உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ஏப்ரல் 21 க்கு முன் அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?
சம்பிக கேள்வி; உண்மைகளை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்து
(இரா.ஹஷான்)
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தை தேர்தல் காலத்தில் வாக்கு வங்கிக்காக பயன்படுத்திக்கொள்வது முறையற்றது. அசாத் மௌலானா 21ஆம் திகதிக்கு முன்னர் நாட்டுக்கு வருவாரா, ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி வெளிப்படுத்தும் உண்மையை நாங்களும் எதிர்பார்த்துள்ளோம் என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியல் கட்டமைப்பின் மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த வெறுப்பினை முன்னிலைப்படுத்தியே தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் முன்னெடுத்தது. தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு சிறந்த கொள்கைகளை முன்வைக்கவில்லை. அதன் விளைவை இன்று அரசாங்கம் எதிர்கொள்கிறது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரை ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் 6 வருடகாலமாக உண்மையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே உண்மைகளை பகிரங்கப்படுத்த வேண்டும்.
தேர்தல் காலத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தை வாக்கு வங்கிக்காக பயன்படுத்திக் கொள்வது முறையற்றது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் செயலாளரான அசாத் மௌலானா குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் குறித்து தனியார் ஊடகத்துக்கு பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார். இவரை நாட்டுக்கு அழைத்து வருவதாகவும் அரசாங்கத் தரப்பில் குறிப்பிடப்பட்டது. ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வருமா என்பது தெரியவில்லை.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான இரகசிய தகவல் அப்போதைய அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியதாகவே அறிவிக்கப்பட்டாக ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது முட்டாள் தனமானாது. இந்த குண்டுத்தாக்குதல் சம்பவம் தான் 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை தீர்மானித்தது.
குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன். உண்மையை எதிர்பார்த்துள்ள மக்களின் எதிர்பார்ப்பை அரசியலாக்க கூடாது என்றார்.- Vidivelli