் செய்யப்பட்டவர்கள் மற்றும் அடக்கம் செய்யப்பட்டவர்கள் யாவரையும் ஞாபகம் செய்து அவர்களின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனையும் புரிவோம்.- Vidivelli